ராமசுகந்தன்
விஷ் யூ ஹே…ப்பி நியூ இயர்…”   –  எஸ்பி.பி. குரலில் கமல்ஹாசன் உற்சாகமாய் கூவும் இந்த  பாடல் ஒலிக்காமல் தமிழகத்தில் “நியூ இயர்” பிறப்பதே இல்லை.
தமிழகத்தின் அறிந்துகொள்ள முடியாத முடிச்சுகளில் இந்த ரசனையும் ஒன்று. தற்போதைய இளைஞர்களுக்கு, இந்த பாடலைத் தெரியும். ஆனால் எந்தப்படத்தில் என்று பலருக்குத் தெரியாது. காரணம், இவர்கள் பிறக்கும் முன் வெளியான படத்தில் வந்த பாடல்! அவர்களுக்கு தகவல் தருவது நமது கடமை அல்லவா?
1982ம் ஆண்டு வெளியான “சகலகலாவல்லவன்” படத்தில் இடம் பெற்ற பாடல்தான் “விஷ் யூ ஹேப்பி நியூ இயர்…”!
கமல்ஹாசன் நடித்த அந்த படத்தை ஏ.வி.எம். தயாரிப்பில் எஸ்.பி முத்துராமன் இயக்கினார். அம்பிகா ஹீரோயினாக நடித்தார் என்றாலும் சில்க் ஸ்மிதா முக்கிய வேடத்தில் ஆடிய படம் இது. (அப்போதெல்லாம், “ஃபிலிம் இல்லாம கூட படம் எடுக்கலாம்.. சில்க் இல்லாம முடியாதுப்பா” என்பார்கள்.)
படத்துக்கு இசை இசைஞானி இளையராஜா. எழுதியவர் வார்த்தைச் சித்தர் வாலி.

ராமண்ணா
ராமண்ணா

“ஹேப்பி நியூ இயர்..” பாடலை விட அப்பதது இதே படத்தின் வேறு இரு பாடல்கள் பிரபலமாக இருந்தன என்பது பலருக்குத் தெரியாது.    எஸ்.ஜானகி முக்கி முக்கி பாடிய “நிலாக் காயுது..” மற்றும் “நேத்து ராத்திரி..” பாடல்கள்!
இவை ஒலித்தால், அந்தக்காலத்தில் படக்கென்று ரேடியோவை ஆப் செய்துவிடுவார்கள் வீட்டு பெருசுகள்.
பொதுவாக, “பாடல்கள் இலைமறை காயாக இருக்கின்றன. ஆனால் பாடல் காட்சிகள் மோசம்” என்ற விமர்சனம் திரைப்படங்கள் மீது உண்டு. ஆனால் இந்த இரு பாடல்களும் அதை தலைகீழாக மாற்றின.  “காட்சிகளைவிட, பாடலே ஏதேதோ உணர்வுகளை ஏற்படுத்துகிறது” என்று பேசப்பட்டது.அப்போது பெரியவர்கள், இந்த பாடல்களையும் அவற்றை உருவாக்கியவர்களையும் கடுமையாக பேசினார்கள்.
பாடலின் ஆரம்பத்தில் ஜானகி விரகத்துடன் முனகும், “ம்.. ஆ.. ம்ஹூ… “ ஆகியவற்றையும், அதற்குத்தோதாக வரும் பின்னணி இசையையும் (இசைஞானி பீட்!) கேட்டு கிரங்கி, லைட் கம்பத்தில் மோதிக்கொள்ளாத அப்பத்திய இளசுகளே இல்லை.
பெண்களைப்பார்த்து இந்த பாடல்களை இளைஞர்கள் பாடுவதும், அதனால் அடிதடி வெட்டுகுத்து நடப்பதும் அப்போது சகஜம். திருவிழாக்களில் இந்த இரு பாடல்களை ஒலிபரப்பக்கூடாது என்று காவல்துறை வாய்மொழி உத்தரவே போட்டதும் நடந்தது.
அப்படி ஒரு சூடேற்றும் பாடல். ஆமாம்..  இசைஞானியின் கிறக்கமான இசையும்,  வார்த்தை வேந்தர் வாலியின் சூடான சொற்களும் மக்களை கலங்கடித்தன.
தற்போது உள்ளது போல  அப்போது “அமைப்புகள்” பலமாக இல்லை. இருந்தால் பாடல்களை தடை செய்யச்சொல்லி ரகளை நடந்திருக்கும்.
“கண்டேனடி காஷ்மீர் ரோஜா, வந்தேனடி காபூல்ராஜா என் பேருதான் அப்துல் காஜா என்கிட்டதான் அன்பே ஆஜா” என்ற வரிகளுக்கு அப்போது எந்த ஒரு அமைப்புமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது இப்போது ஆச்சரியமாகத்தான் இருக்கும்!
தகவல்கள் போதும் என்று நினைக்கறேன்…
விஷ் யூ ஹேப்பி நியூ இயர்!
(படம்: ஆர். சுகந்தன்)