1

சென்னை:

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்படும் நிவாரணத்தொகை ஐயாயிரம் ரூபாய், மாடி வீட்டில் வசிப்போருக்கும் உண்டு என்று அரசு அறிவித்துள்ளது.

கடந்த வாரம் பெய்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் பாதிப்படைந்தன. பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து சென்னையில் பாதிப்படைந்த வீடுகளைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மாடிகளில் வசிப்போருக்கும் நிவாரண நிதி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு பதில் அளித்த கணக்கெடுக்கும் பணிகளைக் கண்காணிக்கும் உயர் அதிகாரி ஒருவர் “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கணக்கெடுக்கும் பணி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இதற்காக 13 கேள்விகள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை வீடுவீடாக கொண்டு சென்று கணக்கெடுக்கிறோம். அதில் உரிமையாளரிடம் கையெழுத்து வாங்கி வருகிறோம்.

10 பேர் கொண்ட குழுக்களாக மினி வேனில் தலா 10 ஊழியர்கள் சென்று கணக்கெடுக்கிறார்கள். இந்த பணியில் 3 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இப்போது கூடுதலாக ஊழியர்கள் சேர்க்கப்பட்டு 3250 பேர் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

சென்னையில் உள்ள சுமார் 11 லட்சம் வீடுகளில் 2 லட்சத்து 65 ஆயிரம் வீடுகளில் கணக்கெடுக்கும் பணி முடிந்துள்ளது. இன்னும் 5 அல்லது 6 நாளில் கணக்கெடுக்கும் பணி முடிந்து விடும் என எதிர்பார்க்கிறோம்.

அந்த விண்ணப்ப படிவத்தில் குடும்ப தலைவர் பெயர், முகவரி, செல்போன் நம்பர், குடும்ப அட்டை எண் அல்லது நியாய விலை கடை யின் பெயர், வங்கி கணக்கு எண், வங்கியின் பெயர், குடியிருக்கும் வீடு கட்டிடமா? அல்லது குடிசையா? மழையால் வீடு முழுவதும் பாதிக்கப்பட்டதா? பகுதியாக பாதிக்கப்பட்டதா? மழை வெள்ளத்தால் வீடு சூழப்பட்டதா? ஆகிய கேள்விகள் விண்ணப்பத்தில் இடம் பெற்றுள்ளன.

பாதிக்கப்பட்டவருக்கு ரேஷன் கார்டு இல்லை என்றால் டிரைவிங் லைசென்சு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்ற ஏதாவது அரசு ஆவணங்களை குறிப் பிடலாம்.
கணக்கெடுக்கும் போது சில வீடுகள் பூட்டி கிடந்தால் பக்கத்து வீட்டில் அவரது செல்போன் எண் அல்லது பெயரை கேட்டு தெரிந்து மீண்டும் சர்வே செய்ய விண்ணப்பத்தில் குறிப்பிட்டு மீண்டும் அந்த வீடுகள் கணக்கெடுப்போம். எனவே யாரும் கணக்கெடுப்பில் விடுபட்டுவிடுவிடுவோமோ என்று கவலைப்பட வேண்டாம்.

வீட்டை மழை வெள்ளம் சூழ்ந்திருந்தாலும் மாடியில் வசித்தாலும் அவர்களுக்கும் ரூ. 5 ஆயிரம், 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி – சேலை கிடைக்கும். ஏனெனில் ஏனென்றால் அவர்களும் வெளியே வர முடியாமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.