1
கும்பகோணம்-சுவாமிமலை சாலையிலுள்ள கொட்டையூரில் கோடீஸ்வரர் கோயில் உள்ளது.  மகாமகத்தின்போது மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காண்கின்ற காசி விஸ்வநாதர் கோயில், கும்பேஸ்வரர் கோயில், நாகேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், கோடீஸ்வரர் கோயில், காளஹஸ்தீஸ்வரர் கோயில், கௌதமேஸ்வரர் கோயில், அமிர்தகலசநாதர் கோயில், பாணபுரீஸ்வரர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில், கம்பட்ட விஸ்வநாதர் கோயில்,  ஏகாம்பரேஸ்வரர் கோயில் ஆகிய 12 கோயில்களில் 10 கோயில்கள் கும்பகோணம் நகரில் உள்ளன. மற்ற இரு கோயில்களான கோடீஸ்வரர் கோயில் கொட்டையூரிலும், அமிர்தகலசநாதர் கோயில் சாக்கோட்டையிலும் உள்ளன. குடமுழுக்கிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இக்கோயிலுக்குச் சென்றோம்.
அமிர்தத்துளிகள் விழுந்த இடம் என்ற நிலையில் இவ்விடம் பெயர் பெற்றது. தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது. குருமணிபோல் அழகமரும் கொட்டையூரில் கோடீச்சரத்து உறையும் கோமான்தானே என்று நாவுக்கரசர் இத்தல இறைவனைப் போற்றுகின்றார்.
 
2
ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம், பலிபீடம், நந்தியை ஆகியவை காணப்படுகின்றன. தொடர்ந்து காணப்படுகின்ற முன் மண்டபத்தில் வலப்புறம் நால்வரும் ஆத்ரேய மகரிஷியும் உள்ளனர். திருவலஞ்சுழியில் காவிரியில் இறங்கிய ஏரண்ட முனிவர் (ஆத்ரேய மகரிஷி) இங்கு வந்ததாகவும், ஏரண்டம் எனப்படும் கொட்டைச்செடியின்கீழிருந்து தவம் செய்ததால் அவர் அவ்வாறு பெயர் பெற்றதாகவும் கூறுவர். இடப்புறம் நடராஜர் மண்டபமும் நவக்கிரக சன்னதியும் உள்ளன. கருவறையில் லிங்கத்திருமேனியாக கோடீஸ்வரர் உள்ளார்.
ஒரு காலத்தில் இவ்வூர் ஆமணக்கங்காடாக இருந்ததாகவும், இறைவன் ஆமணக்கின் கொட்டைச் செடியின்கீழ் இருந்ததால் கொட்டையூர் என்று பெயர் பெற்றதாகக் கூறுகின்றனர். சோழ மன்னன் ஒருவனுக்கு கோடிலிங்கமாகத் தரிசனம் கொடுத்ததால் இக்கோயிலைக்கு கோடீச்சரம் என்றழைக்கின்றனர். இறைவனுக்கு கோடீஸ்வரர் என்றும், விநாயகருக்கு கோடி விநாயகர் என்றும், சுப்பிரமணியருக்கு கோடி சுப்பிரமணியர் என்றும், சண்டிகேஸ்வரருக்கு கோடி சண்டிகேஸ்வரர் என்றும் பெயர்கள் உண்டு.
 
3
 
கோயிலின் கருவறையைச் சுற்றிவரும்போது நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டீஸ்வரர் சன்னதி உள்ளது.
திருச்சுற்றில் கோடி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் மற்றும் கஜலட்சுமிக்கான சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் உள்ள இறைவி பந்தாடுநாயகி ஆவார். மகாமகத்திற்காக குடமுழுக்கு கண்ட கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். தற்போது இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று நிறைவுற்றது.
2016 பிப்ரவரி 13 முதல் 22 வரை மகாமகப்பெருவிழா நடைபெறவுள்ள வேளையில் தீர்த்தவாரி காண்கின்ற கோயில்களுக்குச் செல்லும்போது இக்கோயிலுக்கும் சென்று வாருங்கள்.
முனைவர் பா.ஜம்புலிங்கம்