0

தி.மு.க. கூட்டணியில் சிவகாமி அய்.ஏ.எஸ். தலைமையிலான சமூக சமத்துவப் படை கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற செய்தியைப் படித்தபோது இரண்டு ஆச்சர்யங்கள்.
‘பெரியார் தலித் விரோதி’ என்ற விவாதம் உச்சத்தில் இருந்த காலம் அது. அப்போது அதை மறுத்து பெரியாரியத்தை ஆதரித்த கட்டுரைகள் சிவகாமி நடத்திய ‘புதிய கோடங்கி’ இதழில் வெளியானது. ஆனால் என்ன நினைத்தாரோ, ஒரே இதழில் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார் சிவகாமி. பெரியார் முதல் கவிஞர் இன்குலாப் வரை அனைவரையும் தலித் விரோதிகள் என்று சிவகாமி அதே ‘புதிய கோடங்கி’ இதழில் எழுதினார். பெரியாரைத் தலித் விரோதியாகச் சித்தரித்து வெளியான கட்டுரைகளுக்கும் களம் அமைத்துக்கொடுத்தார்.
சிவகாமியின் நிலைப்பாடு சரியா, தவறா என்பதை ஆராய்வதல்ல இப்போதைய பிரச்னை. ஆனால் பெரியாரைக் கடுமையாக விமர்சித்தவர்கள் கருணாநிதியை ஏற்றுக்கொள்வதுதான் ஆச்சர்யமளிக்கிறது. சமயங்களில் கருணாநிதியின் பங்களிப்பையும் தாண்டி அவரை அளவுக்கு அதிகமாகப் புகழ்வதுதான் அவலம்.
ஆனால் சிவகாமி போன்றவர்களின் இப்போதைய நிலைப்பாடுகளைச் சந்தர்ப்பவாதம் என்று சுருக்கவிரும்பவில்லை. அது சந்தர்ப்பவாதம் என்றால் ‘திராவிட இயக்கமே தலித் விரோதம்’ என்பவர்களைக் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளும் தி.மு.க.வுக்கும் அந்த சந்தர்ப்பவாதத்தில் பங்கு இருக்கத்தானே செய்கிறது?

இன்னொரு ஆச்சர்யத்தையும் சொல்லவேண்டும். சமூக சமத்துவப்படையோடு என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி, பொன்.குமாரின் விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி ஆகியவற்றுக்கும் தி.மு.க. தலா ஒவ்வொரு இடங்களை ஒதுக்கியுள்ளது. ஆனால் என்.ஆர்.தனபாலன், பொன்.குமார் போன்றவர்கள் தொடர்ச்சியாக தி.மு.க.வை ஆதரித்து வருபவர்கள், கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டவர்கள்.
ஆனால் சமூக சமத்துவப் படை எப்போது தி.மு.க. ஆதரவு நிலைப்பாடு எடுத்தது, எப்போது பேச்சுவார்த்தை நடத்தியது என்று ஒன்றுமே புரியவில்லை. ஆனால் இப்போதைய சூழலில் யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்றுக்கொள்வது, எவ்வளவு சிறிய கட்சியாக இருந்தாலும் ஒரு தொகுதியையாவது ஒதுக்குவது என்கிற நிலையில் இருந்தே தி.மு.க. எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

Suguna Diwakar  (முகநூல் பதிவு)