மொபைல் வாலட்
மொபைல் வாலட்

கொல்கத்தா
‘மொபைல் வாலட்’ பணப்பரிமாற்றத்தில் கடந்த 4 மாதங்களில் மட்டும் ரூ.8.6கோடி மோசடி செய்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் 5 பேரை கொல்கத்தா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வங்கிக் கணக்கில் பணத்தை போட்டு வைத்திருப்பதுபோல பணத்தை டிஜிட்டல் முறையில் வைத்திருப்பதுதான் மொபைல் வாலட்.  இதற்கு ஸ்மார்ட் போனும், அதில் இணைய வசதியும் இருப்பது அவசியம். அடுத்ததாக மொபைல் வாலட் சேவை அளிக்கும் நிறுவனத்தின் செயலியை  செல்போனில் நிறுவி அதில் தேவையான பணத்தை வங்கிக் கணக்கு, கிரெடிட், டெபிட் கார்டுகளில் இருந்து இதில் மாற்றி வைத்திருக்க வேண்டும். அப்படி உள்ள மொபைல் வாலட் பணத்தைத்தான் இந்த மாணவர்கள் மோசடி செய்துள்ளனர்..
புதிய தொழில்நுட்பத்தை  இதுபோன்று தவறாகப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் இளம் தலைமுறையின் நடவடிக்கைகள் பலரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.
தனியார்துறை வங்கி ஒன்று கடந்த டிசம்பர் மாத இறுதியில் தமது மொபைல் வாலட் பணப்பரிமாற்றத்தை தொடங்கியது. ஆனால் இந்த தொழிநுட்பத்தில் உள்ள அடிப்படைக் குறைபாடுகளை அந்த வங்கி சரிவரத் தெரிந்து கொள்ளாமல் இப்பணப்பரிமாற்றச் சேவையை வழங்கத் தொடங்கியது.
அதாவது ஒரு வாடிக்கையாளர் தனது மொபைல் வாலட் கணக்கிலிருந்து இன்னொருவர் கணக்கிற்கு பணப்பரிமாற்றம் செய்யும்போது அவர் அறிந்தோ அறியாமலோ இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டால் பணம் அந்த கணக்கில் வரவு வைக்கப்படமாட்டாது. ஆனால் இதனால் பணம் செலுத்தியவருக்கு எந்த இழப்பும் ஏற்படாது. அதற்குப் பதிலாக அதற்குரிய பணத்தை மொபைல் வாலட் பரிமாற்ற சேவை நடத்தும் வங்கியே செலுத்திவிடும். இதனை ஒரு மோசடிக்கான  வாய்ப்பாக இந்த 5 மாணவர்களும் பயன்படுத்திக் கொண்டனர். ரூ.8.6 கோடி மோசடி வெளிச்சத்துக்கு வரும் வரை இதனை ஒரு மோசடியாகவே அந்த மொபைல் வாலட் சேவை வங்கி கருதவில்லை.
ஆனால் இதுதொடர்பாக சந்தேகமடைந்த வங்கி புலனாய்வுத்துறையின் மோசடிப்பிரிவு களத்தில் இறங்கி விசாரணையை துவக்கியது. அதில் இது மோசடிதான் என்பதை கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக 9 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 5 பேர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிட்த்தக்கது.
 
 
 
துணிச்சலான இந்த மோசடிக்கு உதவும் நோக்கில் இந்தக் கும்பல் முர்ஷிதாபத் மாவட்ட எல்லைப்பகுதியில் ஆயிரக்கணக்கான சிம் கார்டுகளையும் பலருக்கும் விநியோகித்துள்ளது. இந்த சிம் கார்டுகளை வைத்துத்தான் வங்கி கணக்குகள் துவங்க முடியும் என்று அப்பகுதியில் உள்ள அப்பாவி கிராம மக்களுக்கு கொடுத்துள்ளனர். அப்படி மொபைல் வாலட் கணக்கை துவங்கும் திட்ட்த்தில் தங்கள் பெயரினை பதிவு செய்தால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் இந்த மோசடிக் கும்பல் அறிவித்திருந்த்து.
இந்த மோசடிக்கு மூளையாகச் செயல்பட்டவன் ஜூவல் எனும் ஹபிபூர் ரஹ்மான் என்பது தெரியவந்துள்ளது. இவன் முர்ஷிதாபாத்தில் செல்போன் சிம் கார்டுகள் வழங்கும் ஏஜென்சியாக இருந்து வருகிறான். சிம்கார்டுகளுக்காக வழங்கப்பட்ட  சான்று அட்டைகளை சரிபார்க்காமலே இவன் இணைப்புகள் வாங்கி கொடுத்துள்ளான். இவன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 5 பேர் உதவியுடன் இந்த மோசடியில் ஈடுபட்ட்து தெரியவந்துள்ளதாக முர்ஷிதாபாத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நவீன தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தி ரூ.8.6 கோடி மோசடியில் மாணவர்கள் ஈடுபட்டிருப்பது பலதரப்பினரையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.