visaranai
போலிஸ், அரசியல் அமைப்பு இவர்களின்  கையில் உள்ள அதிகாரத்தினால் ஏற்படுத்தப் படும் மனித உரிமை மீறலை முகத்தில் அறையும்படி பதிய வைத்திருக்கிறார் வெற்றிமாறன். இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து, ஒரு டாகுமெண்டரி மாதிரி இல்லாமல் சுவாரசியமாக திரைக்கதையை அமைத்து, திரைப்படத்தை இயக்கிய வெற்றிமாறனுக்கும் தயாரித்த தனுஷுக்கும் வாழ்த்துகள். எப்போதோ ஒரு முறை அத்திப் பூத்தார் போலத் தான் இம்மாதிரி திரைப்படங்கள் வெளிவருகின்றன. .
திரு சந்திர குமார் எழுதிய LockUp என்ற கதையினை தழுவி எடுக்கப்பட்டப் படம் விசாரணை. படத்தின் தலைப்பான விசாரணையே படம் எப்படி இருக்கும் என்பதை உணர்த்திவிடுகிறது. செய்யாத குற்றத்துக்காக விசாரணைக் கைதிகளாக துன்புறுத்தப்படும் நான்கு இளைஞர்களின் கதை தான் விசாரணை. போலிசிற்கு மேலதிகாரிகளிடம் வரும் ப்ரெஷர், அரசியல்வாதிகளிடம் இருந்து வரும் இவர்களால் மறுக்க முடியாத உத்தரவுகள், அதனால் அவர்கள் செய்ய முற்படும் தவறான காரியங்கள், அவை ஏற்படுத்தும் விளைவுகள், அதனை சரிக்கட்ட அவர்கள் பலி கடாவாகக் கொடுப்பது என்ன/யாரை என்பது தான் “விசாரணை” படத்தின் கதைக் கரு.
CZ3ttQRWcAEUeo-
இதில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் நூற்றுக்கு நூறு சரியான தேர்வு. ஆந்திரா போலிஸ் ஸ்டேஷனில் ஆரம்பிக்கும் படம் பின் பாதியில் தமிழ்நாடு போலிஸ் ஸ்டேஷனுக்குக் மாறுகிறது. ஆனால் போலிஸ்காரர்கள் நடந்து கொள்ளும் முறை ஆந்திராவானாலும் தமிழ்நாடு ஆனாலும் universally same என்பதை படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அட்டைக்கத்தி தினேஷ், ஆடுகளம் முருகதாஸ், சமுத்திரக்கனி, கிஷோர், தெலுங்கு இன்ஸ்பெக்டராக அஜய் கோஷ், ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் வாழ்ந்து இருக்கின்றனர். மற்ற பாத்திரங்களில் வரும் அனைவரும் மனத்தில் நிற்கின்றனர். அது வெற்றிமாறன் உருவாக்கியுள்ள கதாப்பாத்திரங்களின் அமைப்பிற்கும், நடிப்பை வெளிக் கொண்டுவந்திருக்கும் அவரின் திறனுக்கும் ஒரு சான்று.
கனமான கதைக்கு பின்னணி இசையின் பங்களிப்பு மிக மிகவும்! ஜி.வி.பிரகாஷ் பல இடங்களில் இசையமைக்காமல் அமைதியைக் கொடுத்துப் படக் காட்சிகளின் தீவிரத்தை உணர்த்தியிருக்கிறார். அவரின் இந்த maturityக்கு பாராட்டுகள்.
விசாரணைக் கைதிகளின் பெயர்களின் மூலமும் அவர்களின் சொந்த ஊர்களின் பெயர்களின் மூலமும் பல குறியீடுகளை வைத்துள்ளார் வெற்றிமாறன். இன்னும் சொல்லப் போனால் பல நுட்பமான நுண்ணரசியல் frameக்கு frame உள்ளது என்பது படத்தை ஊன்றிப் பார்த்தால் தெரியும். அதனால் தான் இந்தப் படம் 72 Venice Film festivalல் Amnesty International Italia Award வாங்கியுள்ளது.
CZ3bvblWEAE686h
எதையும் sugar coat பண்ணாமல் உள்ளதை உள்ளபடி காட்டியுள்ளார் வெற்றிமாறன். அதனால் ஒவ்வொரு சீனும் நம் மனத்தில் பரிதவிப்பை ஏற்படுத்துகிறது. ஏழை பணக்காரன் என்றில்லாமல் போலிஸ் பிடியில் சிக்கிக்கொண்டால் நம் தனிப்பட்ட உரிமையை நினைத்துக் கூட பார்க்கமுடியாது என்பதை உணர்த்துகிறார் இயக்குநர். இது நம் நாட்டுக்கு மட்டும் பொது அல்ல பல்வேறு நாடுகளிலும் நடக்கும் அவலம் தான். அதிகாரத்தில் இருக்கும் ஒவ்வொருவனும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எந்த அளவுக்கும் போக முற்படுவான் என்பதை நாம் பார்க்கிறோம்.படத்தின் க்ளைமேக்சும் போலிசின் சூதையே காட்டுகிறது.
பொழுதுபோக்கு அம்சங்களுடன் வரும் படங்களுக்கு நடுவில் இந்த மாதிரி திரைப் படங்களையும் வரவேற்று வெற்றி பெற வைக்க வேண்டியது தமிழ் ரசிகர்களாகிய நம் கடமை என்றே சொல்லுவேன்.
வாழ்த்துகள் team விசாரணை!
12665906_10153955035689048_2101609878_n
சுஷிமா சேகர் எழுதிய விசாரணை திரை விமர்சனம்