1

சென்னை:

யர் அதிகாரிகளின் டார்ச்சரால்தான் விஷ்ணுப்ரியா தற்கொலை செய்துகொண்டார் என்றும் அதற்கான ஆடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் உரிய நேரத்தில் அதை வெளியிடுவேன் என்றும் தலைமறைவு குற்றவாளி யுவராஜ் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

ஓமலூர் தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார். கோகுல்ராஜ் கொலை வழக்கின் முதல் குற்றவாளியான யுவராஜை கைது செய்வது தொடர்பாக உயரதிகாரிகள் கொடுத்த டார்ச்சராலேயே விஷ்ணுப்ரியா தற்கொலை செய்துகொண்டதாக பல தரப்பிலும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளவர் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ். இன்னமும் தலைமறைவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது பேச்சை ஆடியோவாக சமூகவளைதங்களில் வெளியிட்டு வருகிறார்.

சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட ஆடியோவில், “நேர்மையான அதிகாரியான விஷ்ணுபிரியாவை உயரதிகாரிகள் தவறான முறையில் வழி நடத்துகின்றனர் “ என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஷ்ணுப்ரியா மறைவுக்கு அஞ்சலி செலுத்தி இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“சட்டத்திற்கு புறம்பாக செயல்பட உயர் அதிகாரிகள் வற்புறுத்தியதால், நேர்மையான பெண் காவல் துணை கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா தனது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு பெண் என்றும் பாராமல் அவரை மோசமான வார்த்தைகளால் உயரதிகாரிகள் சாடியதே இந்த தற்கொலைக்குக் காரணம். இதை அவரது தோழியும் சக டி.எஸ்.பியுமான மகேஸ்வரியும் சொல்லியிருக்கிறார்.

உயரதிகாரிகள் மகேஸ்வரியை டார்ச்சர் செய்தார்கள் என்பதற்கான ஆடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது. தகுந்த நேரத்தில் அதை வெளியிடுவேன்.

கோகுல்ராஜ் கொலை வழக்கும், விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கும் தற்போது சி.பி.சி.ஐ.டி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குற்றம் செய்த காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கபட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நோக்கம் என்றால் பொய் செய்திகளை பரப்பும் மேற்கு மண்டல ஐ.ஜி , சேலம் டி.ஐ.ஜி , முதல் குற்றவாளி நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் , இவரது தளபதியாக செயல்பட்ட ஏடிஎஸ்பி சந்திரமோகன் , காவல்துறையின் கரும்புள்ளியான ராசிபுரம் டிஎஸ்பி ராஜு ஆகியோரை கூண்டோடு சஸ்பண்ட் செய்யுங்கள்.

கோகுல்ராஜ் கொலை வழக்கினை எவ்வித சமரசமில்லாமல் காவல்துறை நடத்தட்டும் , நான் குற்றவாளி என நிரூபித்தால் மறு பேச்சின்றி மரணதண்டனையை ஏற்க எப்போதும் நான் தயாராக இருக்கின்றேன் .  ஆனால் அப்பாவி பெண்ணை மன உளைச்சல் படுத்தி கொன்று அவரது குடும்பத்தாரை சிதைக்க காரமான காவல்துறை அதிகாரிகளை , இவர்களை ஏவிய அரசியல்வாதிகளை யார் தண்டிப்பது ?”

-இவ்வாறு தனது அறிக்கையில் யுவராஜ் தெரிவித்துள்ளார்.  இந்த அறிக்கை அரசியல் மட்டத்திலும், காவல்துறை வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது