நேரு (கோப்பு படம்)
நேரு (கோப்பு படம்)

முன்னாள் அமைச்சர் நேரு தலைமறைவா? கைதா?

சென்னை:

தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நேரு, தலமறைவாகிவிட்டதாக ஒரு தகவலும், கைது செய்யப்பட்டுள்ளதாக மற்றொரு தகவலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியைச் சேர்ந்த நாகராணி என்பவருக்கு சொந்தமான ஓட்டல்  தஞ்சாவூரில் இருந்தது.

முந்தைய தி.மு.க., ஆட்சியின்போது, முன்னாள் அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயம், அவர்களின் உறவினர் ராஜபூபதி, அவரது மகன் பரணிதரன் ஆகியோர் மிரட்டி பறித்துக் கொண்டதாக, தஞ்சாவூர் குற்றப்பிரிவு போலீசில், நாகராணி கடந்த 2011ல் புகார் செய்தார்.  ஆனால் காவல்துறையினர் ழக்கு பதிவு செய்யவில்லை.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், நாகராணி வழக்கு தொடுத்தார்.  புகார் மீது வழக்கு பதிவு செய்ய, உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.  அதன் பின்னரும்  காவல்துறையினர் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்,  மீண்டும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையை நாடிய நாகராணி,  நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, நாகராணி தொடர்ந்தார்.

இதில் வந்த உத்தரவுப்படி முன்னாள் அமைச்சர் நேரு மற்றும் ராஜபூபதி, பரணிதரன் ஆகியோர் மீது, தஞ்சாவூர் குற்றப்பிரிவு போலீசார், கடந்த, 15ம் தேதி இரவு வழக்கு பதிவு செய்தார்கள்.  நேருவின் தம்பி ராமஜெயம் இறந்துவிட்டதால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

இந்த வழக்கில்,  நேரு கைது செய்யப்படலாம் என்று ஒரு தகவல் பரவியது. இதையடுத்து கடந்த 16ம் தேதி முதில் நேரு எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.

உயர் நீதிமன்றம் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றங்களுக்கு  இன்று (திங்கள் கிழமை)  முதல் ஒரு வாரம் வரை ஆயுத பூஜை விடுமுறை. ஆகவே தற்போது  கைதானால், ஒரு வாரத்திற்கும் மேல் சிறையில் இருக்க வேண்டியிருக்கும். ஆகவே கைது செய்யப்படுவதைத் தவிர்க்க  நேரு தலைமறைவாகிவிட்டதாக  ஒரு தகவல் உலவுகிறது.

அதே நேரத்தில், “ நேரு தலைமறைவாகவில்லை. நேற்று (18.10.15) அவரை  காவல்துறையினர் கைது செய்துவிட்டனர். தங்களது “சிறப்பு விசாரணை” முடிந்த பிறகு இன்று நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்துவர்” என்றும் ஒரு தகவல் உலவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவல்துறை வட்டாரத்தில், “நேருவை கைது செய்யவில்லை. கைது செய்யப்படுவாரா என்பதை சொல்வதற்கில்லை” என்று கூறப்படுகிறது.