0
“ஜெயலலிதாவிடமிருந்து 1500 கோடி…” என்று தனியார் டிவி பேட்டியில் கேட்கப்பட்டதும்,  வைகோ வெளியேறியது பரபரப்பாக பேசப்படுகிறதே. கேட்டது தவறா, வெளியேறியது தவறா?
மூர்த்தி, ஈரோடு
பல விசயங்கள் சரி, தவறு என வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று முடிவுக்கு வந்துவிட முடியாது.
தங்களது தனிப்பட்ட கேள்வியை ஊடகவியாளர்கள் கேட்பதில்லை. சம்பந்தப்பட்ட தலைவர் மீது பிறர் வைக்கும் விமர்சன், மக்களின் கருத்து.. இவற்றின் அடிப்படையிலேயே கேள்விகள் வைக்கப்படுகின்றன.  ஆகவே கேள்வி கேட்கப்பட்டது தவறில்லை.
இன்னொரு புறம், வைகோ பதில் சொல்லியிருக்க வேண்டும் என்பதே என் கருத்து. ஆனாலும் ஒரு விசயத்தை யோசித்துப்பாருங்கள். நேர்காணல் நடந்தது, வைகோ கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில்.
தன்னை நோக்கி வீசப்பட்ட கேள்வியால் ஆத்திரமாகி, “இது என் கட்சி அலுவலகம். வெளியே போ” என்று அவர் சொல்லவில்லை. தனது கட்சி அறையில் இருந்து,தானே வெளியேறியிருக்கிறார். இது நாகரீகமான செயல்தான்.
இதுவே வேறு சில அரசியல்கட்சியின் தலைமையகத்தில் அந்த கட்சியின் அலுவலகத்தில் நடந்திருந்தால், அந்த ஊடகவியலாளரின் கதி என்ன ஆகியிருக்கும்?
“குறிப்பிட்ட ஊடகவியலாளரை எதிர்பாராத விதமாக அந்த கட்சியினர் சிலர் தாக்கிவிட்டார்களாம். அவர் எடுத்த வீடியோவும் பறிக்கப்பட்டதாம்” என்றுதான் செய்தி வந்திருக்கும்.  இதற்கு சில கண்டனங்கள் கிளம்பி அடங்கியிருக்கும்.
ஏன், இதை பாராட்டியும்கூட சமூகவலைதங்களில் பலர் பதிவிடக்கூடும். “ச்சீ, அறிவிருக்கா, மனநோயாளி, முட்டாள்” என்றெல்லாம் ஊடகவியலாளர்களை வி.ஐ.பிக்கள் ஏசியதும் அதை சமூக ஊடகங்களில் பலர் பாராட்டி மகிழ்ந்ததும் நடந்த கதைதானே!
அந்த வகையில் வைகோ  தனது எதிர்ப்பை வெளிப்படுத்த வெளியேறியது நாகரீகமான செயல்தான்.

ராமண்ணா
ராமண்ணா

 “ஜெயலலிதாவிடம் 1500 கோடி வாங்கியதாக சொல்லப்படுகிறதே..” என்ற கேள்விக்கு ஆத்திரமாக பேட்டியில் இருந்து வெளியேறிய வைகோ, “அவரிடம் கார்பரேட் கம்பெனியிடம் நீங்கள் மாதம் தோறும் 5 லட்சம் வாங்குகிறீர்களாமே என்று நான் கேட்டிருந்தால் என்ன செய்திருப்பார்” என்று வைகோ கேள்வி எழுப்பியிருக்கிறாரே?
– கஸ்தூரி, புதுகை
வைகோவின் பேச்சு அநாகரீகமானது.  பரஸ்பரம் அரசியல்வாதிகள்தான் தன் மீதான குற்றச்சாட்டுக்களுகுக பதில் கூறாமல், “நீ வாங்கவில்லையா..” என்பார்கள். ஊடகவியலாளரையும் சக அரசியல்வாதி போல நினைத்து பேசுவது தவறு.  பதிலுக்கு பதில் கேள்வி கேட்க விரும்பும் அரசியல்வாதிகள் தங்கள் பொறுப்புகளை விட்டுவிட்டு நிருபர்கள் ஆகிவிடலாம்.
 
எந்த அரசியல்வாதியை நினைத்து வியக்கிறீர்கள்?
– க. முருகன், மதுரை
எல்லா அரசியல்வாதிகளுமே நம்மை வியக்க வைப்பவர்கள்தான். ஆனால் சமீபத்தில் வியக்க வைத்தவர் வைகோதான். தன்னை நோக்கி “1500 கோடி” கேள்வி கேட்கப்பட்டதால் ஆத்திரமான அவர், “ஒரு பெண்ணைப் பார்த்து நீ கற்புள்ளவளா  என்பதைப்போன்ற கேள்வி அது” என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.
மெத்தப்படித்த வைகோ, இதற்கு வேறு உதாரணம் சொல்லியிருக்கலாம். “கற்பு என்கின்ற வார்த்தையானது மனித சமூகத்தில் சரிபகுதியான எண்ணிக்கையுள்ள பெண்களை அடிமைப்படுத்தி வைப்பதற்காக மாத்திரமே உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது.  புருஷர்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது பாஷைகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்குக் காரணம் ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை” என்றார் பெரியார்.
உலக வரலாற்றையெல்லாம் கரைத்துக்குடித்திருக்கும் வைகோ, தனது வழிகாட்டி என சொல்லிக்கொள்ளும் பெரியாரின் கருத்துக்களையும் படிக்க வேண்டும். படித்திருந்தால் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும். ஆனால் வைகோவோ, கூட்டத்துக்கு கூட்டம், ராமாயணம், மகாபாரதம் என்று இதிகாசங்களில் இருந்துதான் உதாரணங்களை அள்ளிவிடுகிறார். தற்போது கூட பாண்டவர் அணி என்கிறார்.
கற்பு பற்றி பேசுவது, தனது ஊரில் (டாஸ்மாக் மூடும்) பிரச்சினை ஏற்பட்டபோது “நீ ஆம்பளயா இருந்தா என்னை சுடு” என்றது, ஓரினச்சேர்க்கை குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்தது என்று வைகோவுக்குள் ஒரு பழம்பஞ்சாங்க மனிதர் இருக்கிறார். இந்த முதிர்ந்த வயதிலாவது சிந்தித்து “அந்த பழம்பஞ்சாங்க மனிதரை” வைகோ வெளியேற்ற வேண்டும்.