மேற்கத்திய இசை கேட்ட சிறுவனை ஐ.எஸ். பயங்கரவாதிகள், கழுத்தை வெட்டிக்கொன்றனர். கொலை செய்யும் படத்தை சமூக இணையதளங்களில் பரவவிட்டுள்ளனர். இது உலகம் முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் இருக்கும் மோசூல் என்ற நகரில் அய்ஹாம் ஹுசைன்(15) என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்தான்.  தந்தையின் கடைக்கு அவ்வப்போது சென்று  அவருக்கு உதவி வந்தான்.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னால் தந்தையின் கடைக்கு சென்ற சிறுவன், மேற்கத்திய இசையை ’CD Player’-ல் ரசித்து கேட்டிருக்கிறான். அந்தப்பக்கம் ரோந்து வந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த இருவர் இதைப் பார்த்துவிட்டனர்.  “ஷரியா சட்டப்படி பாடல் கேட்பது தவறு” என்று கூறி, அந்த சிறுவனைப்பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தினர்.
விசாரணைக்குப் பிறகு அளிக்கப்பட்ட தீர்ப்பில், ’’மேற்கத்திய கலாச்சரம் என்பது இஸ்லாமியத்திற்கு எதிரானது. தொலைக்காட்சி பார்ப்பது, மேற்கத்திய இசையை கேட்பது உள்ளிட்டவைகள் கடும் தண்டனைக்கு உள்ளானது.
எனவே, இஸ்லாமியத்திற்கு எதிராக செயல்பட்ட சிறுவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டது.
தீர்ப்பு அளிக்கப்பட்டதும்,  சிறுவனின் கண்கள் கட்டப்பட்டு  பொதுமக்கள் முன்னிலையில் கொண்டு வரப்பட்டான்.
பின்னர், நூற்றுக்கணக்கான மக்கள் வேடிக்கை பார்க்க சிறுவனின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பிறகு அந்த சிறுவனது தலையும், உடலும் அவனது பெற்றோரிடம்  ஒப்படைக்கப்பட்டது.
மேற்கத்திய இசையை கேட்டதற்காக அப்பாவி சிறுவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.