தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படம் வெளியாகும் போது, பேனர், போஸ்டர்கள் வைப்பது ரசிகர்களின் வழக்கம். ஆனால் மதுரையில் அஜித் ரசிகர்கள் பெயரில் ஒட்டியிருக்கும் ஒரு போஸ்டர், அஜீத்தையே டென்சன் ஆக்கியிருக்கிறது.
இந்த படத்துக்கான டிக்கெட், விதிகளை மீறி ரூ500க்கு விற்கப்படுவதாக மதுரையில் அவரது ரசிகர்கள் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதோடு அந்த போஸ்டரில், முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை போட்டு, “முதல்வருக்கு வேண்டுகோள், அஜித்தின் 56-வது படமான வேதாளம் படத்தின் ஒரு டிக்கெட் ரூ.500-க்கு விற்கப்படுகிறது. வல்லமை வாய்ந்த தாங்கள், வேதாளம் படத்தின் டிக்கெட் நியாயமான விலையில் கிடைக்க ஆட்சியருக்கும், காவல் துறைக்கும் உத்தரவிட வேண்டுகிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம், “ போஸ்டர்களில், அவை அச்சடிக்கப்பட்ட அச்சகத்தின் பெயர், தொலைபேசி எண் இருக்க வேண்டும். அது இல்லாமல் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே இதை அஜீத் ரசிகர்கள் ஒட்டவில்லை என்பதை அறியலாம். இது விஜய் ரசிகர்களின் வேலைதான்” என்று புலம்புகிறார்கள் அஜீத் ரசிகர்கள்.
சமீபத்தில் விஜய் நடித்த புலி படம் வெளியானபோது, அந்த படத்தை சமூகவலைதளங்களில் மோசமான முறையில் அஜீத் ரசிகர்கள் பலர் விமர்சித்ததும், இதையடுத்து விஜய் ரசிகர்கள் காவல்துறையில் புகார் கொடுத்தும் குறிப்பிடத்தக்கது.