ஸ்டிக்கர் இன்னும் வரவில்லையா? : கடலூர் கலெக்டருக்கு எம்.எல்.ஏ. காட்டமான கடிதம்

Must read

சமீபத்திய போராட்டம் ( கோப்பு படம்)
சமீபத்திய போராட்டம் ( கோப்பு படம்)

ஒரு பக்கம், நிவாரண பொருட்கள், தேவைப்படுவோருக்கு  கிடைக்காமல், அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். இன்னொரு பக்கம், ஆட்சியாளரே, மக்கள் அளித்த நிவாரணப் பொருட்களை விநியோகிக்காமல் வைத்திருக்கிறார்.

கடலூரின் அவல நிலை இதுதான். இதை உணர்த்துவிம் விதமாக தி.மு.க.வைச் சேர்ந்த குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. சிவசங்கர், கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு எழுதியிருக்கும் கடிதம் சூழலை வெளிப்படுத்துகிறது.

ஆட்சியருக்கு எழுதிய கடிதத்தை தனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்டிருக்கிறார் சிவசங்கர். அந்த கடிதம்:

அன்பிற்குரிய கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு,

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்திருக்கும் நிவாரணப் பொருட்களை கொஞ்சம் வெளியே எடுங்களேன்.

ஆங்காங்கே மக்கள் நிவாரணம் கேட்டு, சாலை மறியலில் இறங்கி விட்டார்கள். இன்று (11.12.2015) காலை 11.00 மணியளவில் வடலூர் அருகே, சாலை மறியலில் நான் மாட்டிக் கொண்டேன். இப்போது மறியலுக்கு பிறகு நிவாரணப் பொருட்கள் வருவதாகத் தகவல்.

அரசாங்க சார்பாக நீங்கள் ஒன்றுமே தர வேண்டாம். மற்ற ஊர்களில் இருந்தும், மற்ற மாநிலங்களில் இருந்தும் வந்து குவிந்திருக்கும் பொருட்களை எடுத்து விநியோகம் செய்தாலே போதும்.

சிவசங்கர்
சிவசங்கர்

அங்கு ஒரு லட்சம் போர்வைகள் இருப்பதாகத் தகவல். அரிசி பல்லாயிரம் கிலோ குவிந்திருக்கிறது. சமையல் பொருட்கள், பிஸ்கெட், வேட்டி, சேலை என இன்னும் பல அத்தியாவசியப் பொருட்கள் குவிந்திருப்பதை வெளியே எடுக்காவிட்டால், காற்றில் இருக்கும் ஈரப்பதத்திலேயே பூஞ்சை பிடித்து விடும்.

அதை காவல் காக்க, ஒரு தாசில்தார், பல கிராம நிர்வாக அலுவலர்கள், முப்பதுக்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் என நியமித்து, பயனில்லாமல் பத்திரமாக வைத்திருப்பது நியாயமா?

வெயில் அடிக்க ஆரம்பித்து விட்டது. இனியும் மக்கள் பொறுக்க மாட்டார்கள். பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் ஆங்காங்கே சாலைமறியல் என்ற செய்தி வர ஆரம்பித்து விட்டது.

தனி நபர்கள் தங்கள் உழைப்பில் சம்பாதித்ததை கொண்டு வந்து கடலூர் மாவட்ட மக்களுக்கு வழங்கி உதவி வருகிறார்கள்.

நீங்கள் மற்றவர்கள் அளித்ததை எடுத்துக் கொடுக்க ஏன் தயங்குகிறீர்கள், தாமதப்படுத்துகிறீர்கள் ?

இன்னமும் “ஸ்டிக்கர் ” வந்து சேர வில்லையா ?

அன்புடன்
சிவசங்கர்.எஸ்.எஸ்.
சட்டமன்ற உறுப்பினர்,
குன்னம் தொகுதி.

 

More articles

Latest article