1
 
தேர்தல் வந்து விட்டால், அதிரடியாய் காட்சிகள் மாறும்.  தோளில் கைபோட்டு வலம் வந்த கட்சிகள் முறுக்கிக்கொண்டு நிற்கும்,  “நீயா நானா” என்று மோதிக்கொண்ட கட்சிகள் அண்ணன் தம்பியாய் பாசமழை பொழிவார்கள்.
ஆனால் வரவிருக்கும் 2016 சட்டமன்றத் தேர்தல், சம்பந்தமே இல்லாமல் அப்பாவையும் மகனையும் பிரித்திருக்கிறது. பாவப்பபட்ட அந்த அப்பா – மகன்… திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரும், நடிகர் விஜய்யும்தான்.
தந்தைக்கும் தனயனுக்கும் என்ன மோதல் என்பதை அறிந்துகொள்ள, கொஞ்சம் ஹிஸ்டரி தெரிந்திருக்க வேண்டும். ஆகவே கொஞ்சம் ரீவைண்ட்…
மகன் விஜய்யை தனது சொந்தப்படத்தில்தான் அறிமுகப்படுத்தினார் எஸ்.ஏ. சந்திரசேகர். அப்போதெல்லாம் விஜய்க்கு கிடைத்தது நெகட்டிவ் ரெஸ்பான்ஸ்தான். “நடிக்கத் தெரியவில்லை, ஹீரோ மாதிரியே இல்லை” என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. ஒரு வார இதழில், “இந்த தகர டப்பா மூஞ்சியை காசு கொடுத்து பார்க்க வேண்டுமா” என்றெல்லாம் எழுத, கொதித்துப்போன அப்பா எஸ்.ஏ.சி., ஆட்களை திரட்டிக்காண்டு போய் அந்த வார இதழ் அலுவலகத்தை உண்டு இல்லை என்று ஆக்கியதும் பலரும் மறந்து போன ஓல்டு ஹிஸ்டரியே.
தொடர்ந்து விஜய் நடிக்க நடிக்க.. மக்களுக்கு விஜய்யும், விஜய்க்கு நடிப்பும் பழகிப்போனது. நாளாவட்டத்தில் குறிப்பிடத்தக்க ஹீரோவாக உயர்ந்தார் விஜய்.
சினிமாவில் ஜெயித்தால் அடுத்து அரசயில்தானே! மகனை முதல்வராக்கிப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை அல்லது பேராசா எஸ்.ஏ.சிக்கு ஏற்பட்டது.
அதன் முதல்கட்டமாக, விஜய் ரசிகர் மன்றத்தை பலப்படுத்த திட்டமிட்டார்.  “மக்கள் நலத்திட்ட” விழாக்கள் நடந்தன. விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ஏகப்பட்ட நலத்திட்டங்கள்..  தையல் மிசின், மூன்று சக்கர சைக்கிள், சிலேட்டு, பென்சில் என வழங்கப்பட்டன.
அடுத்ததாக  ரசிகர் மன்றம் என்பதை விஜய் மக்கள் மன்றம் என்று மாற்றினார்.  இந்த மக்கள் மன்றத்துக்கு என்று ஒரு கொடியையும்  உருவாக்கினார்.
தி.மு.க ஆதரவாளராக இருந்த எஸ்.ஏ.சி. கடந்த தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்ட சிரமங்களைத் தொடர்ந்து கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்தார். அக் கட்சி வெற்றி பெற்றதும் “இந்த வெற்றிக்கு விஜய் அணிலாக உழைத்தார்” என்று அவர் தரப்பில் பேச ஆரம்பித்தார்கள்.
இது அதிமுக தலைமைக்கு வெறுப்பேற்ற, விஜய் நடித்த  கத்தி படத்துக்கு சிக்கல் வந்தபோது, தலைமை கொடநாடு போய்விட்டது.  இது ஒருபக்கம்.  விஜய் படத்துக்கு சிக்கல்கள் தொடர்ந்தன.

ராகுல் சந்திப்புக்குப் பிறகு ரசிகர்களால் ஒட்டப்பட்ட போஸ்டர்!!
ராகுல் சந்திப்புக்குப் பிறகு ரசிகர்களால் ஒட்டப்பட்ட போஸ்டர்!!

இன்னொரு பக்கம், காங்கிஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தார் விஜய். இங்கே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு கிளம்பியது. விஜய்யும், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி கேட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் ராகுல் காந்தியோ, “இளைஞர் காங்கிரஸில் இணைவதற்கான வயதைக் கடந்துவிட்டார் விஜய்” என்று சிம்பிளாகச் சொல்லிவிட்டார்.
அகில இந்திய கட்சியில் இணைந்து தமிழகத்தில் தனி ராஜ்யம் நடத்தலாம் என்ற விஜய் + எஸ்.ஏ.சி. கனவு நொறுங்கியது.
கொஞ்சநாளில்  சுதாரித்து, கனவை தூசி தட்டி நினைவாக்க முயன்றார்கள் அப்பாவும்,மகனும். கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காக கோவை வந்த பிரதமர் (வேட்பாளர்) மோடியை சந்தித்தார் விஜய்.
“பாஜகவில் விஜயக்கு முக்கிய பொறுப்பு தர்பபோகிறார்கள்” என்பதில் ஆரம்பித்து, “வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய்தான் பாஜகவின் முதல்வர் வேட்பாளர்” என்பது வரை யூகச் செய்திகள் ட்ரிபிள் றெக்கை கட்டி பறந்தன.
பட்.. பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் பாஜக தரப்பில் இருந்து விஜய் பற்றி பேச்சு மூச்சே இல்லை.
இந்த தருணத்தில்தான் அப்பா சந்திரசேகர் மீது, லேசாக எரிச்சல் பட ஆரம்பித்தார் விஜய். அப்பாவின் வியூகங்கள் எல்லாம் தப்பாகவே போனால் எரிச்சல் வராதா என்ன?
“இந்த எரிச்சலின் மேல் அயர்ன் பாக்ஸ் வைக்கும் வேலையை செய்தார் விஜய் மக்கள் மன்ற தலைவரான புஸ்ஸி ஆனந்த்” என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அவர்கள் சொல்வது இதுதான்:
புஸ்ஸி ஆனந்த்
புஸ்ஸி ஆனந்த்

“புஸ்ஸி ஆனந்த் பொறுப்புக்கு வந்த உடனே,  விஜய் மக்கள் இயக்கத்தை தன் கைபபிடிக்குள் கொண்டுவரும் வேலையை ஆரம்பித்தார். ஏற்கெனவே எஸ்.ஏ.சி நியமித்த  மாவட்ட செயலாளர்களை ஒடுக்க ஆரம்பித்தார்.
இதற்கு ஒரு உதாரணம் புதுக்கோட்டை. இம் மாவட்ட மாவட்ட  விஜய் மன்ற தலைவராக இருந்த மாஸ்கோ என்பவர், எஸ்.ஏ.சிக்கு ரொம்பவே நெருக்கமானவர். இவரை மாற்றிவிட்டு கதிரேசன் என்பவரை தலைவராக நியமித்தார்.  (பிறகு அவரையும் மாற்றிவிட்டார் என்பது வேறு விசயம்.)
இப்படி எஸ்.ஏ.சியின் பிடியில் இருந்து விஜய் மன்றத்தை விடுவிக்கும்  புஸ்ஸி  ஆனந்தின் அஜெண்டாவுக்கு நல்லதொரு வாய்ப்பு வந்தது. அதுதான், அப்பா எஸ்.ஏ.சி. மீது விஜய்க்கு ஏற்பட்ட எரிச்சல்.
“எஸ்.ஏ.சி. உங்களை தவறாக வழி நடத்துகிறார். அவருக்கு வயதாகிவிட்டதால் தெளிவான முடிவு எடுக்கமுடியவில்லை” என்றெல்லாம் விஜய்க்கு தூபம் போட்டார் புஸ்ஸி ஆனந்த். அதை முழுமனதோடு ஏற்கும் நிலையில் இருந்தார் விஜய்.
இது தெரியாமல், சில மாதங்களுக்கு முன் விஜய்யிடம், “பா.ஜ.க. மேலிடத் தலைவர்கள் பலர் எனக்கு நெருக்கமாகிவிட்டார்கள். அவர்களிடம் பேசிவிட்டேன். டில்லி போய் பிரதமரை சந்திக்கலாம் புறப்படு” என்றார் எஸ்.ஏ.சி.
மோடியுடன் சந்திப்பு
மோடியுடன் சந்திப்பு

ஆனால் விஜய் நோ சொல்லிவிட்டார். “கடந்த தேர்தலின் போது மோடியை சந்தித்தோம். தேர்தலுக்கு  பிறகு அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. மறுபடி பாஜகவா.?” என்று கோபப்பட்ட விஜய், “இன்னும் சில காலத்துக்கு அரசியலே வேண்டாம்!” என்றார் தீர்மானமாக.
“ஒரு வருங்கால முதல்வர் இப்படிப்பேசலாமா” என்று வருத்தப்பட்ட எஸ்.ஏ.சி. எவ்வளவோ மன்றாடியும் விஜய் கேட்பதாய் இல்லை.
அதற்கடுத்த சில நாட்களில் விஜய் வீட்டில் வருமானவரி ரெய்டு நடந்தது. வெகுண்டுவிட்டார் விஜய். “பாஜக மேல்மட்ட தலைவர்கள் உங்களுக்கு நெருக்கம் என்றீர்கள். ஆனால் இப்போது ரெய்டு நடந்திருக்கிறதே.. என்ன செல்கிறீர்கள்..” என்று காட்டமாக எஸ்.ஏ.சியிடம்  கேட்டார்.
பதிலுக்கு எஸ்.ஏ.சியும், “நாம் அந்த கட்சியில் இணையாததால்தான் ரெய்டே நடந்தது. நான் சொல்கிறபடி நீ நடந்துகொண்டிருந்தால் பிரச்சினையே இருந்திருக்காது” என்று எகிறினார்.
இந்த வாக்குவாதம் முற்றிப்போய், காட்டமான வார்த்தைகள் இரு தரப்பிலும் உதிர்க்கப்பட்டன.
அதன் பிறகு கொஞ்சம்  அமைதியாகத்தான் இருந்தார் எஸ்.ஏ.சி. ஆனால் அவருக்குள் இருக்கும்  “அரசியல்வாதி” அத்தனை லேசுபட்டவர் அல்லவே!  மீண்டும் அவர் தன் வேலையைக்காட்டினார்
இரு வாரத்துக்கு முன்பு  மனதை திடப்படுத்திக்கொண்டு மகன் விஜய்யிடம், “வரும் சட்டமன்றத் தேர்தலில்…” என்று ஆரம்பித்தார் எஸ்.ஏ.சி.
அவ்வளவுதான்… முந்தைய சம்பவத்தைவிட மிக அதிகமாகவே காட்டமாகிவிட்டார் விஜய். அவரது கோபத்தைக் கண்டு எகிறி தப்பித்துச் சென்றார் எஸ்.ஏ.சி.
தனக்கு நெருக்கமானவர்களிடம், “அவரை (விஜய்யைத்தான்!) எப்படி எல்லாம் உருவாக்கினேன். சினிமாவில் அவரை ஜெயிக்க வச்ச மாதிரி, அரசியல்லயும் ஜெயிக்க வைக்கணும், அட்லீஸ்ட் ஒரு முதல்வராகவாவது ஆக்கி பார்க்கணும் என்று நினைக்கிறேன். அவர் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாரே” என்று வருத்தப்படிருக்கிறார்.  அதோடு, “அவர் அன்னைக்கு பேசியமாதிரி என்னை இதுவரை யாரும் பேசியதில்லை. மனசுக்கு வருத்தமாக இருக்கிறது. இனி அவருக்கு எந்தவித அட்வைஸும் செய்யப்போவதில்லை” என்று ஆதங்கத்துடன் சொல்லியிருக்கிறார்.
அந்த சம்பவத்துக்குப் பிறகு மகனுடன் பார்மாலிடியாக பேசுவதோடு சரி. வெளியில் தன் மகனை விட்டுக்கொடுக்காவிட்டாலும், மனதில் குமைந்துகொண்டுதான் இருக்கிறார்  எஸ்.ஏ.சி.”
விஜய்யோ, அரசியல் பற்றி சில காலத்துக்கு பேசுவதே இல்லை என்கிற உறுதியுடன் இருக்கிறார்.
பாசமான அப்பாவையும் பிள்ளையுமோ மோதிக்கொள்ள வைத்துவிட்டது அரசியல்!” என்று வருத்தத்துடன் சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
“எப்படியோ..  “வருங்கால முதல்வர்” ஒருவர் குறைந்திருக்கிறார்.. தற்போதைக்கு!” என்ற கிண்டல் குரல்களும் கேட்காமல் இல்லை.
இதற்கிடையே விஜய்யின் “தெறி” படத்தின் இசை வெளியீட்டுவிழா நாளை நடக்கிறது. “அதில்  பாசமான தந்தையான எஸ்.ஏ.சி. கலந்துகொள்ளாமல் இருக்க மாட்டார். அப்போது என்ன பேசப்போகிறார் என்று பார்ப்போம்” என்ற எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரத்தில் எழுந்திருக்கிறது.
எப்படியோ நாளை எல்லாம் “தெறி”ந்துவிடப்போகிறது!