12346889_10153315504763581_751137607_n

சென்னையில் மழை வெள்ள பாதிப்பை, முதல்வர் ஜெயலலிதா ஏ.சி. வேனிலும்,  ஆகாய மார்க்கமாக சிறிது நேரம் பார்வையிட்ட நிலையில் பழைய செய்தி ஒன்று.

1955ம் டிசம்பர் மாதம்…   காமராசர் முதல்வராய் இருந்த  அந்த சமயத்தில் தென் மாவட்டங்களை திடீரென புயலும் பேய் மழையும் தாக்கின.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பலர் தங்கள் வீடுகளை இழந்தார்கள். நிலமெல்லாம் வெள்ளம். பயிர்கள் பாழ்.

பல்லாயிரக்கணக்கான மக்கள்  பரிதவித்தனர். முதல்வர் காமராஜ் பாதிக்கபட்ட பகுதிகளை பார்வையிடவும், பாதிக்கபட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் வந்தார்.

ஒரு கிராமத்தை சுற்றிலும் நீர் சூழ்ந்து கொள்ள, தனித்தீவானது. உணவுக்கு வழியின்றி தத்தளித்தார்கள் அந்த கிராமத்து மக்கள்.

இதைக் கேள்விபட்ட காமராசர்,  அவர்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகளோடு புறப்பட்டார். வழியில் ததும்பி ஓடிக்கொண்டிருந்தது ஒரு பெரிய வாய்க்கால்.  அதிகாரிகள் காமராசரிடம் “அய்யா…  இதற்கு மேல் கார் செல்ல முடியாத அளவுக்கு வெள்ளம்.  அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை நாங்களே  கவனித்துக் கொள்கிறோம். நீங்கள் வேறு இடத்துக்கு செல்லுங்கள்” என்றார்கள்.

ஆனால் காமசர் என்ன சொன்னார் தெரியுமா?

“ அப்படின்னா அதிகாரிகளையே  எல்லாத்தையும் கவனிக்கச் சொல்லி கோட்டையிலிருந்தே நான் உத்தரவு போடலாமே. முதல்வரான நான், மக்கள் படும் துயரை நான் நேரடியாப் பாக்கணும்னேன்.  அப்பதத்தான் அவங்க துயரத்தை உணர முடியும், தேவையை தெரிஞ்சுக்க முடியும்.. அதோட  நான் நேர்ல வந்து ஆறுதல் சொன்னாத்தானே மக்களுக்கு தைரியமும் நம்பிக்கையும் வரும்” என்றார்.

 

வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு தலையில் முண்டாசோடு தண்ணீரில் இறங்கினார்.  சாரக் கயிரை பிடித்துக் கொண்டு மார்பளவு நீரில் கால்வாயைக் கடந்து மறு கரைக்கு சென்றார். முதல்வரே தணணீரில் இறங்கி விட்டதால், அதிகாரிகளும் வேறு வழியின்றி அவரைப் பின் தொடர்ந்தார்கள்.

இப்படி பல இடங்களில் நடந்தது. பெருந்தலைவரின் இந்த நடவடிக்கைகளைப்  திராவிட நாடு இதழில் ஒரு கடிதம் எழுதினார்:

“சேரிகள் பாட்டாளிகளின் குடிசைக்கள், உழவர் உழன்று கிடக்கும் குச்சுகள். இவை யாவும் நாசமாகிவிட்டன. வீடில்லை, வயலில்லை, உள்ளத்தில் திகைப்பின்றி வேறில்லை. ஆனால் தம்பி…  நமது முதலமைச்சர் காமராசர் அந்த மக்கள் மத்தியில் இருக்கிறார். பெருநாசத்ததுக்கு ஆளான மக்களின் கண்ணீரைத் துடைத்திடும் காரியத்தில் தீவிரமாக் ஈடுபட்டிருக்கிறார் என்பதை என்னும் போது இதோ எமக்கு ஆறுதல் அளிக்க எமது முதலமைச்சர் வந்துள்ளார். எமது கண்ணீரை காணுகிறார். தமது கண்ணீரை சிந்துகிறார். ஆறுதலை அள்ளித் தருகிறார். கோட்டையிலே அமர்ந்து கொண்டு உத்தரவுகள் போடும் முதலமைச்சர் அல்ல இவர். மக்களை நேரில் சந்திக்கும் தலைவர் என்று மக்கள் வாழ்த்துகின்றனர். தம்பி! சொல்லித்தானே ஆக வேண்டும் முதலமைச்சர் காமராசரின் பொறுப்புணர்ச்சி கண்டு நாம் பெருமைப்படுகிறோம்.”

இப்படி மனமுருகி எழுதிய அண்ணா, அன்று அரசியலில் காமராசருக்கு எதிர் நிலையில் நின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது!

அந்த அளவுக்கு மக்களோடு நெருங்கி நின்று பணியாற்றினார் காமராசர்!

ம்.. அதெல்லாம் அந்தக்காலம்!