முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து வெள்ளையறிக்கை :மு.க.ஸ்டாலின்

Must read

”முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து தமிழக அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்; எய்ம்ஸ் மருத்துவர்களும் சிகிச்சை செய்துள்ளதால், சிகிச்சை விவரங்களை மத்திய அரசும் நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்”
”அரசு அதிகாரிகள், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொது நல அமைப்புகளை ஒருங்கிணைத்து, குழுக்களை அமைத்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிவாரண நிதியை முறையாக வழங்க வேண்டும்”
– தமிழக எதிர்க்கட்சி தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பேட்டி
 

 
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திராவிட முன்னேற்ற கழகப் பொருளாளருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், வில்லிவாக்கம், திரு.வி.க. நகர், எழும்பூர், துறைமுகம் ஆகிய தொகுதிகளில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மூன்றாவது நாளாக, இன்று (15-12-2016) நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட ஏராளமான பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியதுடன், புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களையும், மீட்புப் பணிகளை ஆய்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அளித்த பேட்டி விவரம் வருமாறு:
தளபதி: வர்தா புயலால் சென்னை, சென்னையின் புறநகர் பகுதிகள், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை மோசமான நிலையில் முற்றிலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. கிட்டதட்ட 72 மணி நேரம், அதாவது 3 நாட்கள் ஆகியும் மீட்புப் பணிகளில் அரசு இயந்திரமும், மாநகராட்சி நிர்வாகமும் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாத காரணத்தால் இன்னும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாத கொடுமையில் சிக்கி தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். மாநில அரசு உதவித்தொகையாக ரூ.500 கோடியை ஒதுக்கியுள்ளது, போதுமானதாக இருக்குமா என்று கேட்டால், நிச்சயமாக இருக்க முடியாது. எனவே முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி நிவாரணத் தொகையை பெற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இப்போது ஒதுக்கப்பட்டு இருக்கக்கூடிய 500 கோடி ரூபாயும் உண்மையாகவே பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு சென்று சேர வேண்டுமென்றால், ஆங்காங்கே இருக்கக்கூடிய அதிகாரிகள், அரசியல் கட்சியினர், பொது அமைப்புகள் கொண்ட குழுக்களை அமைத்து, அந்த குழுக்கள் மூலமாக நிவாரண உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
கேள்வி: இந்த புயலிலினால் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ளன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருக்க மீண்டும் மரங்களை நடுவதற்கு அரசு என்ன செய்ய வேண்டும் ?
தளபதி: வீடுகளின் மீது விழுந்துள்ள மரங்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும். சாலைகளில் சாய்ந்துள்ள மரங்களை அகற்ற வேண்டும். அதற்குரிய பணியாளர்களை பிற மாவட்டங்களில் இருந்து வரவழைத்து மீட்புப் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். அதன் பிறகு, அதிகளவிலான மரக்கன்றுகளை நட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் பணியில் அரசு அவசியம் ஈடுபட வேண்டும்.

 
கேள்வி: மூன்று நாட்களாக தொடர்ந்து நீங்கள் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து, மீட்புப் பணிகளை பார்வையிட்டு வருகின்றீர்கள். இது தொடர்பாக முதல்வரை சந்தித்து பொதுமக்களின் சார்பில் முறையிடும் வாய்ப்பு உள்ளதா ?
தளபதி: முதலமைச்சருக்கு பல கோரிக்கைகளை போதுமான அறிக்கைகள் மூலமாக வெளியிட்டு இருக்கின்றேன். தேவையெனில் அவரை சந்திப்பதற்கும் நான் தயாராகவே இருக்கின்றேன்.
கேள்வி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பரவலாக கோரிக்கை வருவதை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள் ?
தளபதி: எந்த காரணத்தை முன்னிட்டும் இதை அரசியலாக்க நான் விரும்பவில்லை. திராவிட முன்னேற்ற கழகமும் இதை அரசியலாக்க விரும்பவில்லை. இருந்தாலும், அம்மையார் ஜெயலலிதா அவர்கள் சாதாரண ஒருவரல்ல. தமிழகத்தின் முதலமைச்சராக, தமிழ்நாட்டு மக்களை கட்டிக் காக்கக் கூடிய ஒரு மிகப்பெரிய பொறுப்பில் இருந்தவர். அவருடைய மறைவு என்பது வேதனைக்குரிய ஒன்றாக அமைந்திருக்கிறது. இப்போது மட்டுமல்ல, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், அவர் நலம் பெற்று வருகிறார், விரைவில் வீடு திரும்புவார் என்று செய்திகள் தொடர்ந்து வெளியான நிலையிலும் கூட திமுக மட்டுமல்ல, அனைத்து அரசியல் கட்சியினரும் தெரிவித்த கருத்து என்னவெனில், அவருடைய சிகிச்சை குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்பது தான்.
அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது, அன்றைக்கு அரசின் சார்பில், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சாதிக் பாட்ஷா அவர்கள் தினசரி முதலமைச்சரின் உடல் நிலை பற்றிய தெளிவான விவரங்களை, காலை, மாலை என இருமுறை அறிக்கைகள் மூலம் மக்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டு இருந்தார். அதேபோல எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டு இருந்த போது, அன்றைய சுகாதாரத்துறை அமைச்சரான ஹெச்.வி.ஹண்டே அவர்கள் முறையான அறிவிப்புகள் மூலம் அவரது உடல் நலன் பற்றி அறிவித்தார்.
ஆனால், அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அரசும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை, சுகாதாரத்துறை அமைச்சரும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை, சுகாதாரத்துறையின் செயலாளரும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை, முதலமைச்சருக்கு அடுத்த நிலையில் இருக்கக்கூடிய, முதலமைச்சரின் இலாகாக்களை எல்லாம் பொறுப்பேற்றுக் கொண்டிருந்த நிதியமைச்சர் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. அப்போல்லோ மருத்துவமனையின் சார்பில் மட்டும் தான் அவ்வப்போது ஒருசில அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அவையும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடான நிலையில் இருந்தன என்பதும் எல்லோருக்கும் தெரியும். இப்போது, அவர் மறைந்து விட்டார். அவரது இழப்பு என்பது ஈடு செய்ய முடியாதது. அதற்காக எல்லோரும் வருத்தம், வேதனைப்படுகிறோம். இந்த நிலையில் இன்றைக்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து பல்வேறு செய்திகள், ஊடகங்களில், பத்திரிகைகளில் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன. அதுமட்டுமல்ல, கலையுலகத்தில், திரைத்துறையில் இருக்கக்கூடியவர்கள் எல்லாம் பல்வேறு விதமான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். நேற்றைக்கும் கூட உச்ச நீதிமன்றத்தில் கூட ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் கூட இன்றைக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டுள்ளார். அதை நானும் வலியுறுத்துகிறேன். ஏனென்றால், இதை அரசியல் நோக்கத்தோடு சொல்லவில்லை, முதலமைச்சரின் மரணம் பற்றி பல தரப்பினரிடமும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த சந்தேகத்தினை முழுமையாக போக்க வேண்டுமென்று சொன்னால், மருத்துவர் ராமதாஸ் குறிப்பிட்டது போல, வெள்ளை அறிக்கை வெளியிடக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும். அதேபோல மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவர்களும் முதலமைச்சருக்கு சிகிச்சை அளித்துள்ளதால், அந்த சிகிச்சை விவரங்களை மத்திய அரசாவது வெளிப்படையாக நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
M.K. Stalin demands report on treatment given to Former CM Jayalalitha. If state Government is not releasing the treatment given to the Former CM , the Union Government should release as AIIMS Doctors were also involved in the team of Doctors.

More articles

Latest article