மக்கள் தலையில் இரட்டை வரி விதிப்பதா? : வைகோ கண்டனம்

Must read

vaiko1
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கையில், ’’இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய 1992 ஆம் ஆண்டு ஒப்பந்த விதிப்படி அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில், ஆண்டு தோறும் ஏப்ரல் 1 ஆம் தேதியும், 2008 ஆம் ஆண்டு விதிப்படி அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் செப்டம்பர் 1 ஆம் தேதியும் கட்டணம் திருத்தி அமைக்கப்படுகிறது.
அந்த வகையில் இந்தச் சுங்கச் சாவடிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 1 இல், 2008 ஆம் ஆண்டு விதிப்படி அமைக்கப்பட்ட 21 சுங்கச் சாவடிகளிலும், தற்போது ஏப்ரல் 1 இல் மற்ற 20 சுங்கச் சாவடிகளிலும் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 41 சுங்கச் சாவடிகளில் 15 சதவீதம் வரை கட்டணங்கள் உயர்ந்திருக்கிறது.
ஏற்கனவே டீசல் விலை உயர்வு, டயர் விலை உயர்வு, வாகன உதிரி பாகங்கள் விலை உயர்வு, வாகன காப்பீட்டுத் தொகை உயர்வு போன்ற காரணங்களால் வாகனப் போக்குவரத்துத் தொழில் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், சுங்கச் சாவடிகளின் கட்டண உயர்வால் காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பண்டங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் சுங்கவரி அதிகரித்து, போக்குவரத்து செலவு கூடும். இறுதியாக இந்தச் சுமை மக்கள் மீது ஏற்றப்பட்டு, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் பலமடங்கு உயர்ந்துவிடும்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சுங்கச் சாவடிகள் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன. அண்டை மாநிலமான கேரளாவில் சுங்கச் சாவடிகள் எண்ணிக்கை குறைவு என்பது மட்டுமல்ல, குறைவான சுங்க வரியை கேரள அரசே வசூலிக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டு காலமாக செயல்படாத ஜெயலலிதா அரசு, மக்களைப் பாதிக்கும் சுங்கச் சாவடிகள் குறித்து கவனம் செலுத்தாமல், அலட்சியப் போக்குடன் நடந்துகொண்டது கண்டனத்துக்கு உரியதாகும்.
தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோதுதான் சுங்கச்சாவடி விதிகள் 2008 இல் வகுக்கப்பட்டன. தற்போது பா.ஜ.க. அரசும், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களையே செயல்படுத்தி வருகிறது.
வாகனங்கள் விற்பனை செய்யப்படும்போதே சாலை வரி வசூலிக்கப்படுகிறது. சுங்கச் சாவடிகள் அமைத்து தனியார் கட்டாயமாக சுங்கவரி வசூல் செய்வது மக்கள் தலையில் இரட்டை வரி விதிப்பது போல் இருக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சுங்க வரி கட்டண உயர்வை உடனே திரும்பப் பெறுவதுடன், சுங்கச் சாவடிகளையும் படிப்படியாக மூடிவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.’’என்று தெரிவித்துள்ளார்.

More articles

Latest article