karuna
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள உகாதித் திருநாள் வாழ்த்துச் செய்தியில், ’’திராவிட மொழிகள் குடும்பத்தின் மூத்த, முதன்மை மொழியான தமிழ் மொழியோடு மிக நெருங்கிய தொடர்புடைய தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள், புத்தாண்டு நாளாக உகாதித் திருநாளை ஏப்ரல் 8ஆம் நாள் வெள்ளிக் கிழமையன்று கொண்டாடுகின்றனர் என்பது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
தண்ணீர்ப் பற்றாக்குறை மிகுந்த மாநிலமாகிய தமிழகத்தின் தண்ணீர்த் தேவையை நிறைவு செய்வதற்காக ஆந்திர மாநிலமாகட்டும், கர்நாடக மாநிலமாகட்டும், கேரள மாநிலமாகட்டும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று அந்தந்த மாநிலங்களின் முதலமைச்சர்களோடு மிகுந்த கனிவோடு பேச்சு வார்த்தைகள் நடத்தி, அனைவரிடமும் இணக்கமான நல்லுறவு பேணி உதவிகோரி வந்தது தி.மு.க. ஆட்சி என்பதை யாரும் மறந்திட முடியாது.
1983ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில், பிரதமர் இந்திரா காந்தி முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்ட தெலுங்கு-கங்கை திட்டத்தை நிறைவேற்றிட 1989ஆம் ஆண்டில் கழகம் ஆட்சிக்கு வந்தபோது ஆந்திர மாநிலத்தின் அந்நாளைய முதலமைச்சர் என்.டி.ராமராவ் அவர்களையும், அவருக்குப்பின் 1990இல் ஆந்திர முதலமைச்சர் சென்னா ரெட்டி அவர்களையும் சந்தித்து அத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியதுடன்; தமிழகத்தின் பங்காக செலுத்த வேண்டிய நிதிகளை வழங்கினோம்.
1991 ஜனவரியில் கழக ஆட்சி கலைக்கப்பட்டபின் வந்த அ.தி.மு.க. ஆட்சி அந்தத் தெலுங்கு-கங்கைத் திட்டமென்னும் கிருஷ்ணா நீர்த் திட்டத்தை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டவில்லை. ஆனால், அடுத்து 1996இல் ஆட்சிக்கு வந்தபின் ஆந்திர மாநிலம் சென்று அன்றைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்களிடம் பேசி, திட்டத்தை விரைவுபடுத்தி சென்னைக்குக் கிருஷ்ணா நீரைக் கொண்டு வந்து சென்னை மாநகர மக்களின் தாகம் தணித்தது தி.மு.க. ஆட்சி.
இதைப்போல, ஒவ்வொரு காலகட்டத்திலும் மற்ற மாநில முதலமைச்சர்கள் ஒத்துழைத்தாலும், ஒத்துழைக்காவிட்டாலும் கவுரவம் பார்க்காமல் அண்டை மாநிலங்களின் முதலமைச்சர்களைச் சந்தித்து தமிழக நலத்திற்காகப் பாடுபட்ட தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் வாழும் ஆந்திர, கர்நாடக மாநிலங்களின் மக்கள் நலன்களில் என்றும் குறை வைத்ததில்லை.
தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள் வேதனை அடையக்கூடிய வகையில் 2001இல் அமைந்த அ.தி.மு.க. அரசு, உகாதித் திருநாளுக்கான அரசு விடுமுறையை ரத்து செய்தது. ஆனால், தெலுங்கு கன்னட மக்களின் நலம் நாடி மீண்டும் உகாதித் திருநாள் விடுமுறையை நடைமுறைப்படுத்தியது 2006இல் அமைந்த தி.மு.க. ஆட்சி.
உலகப் பொதுமறையாம் திருக்குறளைப் படைத்தளித்த அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச் சிலை பெங்களூருவில் நிறுவப்பட்டு, பதினெட்டு ஆண்டு காலம் மூடிக் கிடந்த நிலையில், கருநாடக மாநில அரசோடு நெருங்கிப் பேசி, நல்லிணக்கம் பேணி, அங்கு நடைபெற்ற விழாவில் அச்சிலையைத் திறந்து வைத்தது தி.மு.க. ஆட்சி.
அதுபோலவே, கன்னட மொழிக் கவிஞர் சர்வக்ஞர் அவர்களின் சிலையை சென்னை மாநகரில் நடைபெற்ற விழாவில், கருநாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா அவர்களைக் கொண்டு திறந்து வைத்ததும் தி.மு.க. ஆட்சிதான்.
தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்களின் குழந்தைகள் பயில உரிய பாட நூல்களைத் தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் தயாரித்து வழங்கி, அவர்களின் மொழி உணர்வுகளுக்கு மதிப்பளித்து வந்ததும் தி.மு.க. ஆட்சியே.
இப்படித் தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் அண்டை மாநில மக்களையும் உறவினர்களாக, உடன் பிறப்புகளாகவே கருதி வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அருமை உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த உகாதித் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.