_Abdul_Kalam

டில்லி:  

முன்னாள் குடியரசு தலைவரான அப்துல் கலாம் பிறந்தாளான இன்று, ஐதராபாத்தில் உள்ள ஏவுகணை வளாகத்துக்கு அவரது பெயர் சூட்டப்படுகிறது.

‘இந்தியாவின் ஏவுகணை நாயகன்’ என்று போற்றப்படும் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் கடந்த ஜூலை மாதம் 27–ந் தேதி மறைந்தார்.  இன்று (அக்டோபர் 15–ந் தேதி) அவரது  84–வது பிறந்த நாளாகும்.

இது, அப்துல் கலாம் இறந்த பிறகு வரும் இந்த முதல் பிறந்த நாளை நாடு முழுதும் அரசும், பல்வேறு அமைப்புகளும் கொண்டாடுகிறார்கள்.  இந்த நாள் இளைஞர்கள் எழுச்சி தினமாக கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.

அதே போல் மத்திய அரசும் கலாமின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தது. டில்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவன தலைமையகத்தில் உள்ள அப்துல் கலாமின் மார்பளவு சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

ஐதராபாத்தில்  ஏவுகணை வளாகத்துக்கு காலம் பெயர் இன்று சூட்டப்படுகிறது. இந்த வளாகத்தில் அமைந்துள்ள ராணுவ ஆராய்ச்சி மையத்தில்தான் அப்துல் கலாம் சுமார் 20 ஆண்டுகள் பணியாற்றினார்.  இங்கு நடைபெறும் விழாவில். இதில் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் கலந்து கொள்கிறார்.

கலாமின் சொந்த ஊரான ராமேசுவரத்தில் இருந்து சென்னை வரை இளைஞர் ஜோதி தொடர் ஓட்டமும் நடத்தப்படுகிறது. இந்த தொடர் ஓட்டத்தை ராமேசுவரத்தில் இன்று கலாமின் அண்ணன் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் தொடங்கி வைத்தார். .

அப்துல் கலாமின் உருவம் பொறித்த நினைவு தபால் தலை இன்று சென்னையிலும் ராமேசுவரத்திலும் ஒரே நேரத்தில் வெளியிடப்படுகிறது. சென்னையில் தமிழ்நாடு வட்ட தபால் துறை தலைவர் சார்லஸ் லோபோ தபால் தலையை வெளியிடுகிறார்.

ஏற்கெனவே டில்லியில் உள்ள அவுரங்கசீப் சாலைக்கு அப்துல் கலாம் சாலை என்று பெயர் மாற்றப்பட்டது. இதை  எதிர்த்து ஒரு அமைப்பு டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த மனுவை நேற்று நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். ஆகவே  அந்த சாலைக்கு அப்துல்கலாம் சாலை என்பதே இனி நீடிக்கும்.

இவ்விதம் நாடு முழுதும் பல்வேறு வகையில் அப்துல்கலாம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.