ஷேல் மீத்தேன் திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு: : தொடரும் குழப்பம்: கே.எஸ். ராதாகிருஷ்ணன்

Must read

methane-tundra

நேற்று முன்தினம் (11-10-2015) தமிழக அரசு, தஞ்சை டெல்டா மாவட்டங்களில் மீதேன் திட்டத்திற்கு அனுமதி கிடையாதென்று அறிவிப்பை செய்தது. ஏற்கனவே இந்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னாள் அறிவிக்கப்பட்டும், ஷேல் மீத்தேன் திட்டம் என்ற வடிவில் மாற்றப்பட்டு அதை செயல்படுத்த மத்திய அரசும் ஒஎன்ஜிசி யும் மும்முரமாக இருந்தது.

பல்வேறு போராட்டங்கள் தஞ்சை வட்டாரங்களில் நடத்தியும், தெளிவான அரசு அறிவிப்பு இல்லாமல் குழப்பமான நிலையில் இந்த பிரச்சனை இருந்து வருகிறது . இந்நிலையில் தமிழக அரசு மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி இல்லையென்று அறிவித்தாலும் ஷேல் திட்டத்திற்கான தமிழக அரசின் நிலைபாட்டை அறிவிக்காதது குழப்பத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் தெளிவான பார்வையும் இல்லையென்று தெரியவருகிறது. இது குறித்து சுற்றுசூழல் ஆர்வலர் நண்பர் முகிலன் அவர்கள் அனுப்பிய செய்தியை கவனத்தில் கொள்ளவேண்டும்>>>

தமிழக முதல்வரே!
ஷேல் மீத்தேன் திட்டத்திற்கு மறைமுகமாக உதவி செயாதீர்கள்!

சத்தியமா இந்த பரிந்துரைகள் நாங்கள் செய்ததல்ல!..
தமிழக அரசு நியமிச்ச வல்லுநர் குழுவே சொல்லியிருக்கு!
இங்கு சொல்லப்பட்டிருக்கும் அத்தனையும்..
நிலக்கரிப்படிவ மீத்தேனுக்கு மட்டுமல்ல..
ஷேல் கேஸ் மீத்தேனுக்கும் பொருந்தும்!!
தமிழக முதல்வரே! இவையெல்லாம் உண்மை என்று
நீங்கள் நம்பினால்.. வாய்மையே வெல்லும் என்ற உங்கள் அரசின் இலச்சினையில் உள்ள வார்த்தகளை நீங்கள் மெய்ப்பிக்க விரும்பினால்…

ஷேல் மீத்தேன் திட்டத்திற்கு மறைமுகமாக உதவி செயாதீர்கள்!
உடனடியாக ஓ என் ஜி சி யின் நடவடிக்கைகளைத் தடை செய்து, காவிரிப்படுகையை விட்டு ஓ என் ஜி சி யை வெளியேற்றுங்கள்!!

வல்லுநர் குழு பரிந்துரைகள்:

1.இந்தப் பகுதியில் நிலத்தடி நீரோட்டம் தொடர்பான தகவல்கள், நுண்தனிமங்கள் தொடர்பான தரவுகள், நிலத்தடிநீரின் ஐசோடோப் கூறுகள், பழுப்பு நிலக்கரி படுகை தொடர்பான தரவுகள், நிலத்தடி, நீர்படுகை ஊடாக மீத்தேன் வாயு கசிவதற்கான சாத்தியங்கள் போன்ற மிக முக்கியமான தகவல்கள் இந்த நிறுவனத்தால் அளிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

2.இந்த நிறுவனம் மிகப் பெருமளவிலான நிலத்தடிநீரை வெளியேற்ற மற்றும் அதனால் படுகையில் ஏற்படும் விளைவுகளுக்கு உரிய அரசு அமைப்புகளான மத்திய நிலத்தடிநீர் ஆணையம், தமிழ்நாடு பொதுப் பணித் துறையினரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெற்று அளிக்கவில்லை.

3.ஐக்கிய நாடுகள் அவையின் வளர்ச்சித் திட்டத்தின் பிரிவு இந்தப் பகுதியில் நிலத்தடிநீர் எடுப்பதால் உண்டாகும் நில அமைப்பியல் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய நிலத்தட்டுகளின் இடப்பெயர்வு நடைபெறக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஆய்வு செய்து தெரிவித்துள்ளது.

4.நிலக்கரி படுகை மீத்தேன் கிணறுகள் மற்றும் வாயு அழுத்தக் கலன்கள் மூலமாக மீத்தேன் வாயு கசிவு மற்றும் காற்று மாசுகள் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. விஷ வாயு வெளியேற்றம் அப்பகுதியில் வளி மண்டல வெப்பநிலை மாற்றத்தை ஏற்படுத்தி மழை அளவு குறைவதற்கும் வாய்ப்புண்டு.

5.மீத்தேன் வாயு எடுக்கப்பட்ட பிறகு இப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான கிணறுகளைத் தூர்க்கவோ அல்லது மீண்டும் பயன்படுத்தவோ இயலாது. இப்பகுதியில் வாயு கொண்டு செல்லும் குழாய்களில் ஏற்படும் வாயு கசிவு, அதனால் ஏற்படும் பெருவெடிப்பு இப்பகுதியில் உள்ள மக்களின் உயிர், உடைமை, சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்பன உள்ளிட்ட காரணங்களைத் தொழில்நுட்ப வல்லுநர் குழுத் தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளது.

 

More articles

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article