புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளதால், அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. இதையடுத்து, முதல்வர் நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அமைச்சரவை தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் கந்தசாமி வெளியிட்டுள்ள காணொளியில், “பிரதமர் நரேந்திர மோடியும், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியும் தொடர்ந்து நான்கரை ஆண்டுகளாக காங்கிரஸ் அரசிற்கு தொல்லை கொடுத்து வருகின்றனர். ஆட்சியை மாற்றுவதற்கும், கலைப்பதற்கும் முயற்சி எடுக்கின்றனர். இன்னும் இரண்டு வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நிலையில், பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை ராஜிநாமா செய்ய வைத்து, ஆட்சியை கலைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். எனவே, முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவையை கலைத்து மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வேலைகளை செய்யவிருக்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தான் ஆகிய இருவரும் தங்களது பதவியை ராஜிநாமா செய்து, கடந்த ஜனவரி மாதம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். இவர்களைத் தொடர்ந்து புதுச்சேரி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், அவரது அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக ராஜிநாமா கடிதத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதையடுத்து, இன்று மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏவான ஜான் குமாரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 10ஆக குறைந்துள்ளது.
புதுச்சேரியை ஆட்சி செய்யக்கூடிய அரசின் பெரும்பான்மை 16ஆக இருக்கும் நிலையில், தற்போது காங்கிரஸ், திமுக மற்றும் சுயேட்சை ஆதரவு உட்பட 14 தொகுதிகளைக் காங்கிரஸ் கூட்டணி அரசு கைவசம் வைத்துள்ளது. இதனால் மாநில அரசு பெரும்பான்மை இழந்தது. இதனால், நாராயணசாமி தலைமையிலான ஆட்சி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், மாநில அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆட்சி கவிழும் பட்சத்தில் துணை ஆளுநரை முதல்வர் சந்தித்து ராஜிநாமா கடிதம் கொடுக்க வாய்ப்பு உள்ளதாகவும், இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால், அடுத்தகட்ட மாற்று ஏற்பாடு செய்யும் வரை இந்த பதவியை தொடரலாம் என ஆளுநர் கூற வாய்ப்பு உள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[youtube-feed feed=1]