கோவை பேருர் அருகே இறந்த தாய் யானையின் உடலை புதைக்க விடாமல் குட்டி யானை  தாயின் உடலை சுற்றிவந்தது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
elephant
கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசிபுரம் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை குட்டியுடன் சுற்றி திரிந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  வைதேகி நீர்வீழ்ச்சி அருகே ரோட்டில் சென்று கொண்டு இருந்தபோது தாய் யானை  சுருண்டு விழுந்தது. இதையறிந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தேரிவித்தனர்.
யானைக்கு சிகிச்சை அளிக்க கால்நடை டாக்டர்கள் வருவதற்குள் அந்த பெண் யானை அந்த இடத்திலேயே இறந்தது.
இறந்த யானையின் அருகில் 2 வயதே ஆன ஆண் குட்டி யானை தாயின் உடலை சுற்றி சுற்றி வந்தபடி அங்கேயே நின்றது. இறந்த யானையின் துதிக்கையை பிடித்து இழுத்தபடி இருந்தது. யானைக்குட்டியின் இந்த பாச போராட்டத்தை பார்த்த வனத்துறையினரும், கிராம மக்களும் கண்கலங்கினார்கள். குட்டி யானை  தாய் யானையின் உடலை விட்டு அகலாமல் அங்கேயே சுற்றி சுற்றி வந்ததால் பிரேத பரிசோதனை செய்ய முடியாமல் தவித்தனர். இறந்த யானை அருகில் யாரையும் செல்லவிடாமல் விரட்டியடித்தது.
இதையடுத்து கும்கி யானை பாரி வரவழைக்கப்பட்டு குட்டி யானையை விரட்ட முயன்றார். ஆனால் குட்டி யானை பாகனையும், வனத்துறையினரையும் எதிர்த்து விரட்டியது. சுமார் 4 மணி நேரம் போராடி குட்டி யானையை காட்டுக்குள் விரட்டினர். அதன்பின்பே இறந்த தாய் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.