“குத்தாலத்தில இடி இடிச்சா கோடம்பாக்கத்துல மழை பெய்யுமா” என்பார்கள். அப்படித்தான் நடந்திருக்கிறது விஷாலுக்கு!

இவர் நடித்திருக்கும் பாயும்புலி படத்துக்கு தடை போட்டிருக்கிறது தியேட்டர் அதிபர்கள் சங்கம். இந்த படத்தைத் தயாரித்திருக்கும் வேந்தர் மூவிஸ்தான் ரஜினி நடித்த லிங்காவையும் தயாரித்தது. “அந்த படத்தில் நாங்கள் பட்ட அடிக்கு களிம்பு தடவினால்தான் இந்த படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர் கொடுப்போம்” என்று போர்க்கொடி தூக்கிவிட்டார்கள் தியேட்டர்காரர்கள்.

payum

லிங்கா பட நட்டத்தை ரஜினிதான் ஈடு செய்ய வேண்டும் என்றவர்கள், இப்போது டிராக் மாறி தயாரிப்பாளர் பக்கம் திரும்பியது ஏன்?

கடந்த சில நாட்களுக்கு முன் தியேட்டர் சங்க பொறுப்பாளர்கள் சிலர் ரஜினியை சந்தித்தார்கள். அப்போது ரஜினி, “லிங்கா படத்தினால் இழப்பை சந்தித்தவர்களுக்கு பிரித்துக் கொடுக்கச் சொல்லி நானும் ராக்லைனும் வெங்கடேஷும் 10 கோடிக்கு மேல் கொடுத்திருக்கிறோம்” என்று சொன்னாராம்.

“ஆனால் இதுவரை 7 கோடி சொச்சம்தானே உரியவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று அதிரச்சி அடைந்திருக்கிறார்கள் சங்கத்துக்காரர்கள்.

இதையடுத்துதான் ரஜினியை விட்டுவிட்டு வேந்தர் மூவிசின், பாயும் புலிக்கு தடை போட்டிருக்கிறார்கள் தியேட்டர்காரர்கள்!

ஆக ரஜினி பட சிக்கல், விஷால் படத்துக்கு வில்லங்கம் வைத்துவிட்டது! அதான் சினிமா!