பிரணவ் தனவாதே
பிரணவ் தனவாதே
மும்பை:
கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 323 பந்துகளில் 1009 ரன்களை எடுத்து பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில்  மும்பை மாணவர் சாதனை படைத்துள்ளார்.
 மும்பையை சேர்ந்தவர் பிரணவ் தனவாதே. 10-ம் வகுப்பு படிக்கும், 15 வயதான பிரணவ், கே.சி.காந்தி மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகிறார். இவர் பண்டாரி கோப்பைக்கான பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் ஆர்ய குருகுல பள்ளிக்கு எதிரான போட்டியில் 323 பந்துகளில் 1009 ரன்களைக் குவித்து சாதித்துள்ளார் இந்த தொடரை மும்பை கிரிக்கெட் சங்கம் நடத்துகிறது.
மொத்தம் 395 நிமிடங்கள் கிரீசில் இருந்த பிரணவ் 1009 ரன்களில் 129 பவுண்டரிகள், 59 சிக்சர்களை அடித்தார். அணியின் மொத்த ஸ்கோர் 1,465 ரன்களை எடுத்த நிலையில் இவரது அணி ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. இந்த ஸ்கோரும் ஒரு உலக சாதனை ஆகிவிட்டது. 1926-ம் ஆண்டு நியூசவுத்வேல்ஸ் அணிக்கு எதிராக விக்டோரியா 1,107 ரன்கள் எடுத்ததே  முந்தைய சாதனை. தற்போது அந்த சாதனையை பிரணவ் முறியடித்துள்ளார்.
தற்போது எந்த வகையான கிரிக்கெட்டிலும் பிரணவ்வின் இந்த 1009 ரன்களே வரலாற்று சாதனையாகும். முன்பு, பிரிட்டனில் ஏ.இ.ஜே.கொலின்ஸ் என்ற வீரர் தனிப்பட்ட முறையில் எடுத்த 628 ரன்களே சாதனையாக இருந்தது.
நேற்று மாலை வரர 652 ரன்களுடன் விளையாடிய பிரணவ், இன்று தொடர்ந்து விளையாடி இந்த உலக சாதனையை படைத்துள்ளார்.
2013-ம் ஆண்டு பிரிதிவி ஷா என்ற மும்பை ரிஸ்வி ஸ்பிரிங்பீல்ட் மாணவர் எடுத்திருந்த அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோரான 546 ரன்களையும் கடந்துள்ளார் பிரணவ். மும்பை கிரிக்கெட் சங்கம் இவரது முன்னேற்றத்துக்கான அனைத்து வசதிகளை செய்து தரப்படும் என்று உறுதி அளித்துள்ளது.
இவர் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென். இவரது ரோல்மாடல் தோனி. இது குறித்து பிரணவ் கூறுகையில் “நான் எப்பொழுதும் பெரிய ஷாட் அடிப்பதையே விரும்புவேன். சாதனை நிகழ்த்துவேன் என்று எதிர்பார்க்கவில்லை. என்னுடைய இயல்பான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தினேன். முதல் பந்திலிருந்தே அடித்து விளையாடுவது  எனது இயல்பு’’ என்றார்.
நட்சத்திர பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர், டோனி ஆகியோர் பிரணவுக்கு வாழ்த்து தெரவித்துள்ளனர். இவரது தந்தை ஆட்டோ ஓட்டுநர். ‘‘பிரணவ் 2000 ரன்கள் வரை அடிப்பான் என்று எதிர்பார்த்தேன்’’ என்று அவர் கூறுகிறார்.