உலன் உதே: ரஷ்யாவில் நடந்துவரும் உலக பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் மேரி கோம், அரையிறுதிப் போட்டியிலேயே தோல்வியடைந்ததால், அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. ஆனால், அதிகப் பதக்கங்கள் வென்றவர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

இந்தியாவின் மேரிகோம் ஏற்கனவே 6 முறை உலக சாம்பியன்ஷிப் தங்கம் வென்றவர். எனவே, 7வது முறையாக தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இவர் 51 கிகி எடைப்பிரிவில் கலந்துகொண்டார்.

அரையிறுதிப் போட்டியில் துருக்கி நாட்டின் புசெனாஸ் என்பவரைச் சந்தித்தார். ஆனால் அவரிடம் 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கத்தோடு திருப்தியடைந்து நாடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

இப்போட்டியில் இவர் வெண்கலம் வென்றாலும், வேறுஒரு சாதனையை இதன்மூலம் இவர் செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 8 பதக்கங்களை வென்ற வீராங்களை என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்குமுன் வேறு யாரும் இந்த சாதனையைச் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.