o

மாதங்களில் நான் மார்கழி என்று பகவத்கீதையில், கண்ணபிரான் கூறினார். அந்த உண்ணதமான மார்கழி மாதம் இன்று பிறந்திருக்கிறது.

மார்கழி மாதத்தை சிலர் பீடை மாதம் என்று சொல்லி, சுப காரியங்களை இந்த மாதத்தில் தவிர்ப்பார்கள். இது அறியாமை.

‘‘பீடு’’ என்ற வார்த்தைக்கு ‘பெருமை’ என்று பொருள். மார்கழியை “ பீடுடைய மாதம்” என்று குறிப்பிடுவது, பன்னிரண்டு மாதங்களில் மார்கழி மிக்க பெருமையுடைய மாதம் என்ற பொருளில்தான்.

சூரியன் பயணத்திசையை வைத்து ஒரு ஆண்டை இரண்டு அயனங்களாக பிரிப்பார்கள். சூரியன் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வடக்கு திசையில் பயணிப்பதை ‘உத்திராயணம்’ என்பார்கள்.   இது கோடைக்காலத்தின் தொடக்கத்தை குறிக்கும். இக்காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாக அமைகிறது.

ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை சூரியன் தெற்கு திசையில் பயணிக்கிறார். . இதை தட்சிணாயண காலம் என்பர். இது மழைக்காலமாகும். இந்த தட்சிணாயணத்தின் ஆறாவது மாதமான மார்கழிதான் தேவர்களின் இரவு காலம் முடிந்து வைகறை பொழுதாக அமைகிறது.  இதை ‘உஷா காலம்’ என்றும், ‘வைகறை பொழுது’ என்றும் கூறுவதும் உண்டு.

அதிகாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரையுள்ள காலம் பிரம்மமுகூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. பனி விழும் இந்த அதி கைாலை வேளையில் இறைவனை வழிபட வேண்டும். அப்படிச் செய்யும்போது, உடல் சுறுசுறுப்படையும், உள்ளத்தில் தெளிவு பிறக்கும்.

இந்த மார்கழி மாதம் முழுவதும் இறைவனை தியானிப்பதும், அவனை நினைத்தபடியே இருப்பதும் சகல சௌகரியங்களையும் தரும்.
ஆன்மிக மார்க்கத்திற்கு செல்ல முதன்மையான மாதமாக கருதப்படும் இந்த மார்கழியை, “தனுர் மாதம்’ என்றும் அழைப்பது உண்டு.

சரி, மார்கழி என்ற பெயர் எப்படி வந்தது?

மார்கசீரிஷம் என்ற சொல்லுக்கு தலையான மார்க்கம் என்று பொருள். அதுவே நாளடைவில் மருவி மார்கழியாக ஆனது.

சைவ, வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த மாதத்தில் அனைவரும் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடி இறைவனை துதிக்க வேண்டும்.

வெங்கடேஸ்வரன் குடிகொண்டிருக்கும் திருமலையில் ஆண்டு முழுதும் சுப்ரபாதம் பாடப்படும். இந்த மார்கழி மாதத்தில் திருப்பாவையும் பாடப்படும். மேலும் வைஷ்ணவ ஆலயங்களில் இராப்பத்து, பகல்பத்து என்ற முறையில் நாலாயிரத்திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்யப்படும்.

சிவஸ்தலங்களிலும் மார்கழிக்கு தனி முக்கியத்துவம் உண்டு. அங்கு இம்மாதத்தில் மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளி எழுச்சி பாடல்கள் பாடி இறைவனை தொழுவர்.

எங்கும் பக்தி, எதிலும் தெய்வீகம் என்பதே மார்கழியின் சிறப்பாகும்.

அது மட்டுமல்ல… இம் மாதத்தில் அனைத்து சுப காரியங்களையும் மனநிறைவோடு செய்யலாம்!