2

வாக்காளர் பட்டியலில் அனைவரும் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ள வேண்டும். எனவே இதுவரையில் பெயர் சேர்க்காதவர்கள் ஏப்ரல் 15–ந் தேதிக்குள் பெயர் சேர்க்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் விண்ணப்பம் செய்யலாம். ‘ஆண்டிராய்டு’ செல்போன் மூலம்   tnelectionplaystore    என்ற ‘ஆப்’பை பதவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

மேலும் புதிய முயற்சியாக எளிய முறையில் வாக்காளர் அட்டை பெற வாக்காளர் சேவை மையம் என்ற மையத்தை வரும் 14–ந் தேதியில் (திங்கட்கிழமை) இருந்து தொடங்கப்படுகிறது.

இந்த மையம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தாசில்தார் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் (ஆர்.டி.ஓ), கலெக்டர் அலுவலகம் ஆகிய 363 இடங்களில் தனி அறையில் செயல்படும்.

ஒவ்வொரு மையத்திலும் இரண்டு அலுவலர்கள் இருப்பார்கள். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், திருத்தங்கள் செய்தல், புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், பழைய அட்டையை மாற்றுதல் போன்ற தேவைகளுக்கு இந்த மையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவேண்டும் என்றால் அந்த நபரோ அல்லது அவரது குடும்ப உறுப்பினரோ வரவேண்டும். புதிதாக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கிறவர்களுக்கு அது இலவசமாக வழங்கப்படும்.

அட்டையை மாற்ற வேண்டுமென்றால் ரூ.25 கட்டணம் செலுத்தவேண்டும்.

ஆன்லைனில் அட்டைக்காக விண்ணப்பித்து அதை வாக்காளர்கள் பெறுவதற்கு புதிய முறையை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி, தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பித்தால் ரூ.25–ம், அதோடு சேர்த்து ரூ.40–ம் செலுத்த வேண்டும். ரூ.65 செலுத்தியவர்களுக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் அந்த அட்டை அவர்களின் முகவரிக்கு வந்து சேர்ந்துவிடும்.

மேலும் வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயர் இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிந்துகொள்ள 1950 என்ற எண்ணில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து எஸ்.எம்.எஸ்.(குறுந்தகவல்) அனுப்பினால், அனுப்பப்படும் செல்போன் எண்ணுக்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் பதில் எஸ்.எம்.எஸ். வரும்.

அதில், வாக்காளர் பெயர், முகவரி, வாக்குப்பதிவு மையம் போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று தங்கள் வாக்கு மையத்தில் எவ்வளவு கூட்டம் இருக்கிறது என்பதை அறிந்து, நெரிசல் இன்றி வாக்குப்பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, 1950 என்ற எண்ணில் ‘கியூ’ என்று பதிவு செய்து வாக்காளர் அடையாள அட்டை எண்ணை குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ். அனுப்பினால், அனுப்பப்படும் செல்போன் எண்ணுக்கு வாக்கு மையத்தில் வாக்குப்பதிவு செய்ய இவ்வளவு பேர் வரிசையில் நிற்கிறார்கள் என்று உடனடியாக பதில் குறுந்தகவல் வரும்.

–  என்.பாலகிருஷ்ணன்.