டில்லி

பிநந்தன் புகைப்படத்தை  முகநூலில் பதிந்த டில்லி மாநில பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஒம்பிரகாஷ் சர்மாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

எல்லை தாண்டி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் விமானப்படை விமானத்தை விரட்டி சென்று வீழ்த்திய விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானியரால் சிறைபிடிக்கப்பட்டார்.   அதன் பிறகு உலக நாடுகள் அழுத்தத்தினால் அவர் விடுவிக்கப்பட்டார்.

பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் அவர் புகைப்படத்தை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன.    இதை ஒட்டி தேர்தல் ஆணையம் அவ்வாறு  பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்தது.

டில்லி சட்டப்பேரவை பாஜக உறுப்பினர் ஓம்பிரகாஷ் சர்மா மார்ச் மாதம் ஒன்றாம் தேதி தனது முகநூல் பக்கத்தில் ஒரு போஸ்டரை பதிந்தார்.  அதில் அவர் தன்னுடைய, அமித் ஷா மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் அபிநந்தன் புகைப்படமும் வைத்திருந்தார்.

அத்துடன் அந்த போஸ்டரில், “பாகிஸ்தான் வீழ்த்தப்பட்டது.  நமது வீர ஜவான் திரும்பி விட்டார்.   இவ்வாறு அபிநந்தன் விரவில் திரும்பியது மோடிஜியின் மாபெரும் வெற்றி” எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.   இது தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதை ஒட்டி தேர்தல் ஆணையம் மாவட்ட நீதிபதி ஷாதாரா மூலம் நோட்டிஸ் ஒன்றை அனுப்பி உள்ளது.   அந்த நோட்டிசில், “அபிநந்தன் புகைப்படத்தை பதிந்தது தேர்தல் சட்டத்துக்கு விரோதமானது.   உடனடியாக அந்த பதிவை நீக்க வேண்டும்.

அத்துடன் இந்த பதிவு குறித்து ஆணையத்துக்கு வியாழன் (அதாவது இன்று) காலை 11 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.   அவர் விளக்கம் சரியாக இல்லை என்றால் உங்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.