maniyan-with-tvs

 

“தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டதும், தமிழக அரசியல் முழுதும் மதுவிலக்கு பக்கம் சென்றுவிட்டது. ஆதரித்தும், எதிர்த்தும் பல தலைவர்கள் கருத்துக்களைத் தெரிவித்தார்கள். அவர்களில், “மதுவிலிருந்து வரும் வருமானம் இல்லையென்றால், மாற்று திட்டம் என்ன” என்று கேட்டு எதார்த்த நிலையை வெளிப்படுத்தியவர் காந்திய மக்கள் கட்சியின் தமிழருவி மணியன். அவரது அறிக்கையில், “தமிழக அரசின் ஆண்டு வருவாய் ஒரு லட்சத்து நாற்பத்தாராயிரம் கோடி ரூபாய். இதில் மானியம், இலவசம், அரசு ஊழியர் ஊதியம், ஓய்வூதியம், வாங்கிய 2 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட கடனுக்கு வட்டி ஆகிய செலவினங்களுக்கு ஒதுக்கப்படுவது 1.36 ஆயிரம் கோடி. வளர்ச்சித் திட்டங்களுக்கு எஞ்சுவது 6000 கோடி ரூபாய்க்கும் குறைவு. இந்த நிலையில் டாஸ்மாக் வருவாய் 26000 கோடி ரூபாய் இழப்புக்குப் பின்பு அதை எந்த வகையில் ஈடு செய்து அரசின் நிதி நிலையை மேம்படுத்துவார் என்பதை கருணாநிதி விளக்க வேண்டும்” என்று தமிழருவி மணியன் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் தமிழருவி மணியனிடம் சில கேள்விகளை வைத்தோம். இதோ.. அவர் நமது பத்திரிகை டாட் காம் இதழுக்கு அளித்த பேட்டி…

உங்கள் அறிக்கையில் எதார்த்த நிலையைச் சொல்லியிருக்கிறீர்கள். இது ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்குத் தெரியாதா?

(சிரிக்கிறார்) அதற்கான பதிலும் அந்த அறிக்கையிலேயே இருக்கிறதே.. “ஆட்சி நாற்காலியைக் கைப்பற்றுவதற்கு, மக்களை ஏமாற்றும் தேர்தல் உத்திகளுள் ஒன்றாகவே இந்த அறிவிப்பும் இருக்கக்கூடும்” என்று சொல்லியிருக்கிறேனே…! “வாக்குறுதிகளை வழங்குவதும், பின்பு அவற்றிற்கு நேர்மாறாக நடப்பதும் கருணாநிதியின் கடந்த காலச் சரித்திரம் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்” என்பதையும் குறிப்பிட்டிருக்கிறேன்.

ஆனால் மதுவிலக்குக்காக தொடர்ந்து குரல்கொடுத்துவருவதோடு, நடைபயணமும் மேற்கொண்ட வைகோவும், கருணாநிதி அறிக்கையை ஆதரித்திருக்கிறாரே..

அவர், திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொளளப்போகிறார். கூட்டணி தலைவர் சொல்வதை ஏற்றத்தானே ஆக வேண்டும்?

நீண்ட நாட்களாக மதுவிலக்கு குறித்து பேசிவருகிறார் ராமதாஸ். அவரும், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.. முதல் கையெழுத்து மதுவிலக்கு உத்தரவில்தான் போடுவோம்” என்கிறாரே.

அதெல்லாம் நடக்காத விசயம்… மதுக்கடை இயங்கும் நேரத்தைக் குறைக்கிறோம், பார்களை மூடுகிறோம் என்று வேண்டுமானால் உத்தரவிடலாமே தவிர, முழு மதுவிலக்கு என்பது சாத்தியமே இல்லை.

பிறகு எந்த தைரியத்தில் ராமதாஸ் அப்படிச் சொல்கிறார்?

(சிரிக்கிறார்) ஆட்சிக்கு வரப்போவதில்லை என்கிற தைரியத்தில்தான்!

ஆனால்.. வருங்கால தமிழக முதல்வர் என்று அன்புமணியை முன்னிறுத்தி ஏராளமான விளம்பரங்கள் செய்யப்படுகிறதே..

விளம்பரங்கள் செய்தால் முதல்வர் ஆகிவிட முடியுமா..? தனித்து நின்று ஆட்சியைப் பிடிப்பது என்பது குதிரைக்கொம்பு.

அன்புமணி உங்களை சிலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறார். அவரிடம் இந்தக் கருத்தைச் சொன்னீர்களா..

ஆமாம்.. பாமகவின் இப்போதைய நிலையில் இரண்டு முக்கியமான தடைகள் இருக்கின்றன. முதல்வர் வேடாபாளர் என்று முன்னிறுத்தி கூட்டணி அமைத்தால் எந்த கட்சியும் பாமகவுடன் வராது. இரண்டாவது தடை.. தமிழகத்தில் கிட்டதட்ட ஒரு கோடி தலித் மக்கள் வசிக்கிறார்கள். அவர்களுக்கு எதிரான கட்சி என்ற முத்திரை பாமகவுக்கு இருக்கிறது. ஆகவே பாகம தனித்து நின்று வெற்றி பெறுவதற்கோ நீங்கள் முதல்வராவதற்கோ வாய்ப்புகள் மிக மிக மிகக் குறைவு என்று அவரிடமே சொல்லியிருக்கிறேன்.

சரி, மீண்டும் மதுவிலக்குக்கு வருவோம். முழுமையான மதுவிலக்கு என்பது சாத்தியமே இல்லையா…

நிச்சயமாக சாத்தியமே இல்லை. மதுவினால் ஏற்படும் தீமைகளை மிக மிகக் குறைக்கலாம். ஆனால் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை. பழகிவிட்ட எந்த ஒரு கெட்டபழக்கத்தையும் ஒரே நாளில் விட்டுவிட முடியாது. அடுத்தது திடுமென முழு மதுவிலக்கு என்றால், அரசை நடத்த வேறு இனங்களில் இருந்து வருமானம் வரவேண்டுமே..

வேறு என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?.

நான்கு விசயங்களை மாநில அரசு செயல்படுத்த ஆரம்பித்தால் போதும். படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதோடு, வருமானத்தையும் பெருக்கலாம். மூன்ற வருடங்களுக்கு முன்பே, மாற்றுத் திட்டம் குறித்து மாநில அரசுக்கு தெரிவித்தேன். அப்போது ஒரு யூனிட் மணலை 300 ரூபாய்க்கு அரசு தனியாருக்குகொடுத்தது. அவர்கள் கைமாற்றி 3000 ரூபாய்க்கு மக்களுக்கு விற்றார்கள். இப்போது இன்னும் அதிக விலை. ஆகவே மணல் எடுப்பதிலிருந்து விற்பது வரை அரசே செய்ய வேண்டும். மது விற்கும் மணல் விற்றால் என்ன? கிரானைட் விற்பனையை கிட்டதட்ட மதுரை பி..ஆர்.பி. நிறுவனம் ஏகபோகம் செலுத்தி கொள்ளையடிக்கிறது. கிராணைட் தொழிலை அரசுடமைகாக வேண்டும். இதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு..

அதே போல, கார்னெட்! தூத்துகுடியிலிருந்து கன்னியாகுமரி வரை கடற்கரை எல்லாம் வைகுண்டசாமி கண்ட்ரோலில் இருக்கிறது. அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு கப்பத்தைக் கட்டி அவர்கள் கொள்ளையடிக்கிறார்கள். இந்த கார்னெட்டையும் அரசே எடுத்துக்கொள்ள வேண்டும்..

இன்னொரு முக்கியமான நடவடிக்கையும் எடுக்க வேண்டும். கருப்பு பணம் அதிக அளவில் விளையாடுவது ரியல் எஸ்டேட் தொழிலில்தான். அரசு வழிகாட்டு மதிப்பு, சந்தை மதிப்பு என்று இரண்டு இருக்கறது. ஒரு இடத்தை ஒரு கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டு, அறுபது லட்சத்துக்கு விற்றதாக ரிஜிஸ்டர் செய்கிறார்கள். இதநால் அந்த அறுபது லட்சத்துக்கு மட்டும்தான் அரசுக்கு வரி கிடைக்கும்..

ஓய்வு பெற்ற ரிஜிஸ்டர் ஆபீசர் ஒருவருடன் பேசினேன். “வழிகாட்டி மதிப்பு, சந்தை மதிப்பு இரண்டுக்குமான வித்தியாசத்தை அகற்றி, உண்மையில் விற்கப்படும் தொகைக்கு வரி வசூலித்தால், அரசுக்கு ஆண்டுக்கு 8000 கோடி ரூபாய் கிடைக்கும்” என்றார்..

மேற்கண்ட நான்கு விசயத்தையும் லஞ்ச, ஊழல் இன்றி மாநில அரசு செய்யுமானால், மதுவால் வரும் வருமானத்தைவிட அதிகமான வருமானம் அரசுக்கு கிடைக்கும். மதுவிலக்கையும் இது போன்ற வருமானத்தைப் பெருக்கும் வழியையும் படிப்படியாக செய்யத்துவங்க வேண்டும். அப்படிச் செய்தால் பத்து ஆண்டுகளில் முழுமையான மதுவிலக்கை கொண்டு வரலாம். மற்றபடி ராமதாஸ் சொல்வது போலவோ, கருணாநிதி சொல்வது போலவோ உடனியாக மதுவிலக்கை கொண்டுவருவது சாத்தியமே இல்லை..

maniyan-with-tvs1

சரி. வைகோ முதல்வராக வேண்டும் என்றெல்லாம் பேசினீர்கள்..

ஒரு நிபந்தனையுடன்தான் அப்படிச் சொன்னேன். திமுக அல்லது அதிமுகவுடன் அவர் கூட்டணி வைத்துக்கொள்ளாமல், மாற்று அரசியலை முன்னெடுத்தால் “வைகோதான் முதல்வராக வேண்டும்” என்று பிரச்சாரம் செய்வேன். இல்லாவிட்டால் அப்படிப் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று நிபந்தனையோடுதான் சொன்னேன்..

வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் உங்கள் கட்சி, தனித்து முப்பது தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவித்திருக்கிறீர்களே..! அதற்குக் கராணம் என்ன?.

என் இளமைப் பருவம் முதல் இன்று வரை மிக நீண்ட காலம் அரசியலில் இருந்துவருகிறேன். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்றார் வள்ளுவர். அதை உணர்ந்துதான் தனித்து போட்டியிடுவது என்று முடிவெடுத்தேன். இனி யாருக்கும் இரவல் குரல் கொடுக்க மாட்டேன். முப்பது தொகுதியில் நிற்போம். வரும் தேர்தலில் எங்கள் கணக்கைத் துவங்குவோம்.

ஆகஸ்ட் பதினைந்தாம் தேதியிலிருந்து படிப்படியாக மதுக்கடைகளை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்தில் இருக்கும் அத்தனை மதுக்கடைகளையும் அடித்து உடைத்து மூடுவோம் என்கிறாரே சீமான்…

பேசுவது யார்க்கும் எளிதாம். விடலைப்பிள்ளைகளை தூண்டிவிட்டு வன்முறையில் இறக்குவது எளிது. ஆனால் இது நீடித்த நல்ல மாற்றங்களைத் தராது. மதுவிலக்கு வேண்டும் என்று சீமான் ஆசைப்படுவது நல்ல விசயம். அந்த நல்ல விசயத்தை அடைய மேற்கொள்ளும் வழிமுறைகளும் சட்டத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

பேட்டி: டி.வி.எஸ். சோமுhttps://www.facebook.com/reportersomu