சகாயம் ஐ.ஏ.எஸ்.
கிரானைட் முறைகேடு மூலம் அரசுக்கு மிகப்பெரிய அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே , இது குறித்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்ய வேண்டும் என்று சட்ட ஆணையர் சகாயம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன் கோரினார்.
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற முதல் அமர்வு,,இந்த முறைகேடுகளை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக சட்ட ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை நியமித்து உத்தரவிட்டது.
இதையடுத்து கிரானைட் முறைகேடுகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்த சகாயம் குழு, கடந்த நவம்பர் 23-ம் தேதி இறுதி அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அறுநூறு பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், கிரானைட் முறைகேடு தொடர்பாக 22 பரிந்துரைகள் அளித்திருப்பதாகவும், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த கிரானைட் முறைகேட்டால் அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்குமேல் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த அறிக்கையை படித்துப் பார்த்து பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என்று அரசு தரப்பில் கோரப்பட்டது. ஆகவே, நான்கு வாரம் அவகாசம் அளித்து உயர் நீதிமன்ற முதல் அமர்வு உத்தரவிட்டது. இந்த நிலையில், வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது சகாயம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன், ‘‘மதுரை மாவட் டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகள் மூலம் அரசுக்கு ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நரபலி கொடுக்கப்பட்டு மனித உயிர்களும் காவு வாங்கப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரிக்க உயர் நீதிமன்றம் பரிந்துரைக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார்.
சட்ட ஆணையர் சகாயத்தின் ஆய்வு அறிக்கையை படித்துப் பார்த்து பதில் அளிக்க மேலும் மூன்று வாரம் கால அவகாசம் தேவை என்று தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி கேட்டுக்கொண்டார்.
டிராஃபிக் ராமசாமி தரப்பு வழக் கறிஞர் ராஜாராமன் வாதிடும்போது, ‘‘மதுரை மாவட்டம் மட்டுமின்றி மற்ற மாவட்டங்களில் நடந்துள்ள கிரானைட் முறைகேடுகள் குறித்தும் ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும்’’ என்று கோரினார்.
தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், ‘‘மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து முடிக்கவே இவ்வளவு காலம் ஆகியிருக்கிறது. முதலில் மதுரை மாவட்ட விவகாரத்தை முடிப்போம். பிறகு மற்ற மாவட்டங்கள் குறித்து பார்க்கலாம்’’ என்றார்.
பிறகு, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
“சகாயத்தின் ஆய்வு அறிக்கையில் பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்டிருப்பதால் வெவ்வேறு துறைகளின் அதிகாரிகளை பதில் அளிப்பதற்காக அழைத்திருக்கிறோம். ஆய்வறிக்கை குறித்து பதில் அளிக்க மேலும் மூன்று வாரம் அவகாசம் வேண்டும் என்று அரசுத் தரப்பில் கோரப்பட்டுள்ளது. வெள்ள நிவாரணப் பணிகளுக்கு அலுவலர்கள் சென்றுவிட்டதால், சட்ட ஆணையத்தின் நடவடிக்கை களை முழுமையாக முடிப்பதற்காக சில நபர்கள் தேவைப்படுகின்றனர் என்று சட்ட ஆணையர் சகாயம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, வழக்கு விசாரணை பிப்ரவரி 15-ம் தேதிக்கு தள்ளிவைக்கப் படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்..