145396496472414 (1)

ரெகைஃப்: கொசு மூலம் ஏற்படும் ஸிக்கா நோயை கட்டுப்படுத்த முடியாமல் பிரேசில் நீண்ட நாட்களாக தவித்து வருகிறது.
வழக்கமான அளவை விட குறைவான அளவு கொண்ட மூளையுடன் பிறக்கும் குழந்தைகளை ஸிக்கா என்ற வைரஸ் தாக்கி வருகிறது. கொசு மூலம் பரவும் இந்த நோயால பிரேசில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3,700 பேர் இந்த நோயால் பாதித்துள்ளனர்.
இதில் பெர்னாம்புக்கோ என்ற மாநிலத்தில் மட்டும் கடந்த சில தினங்களில் ஆயிரம் குழந்தைகள் இந்த நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த நவம்பரில் தினமும் 18 பேர் இதனால் பாதிக்கப்பட்டு இங்குள்ள ரெகைஃப் நகர மருத்துவமனைக்கு வந்துள்ளனர். தற்போது இந்த எண்ணிக்கை 5ஆக குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களில் 12 குழந்தைகள் இறந்துள்ளது.
ஸிக்காவின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் பிரேசில் அரசு, பொது சுகாதார நிர்வகம், மருத்துவர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். டெங்கு, மஞ்சள் காய்ச்சல்களை  தொடர்ந்து இந்த நோய்க்கும் தடுப்பூசியோ, மருந்தோ இது வரை இல்லை.
தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை கொசுக்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு கர்ப்பிணிகளுக்கு அரசும், பல்வேறு சுகாதார முகமைகளும் அறிவுறுத்தி வருகின்றன. அதோடு கர்ப்பமாவதை தள்ளிப்போடுமாறு பெண்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் சேதிய சுகாதார மையத்துடன் இணைந்து இதற்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பிரேசில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவிலும் இந்த நோய் தற்போது பரவ துவங்கியுள்ளது. அதனால் அங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் பிரேசிலில் 1.6 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டனர். 800 பேர் இறந்தனர். லேசான காய்ச்சல், உடம்பு வலி போன்றவை தான் ஸிக்கா தாக்குதலுக்கான அறிகுறியாக உள்ளது. அதனால் இதை ஆரம்பத்தில் டெங்கு காய்ச்சல் என்றே கருதும் நிலை உள்ளது.