4

சென்னை:

திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா தற்கொலையில் மறைந்திருக்கும் உண்மைகளை ஆதாரத்துடன் நாளை வெளியிடுவதாக தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் அறிவித்துள்ளார்.  விஷ்ணுப்ரியாவின் கன்னத்தில் காயம் ஏற்ப்பட்டு எப்படி என்று தந்தை ரவி கேள்வி எழுப்பி உள்ள நிலையில், யுவராஜின் அறிவிப்பு மேலும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓமலூரை சேர்ந்த தலித் இளைஞர் கோகுல்ராஜ், காதல் விவகாரத்தால் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தலைமறைவாக இருப்பவர் தீரன் சின்னமலை பேரவை நிறவனர் யுவராஜ். இவரை பிடிக்க அமைக்கப்பட்ட ஐந்து தனிப்படைகளில் ஒன்று விஷ்ணுப்ரியா தலைமையிலானது.

யுவராஜை பிடிக்கும் விசயத்தில் மேலதிகாரிகள் டார்ச்சர் செய்ததாலேயே விஷ்ணுப்ரியா தற்கொலை செய்துகொண்டதாக பல்வேறு தரப்பிலிருந்தும் புகார் எழுந்தது.

இந்த நிலையில், தலைமறைவாக இருக்கும் யுவராஜ், வழக்கம்போல தனது பேச்சை, வாட்ஸ்அப்பில் வெளியிட்டுள்ளார். அதில், “விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கின் விசாரணை இன்று எப்படி போகிறது என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும்.      விஷ்ணுப்ரியா மறைவின் போது அஞ்சலி செலுத்தி அறிக்கைவிட்டேன். அப்போதே, “அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் யார் யார் என்பதை ஆதாரத்துடன் வெளியிடுவேன்” என்று கூறினேன்.    அதற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது. நாளை 27.9.15 ஞாயிறு காலை 11 மணி வாக்கில் அந்த ஆதாரங்களை வெளியிடுவேன்” என்று யுவராஜ் கூறியுள்ளார்.

.தனது பேச்சில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் யுவராஜ். அதில், “அரசு பணியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் நீங்கள் எடுத்த கடுமையான நேர்மையான நடவடிக்கையால், “ஜெயலலிதா ஆட்சியில் யார் தப்பு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மக்கள் பேசுகிறார்கள். ஆகவே இந்த வழக்கிலும் சரியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

விஷ்ணுப்ரியா, பலாத்காரப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அடையாளம் தெரியாத நபர் எழுதிய கடிதம் ஏற்கெனவே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னொரு புறம், விஷ்ணுப்ரியாவின் தந்தை, தனது மகள் கன்னத்தில் காயம் இருந்தாதக குறிப்பிட்டு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்த நிலையில், யுவராஜின் பேச்சு காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.