எஸ்.ஆர் எம். பல்கலை
எஸ்.ஆர் எம். பல்கலை

சென்னையைச் சுற்றி நடந்துள்ள ஆக்கிரமிப்புகள் பற்றி நம்மிடம் பேசிய நேர்மையான அதிகாரிகள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சிக்குள்ளானோம்.

அவர்கள் நம்மிடம் கூறியதாவது:

“சென்னையில் சமீபத்திய வெள்ள  சேதத்துக்கு மிக முக்கிய காரணம், கல்வித்தந்தைகள்தான்!

புறம்போக்கு நிலங்கள், நீர் நிலைகளை இவர்கள் வளைக்கிறார்கள்.  ஆனால் இவர்களை விட குற்றவாளிகல், அரசு அதிகாரிகளே.

12235044_486118858215558_51821828202158335_n-860x280

அரசு அதிகார்கள் கண்டுகொள்ளாததால்தான் பல ஆக்கிரமிப்புகள் நடக்கின்றன.

ஆமாம், சென்னை புறநகர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் இதற்கு உதாரணம்.   காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது  தண்டலம் கிராமம். இங்குள்ள தனியார் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி, அரசு நிலத்தை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டியுள்ளது.

இது குறித்து ஊர்மக்கள், ஊராட்சி மன்றதலைவர் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தார்கள்.

“சர்வே எண் 3442 மற்றும் 3444 ஆகிய சர்வே எண் கொண்ட அரசு நிலமான வண்டிப்பாதையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டியுள்ளனர்.  மேலும் கட்டட அனுமதியை மீறி கட்டுமானங்களை கட்டி வருகின்றனர்.  கல்லூரி ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை ஊராட்சி மன்றத்துக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தாமல் ஏமாற்றுகிறார்கள்.  மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என்று தெளிவாகக் குறிப்பிட்டார்கள்.

ஆனால்,  கண்துடைப்புக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டதே தவிர, இன்னமும் அந்த கல்லூரி ஆக்கிரமிப்பு இடத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. காரணம், ஆளுங்கட்சியில் உயர் பதவியில் உள்ளவர்களும், அரசு உயர் அதிகாரிகளும்தான்!  இவர்கள், வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு வாய்மூடிக்கிடக்கிறார்கள்!

எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்துக்கு பல்வேறு சிறப்பு உண்டு. அதில் ஒன்றி, இந்த பல்கலை தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடியே கலந்துகொண்டு  எஸ்.ஆர்.எம். நிர்வாகத்தை பாராட்டினார் என்பதும் ஒன்று.

ஆனால் உண்மை நிலவரம் என்ன?

இந்த பல்கலையும்,  பெரும் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. அரசு புறம்போக்கு, நீர்வழிகளை சட்டத்துக்கு புறம்பாக  எடுத்துக்கொண்டிருக்கிறது.

“ தனியார் கல்லூரி நிறுவனங்கள் வசம் 4,000 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. அவற்றை மீட்க அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று  ஏற்கெனவே அரசே தெரிவித்தது.

ஆனால் உருப்படியான நடவடிக்கை ஏதும் இல்லை!

சமீபத்தில், எஸ்.ஆர்.எம், ஜே.பி.ஆர் கல்லூரிகள் உட்பட பல கல்வி நிலையங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன.  இது இந்த முறை மட்டுமல்ல. இதற்கு முன்பே இப்படி நடந்தது உண்டு.

புதிய நீதிக்’கட்சி தலைவர் ஏ.சி. சண்முகத்துக்கு “கூவம் கொண்டான்” என்ற பட்டப்பெயரே உண்டு. கூவம் ஆற்று பகுதியை ஆக்கிரமித்துதான் இவரது ‘டாக்டர்’ எம்.ஜி.ஆர். பல்கலைக்கம் கட்டப்பட்டுள்ளது.

இந்த பல்கலைக்கழகம் சார்பில் எம்.ஜி.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி, தாய் மூகாம்பிகை பாலிடெக்னிக், பல்மருத்துவ கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. சுமார் 7 ஆயிரம் மாணவ, மாணவிகள் இங்கு பயில்கிறார்கள்.

மதுரவாயலில் கூவம் ஆற்றின் இரு கரைகளையும் பாலம் கட்டி இணைத்து சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கல்லூரி வளாகம்  உருவாக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி விடுதிகள் உள்பட பல கட்டிடங்கள் இந்த கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ளன.

இந்த கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் சுமார் 6 ஏக்கர் நிலம் கூவம் நதிக்கரை ஓரம் உள்ள கால்வாய் புறம்போக்கு நிலம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

அது மட்டுமல்ல.. அப்போதும், வெள்ளம் ஏற்பட்டு, அதில் மாணவ மாணவிகள் சிக்கித் தவித்தனர்.  இதையடுத்து அங்கு கட்டப்பட்ட 6 கட்டிடங்களை இடிக்கும் பணி  அப்போது நடந்தது. அதோடு,  மதுரவாயல் கிராம நிர்வாக அதிகாரி மதுரவாயல் போலீஸ் நிலையத்தில், ஏ.சி.சண்முகம் இயக்குனராக உள்ள கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளை நிறுவனம் மீது பரபரப்பான புகார் கொடுத்தார்.  இதையடுத்து ஏ.சி. சண்முகம் தலைமறைவானார்.

இதெல்லாம் பழங்கதை. ஆனால் இப்போதும் தொடரும் கதை.

இது அடுத்த கூத்து.  மறைமலைநகர் நகராட்சி கடம்பூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 368 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் ஒரு பகுதியில் வீடும், மற்றொரு பகுதியில் பயிர் செய்தும் ஆக்கிரமிக்கப்பட்டது.

இதையடுத்து நீண்ட கால போராட்டத்துக்குப் பிறகு 368 ஏக்கரில் இருந்த வீடு மற்றும் பயிர்களை வருவாய்த்துறையினர் அழித்து, 400 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்டனர்.  மீட்கப்பட்ட நிலத்தில் அத்துமீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. ஆனால் மீண்டும் இந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது. மறுபடி  இந்த ஆக்கிரமிப்பு இடிக்கப்பட்டது.

மீண்டும் கல்வி தந்தைகள் மேட்டருக்கு வருவோம். தமிழகம் முழுதும் ஆக்கிரமிப்பு என்று கூவிய புதிய தலைமுறை தொலைக்காட்சியை நடத்தும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் ஆக்கிரமிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல.  இந்த எஸ்.ஆர்.எம் பல்கலை,  ஆக்கிரமித்து கட்டியிருந்த சுற்றுச்சுவர் இடித்து தள்ளப்பட்டு 25 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. மேலும் 2 ஏக்கர் பரப்பில் கட்டுமான பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கொட்டகையையும் இடித்து தள்ளப்பட்ட சமபவமும் நடந்தது..

போரூர் பகுதியில் அமைந்துள்ள ராமச்சந்திரா பல்கலையும் ஆக்கிரமிப்புக்கு விதிவலக்கல்ல.

போரூர் ஏரி சுமார் 800 ஏக்கர் பரப்பளவு கொண்டிருந்தது. தற்போது 250 ஏக்கர்தான் இருக்கிறது. பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது. இதில் முக்கிய பங்கு ராமச்சந்திரா பல்கலைக்கு உண்டு.

பொதுப்பணித் துறையின் நீர் வளத்துறை கூறும்போது, ‘‘ராமச்சந்திரா பல்கலைக்கழகத்துக்கு 17 ஏக்கர் மட்டுமே சொந்தமானது. ஆனால், அவர்கள் கூடுதலாக 15 ஏக்கரில் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். அதை மீட்பதற்காக கரை அமைத்து வருகிறோம். கரை அமைப்பது, வேலி அமைப்பது, ஏரியை ஆழப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறோம்” என்றது. இதிலிருந்தே ராமச்சந்திரா பல்கலை ஆக்கிரமித்திருப்பதை உணரலாம்.

இப்படி, கல்விதந்தைகளே ஆக்கிரமிப்புகளில் இறங்கும்போது, சாதாரண பொதுமக்களை எப்படி குறை சொல்வது?’ என்ற கேள்வியுடன் முடித்தனர் நமக்கு தகவல் அளித்தவர்கள்.

என்ன பதில் சொல்வது?