k
சென்னை:
ருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு வெற்றி கிடைக்கும் என்ற உன்னத நோக்கத்துடனும், நம்பிக்கையுடனும் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
இது குறித்து  தொண்டர்களுக்கு அவர்  எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான 15வது பொதுத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்பி, தலைமைக் கழகத்தில் விருப்பமனு தாக்கல் செய்தவர்களை, (22-2-2016) திங்கட்கிழமை காலை முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாகச் சந்தித்து தொகுதி நிலவரம், ஒவ்வொருவருக்கும் உள்ள வெற்றி வாய்ப்பு, ஆகியவற்றைப் பற்றி அறிந்திடவும் ஆய்வு செய்திடவும், நானும், பொதுச் செயலாளர் பேராசிரியர், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் ஆர்வத்துடன் இருக்கிறோம். விருப்பமனு தாக்கல் ஜனவரி 24ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடை பெற்றதன் மூலம் தலைமைக் கழகத்தில் 12 கோடியே 97 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. 5,648 பேர்கள் போட்டியிடுவதற்கான மனுக்கள் வரப்பெற்றுள்ளன. நேர்காணலுக்கு வருவோர் தங்களுடைய ஆதரவாளர்களையெல்லாம் உடன் அழைத்து வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பமனு தாக்கல் செய்தவர்கள் அனைவருமே கழகத்திற்காகப் பாடுபட்டவர்கள்; ஏதோ ஒரு வகையில் கழகத்திற்காக உழைத்தவர்கள்; பல பேர் கழகம் நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் நான் ஏற்கனவே தெரிவித்ததைப் போல ஒரு தொகுதியில் கழகத்தின் சார்பில் ஒருவரைத் தான் நாங்கள் தேர்ந்தெடுக்க முடியும். ஒரு தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிட பலர் தகுதி உடையவர்களாக இருக்கக் கூடும். அவர்களில் ஒருவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கலாம். அப்படிப்பட்ட வரைத் தேர்ந்தெடுப்பது அதுவும் “சமன் செய்து சீர்தூக்குங் கோல் போல் அமைந்து” தேர்ந்தெடுப்பது என்பது எவ்வளவு கடினமான காரியம் என்பதை நீ நன்றாகவே அறிவாய். எல்லோருக்கும் நல்வாய்ப்பு வரும்; தன்னுடைய சுற்று வரும் வரை காத்திருக்கக் கற்றுக் கொண்டிருப்பவருக்குத்தான் காரியம் கைகூடும் என்பதை மறக்கக் கூடாது.
இதைத்தான் அண்ணா அவர்கள் ஆங்கிலத்தில் “We should learn to Wait till our Turn comes” என்று அழகாகச் சொல்லியிருக்கிறார். அண்ணா அவர்கள் இது மட்டுமா கூறினார்? “பீரோ நிறைய ஏராளமான பட்டுப் புடவைகள் இருந்த போதிலும் – இன்று செல்லும் இந்தத் திருமணத்திற்கு இந்தக் கலர் பட்டுப் புடவையை எடுத்துக் கட்டிக் கொள்கிறேன் என்றால், அடுத்து இன்னொரு திருமணத்திற்குச் செல்லும் போது மற்றொரு புடவையை எடுத்துக் கட்டிக் கொள்வேன். இன்று இதனைக் கட்டிக் கொள்வதால் மற்றது எல்லாம் பிடிக்காது என்று அர்த்தமல்ல” என்ற உவமைக் கதையும் அண்ணாதானே சொன்னார்? அதை மறந்து விடலாமா? விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நான் விடுக்கும் வேண்டுகோள், இந்தத் தேர்தல் நம்முடைய கழகம் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதற்கான தேர்தல். இந்தத் தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டுமென்று மனு தாக்கல் செய்தோர் எண்ணாமல், தி.மு.கழகம் வெற்றி பெற வேண்டும், அண்ணா கண்ட சின்னமாம் – அண்ணா தந்த, அண்ணா வென்ற சின்னமாம் உதய சூரியன் வெற்றி பெற வேண்டுமென்ற அசைக்க முடியாத எண்ணத்தோடு இருக்க வேண்டும். போட்டியிட வாய்ப்புக் கிடைத்தோரும், நமக்கு வாய்ப்புக் கிடைத்துவிட்டது, நமக்கு எதிராகப் போட்டியிட மனுச் செய்தவர்களைக் “கவனித்துக்” கொள்ளலாம் என்ற எதிர்மறை நோக்கிலும் போக்கிலும் நடந்து கொள்ளாமல், அனைவரையும் அன்போடு அரவணைத்துச் சேர்த்துக் கொண்டு, கழகத்தின் வெற்றிக்காக முழு மூச்சுடன் பாடுபட வேண்டும்.
நம்முடைய தோழமைக் கட்சிகள் இன்னும் யார் யார்; கூட்டணி சார்பாக அவர்கள் எந்தெந்த இடங்களில் போட்டியிடுகிறார்கள்; என்பதெல்லாம் இனிதான் முடிவு செய்யப்பட வேண்டும். நேர்காணல் நடைபெற்றதாலேயே அந்தத் தொகுதியில் நமது கூட்டணி சார்பாக தி.மு.கழகம்தான் போட்டியிடப் போகிறது என்று கருதிவிட முடியாது. இந்த முக்கியப் பணியின் பரிமாணத்தை மறந்து அலட்சியப்படுத்தி விட்டு, தேர்தலுக்கு முன்னரே, நம்முடைய உடன்பிறப்புகளே ஒருவருக்கொருவர் ஒருசில இடங்களில் மோதிக் கொள்கின்ற நிலை ஏற்படு மானால், அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் செய்கின்ற அக்கிரமங்களையும், பெருந்தவறுகளையும் மக்கள் மனதிலிருந்து மறைத்து, நம்முடைய உள்கட்சிப் பிரச்சினைகளை ஊதிப் பெரிதாக்கிட ஊடகத் துறையிலே உள்ள வைத்தி, வரதன் போன்ற ஒரு சிலர் வயிற்றெரிச்சல் காரணமாக முனைந்திடக் கூடும். அந்த ஒரு சிலர் ஆதிக்க சக்திகளின் அங்கங்களாக இருப்பவர்கள் அல்லது பல்வேறு பலன்களை எதிர் பார்த்து ஆதிக்க சக்திகளை ஆதரிப்பவர்கள். அவர்களுக்குப் பத்திரிகா தர்மத்தைப் பற்றியும் கவலையில்லை; பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றியும் அக்கறை இல்லை. சேவைத் துறையை வாணிபத் துறையாகக் கருதுபவர்கள். அந்த ஒரு சிலர், எதிரணியில் தூணே விழுந்தாலும் அதைத் தூசியாகக் கூடக் காட்ட மறுப்பவர்கள்; நம்மிடையே ஒரு தூசு பறந்தாலும், அதைத் தூணே சாய்ந்து விட்டதாகக் கதை கட்டி விடுபவர்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் கண்ட ருசியின் தொடர்ச்சியாக ஆளுங்கட்சியினர் இப்போதும் தேர்தல் அதிகாரிகளில் ஒரு சிலரைப் பிடித்து பையிலே போட்டுக் கொண்டு இலட்சக்கணக்கில் போலி வாக்காளர்களைச் சேர்த்தது பற்றியோ, பொங்கி வழியும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றியோ, பொதுமக்கள் நலனுக்கெதிரான செயல்பாடுகள் பற்றியோ ஏதேனும் ஒரு மூலையிலாவது சுட்டிக் காட்டுகிறார்களா? அனைத்தையும் ஜமக்காளத்திற்குள் மூடிச்சுருட்டி மறைத்திடத்தானே படாத பாடுபடுகிறார்கள்! நமது கழகத்தோடு எந்தக் கட்சியும் இணைந்து கூட்டணி அமைத்து விடக் கூடாது; ஆளும் அ.தி.மு.க.வுக்கு எதிராகச் சுனாமியை விட வேகமாகச் சுழன்றடித்து நாளும் பன் மடங்கு பெருகி வரும் எதிர்ப்பு வாக்குகளைச் சிதறிடச் செய்ய வேண்டும்; கழகம் தனிமைப்படுத்தப் பட வேண்டும் என்ற பொல்லாத நோக்கில் அரசின் உளவுத் துறையோடு இணைந்து, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமான கற்பனைக் கதைகளை வெளியிட்டு, பொதுமக்களைக் குழப்புவதிலே தொடர்ந்து ஈடுபாடு காட்டி வருகிறார்கள். அவர்களே கூட்டணிக்குக் கட்சிகளைச் சேர்க்கிறார்கள். எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதை அவர்களே முடிவு செய்கிறார்கள்; இந்தக் கட்சி, இந்தக் கட்சியோடு சேருவதற்கு என்னென்ன நிபந்தனைகள் என்று அவர்களே முடிவு செய்து வெளியிடுகிறார்கள்.
இந்தக் கட்சி, இந்தக் கட்சியோடு சேருவது, நம்பிக்கை மற்றும் தத்துவ முரண்பாடாக அல்லவா இருக்கும் என்று துவேஷ எண்ணத்தை விதைக்கிறார்கள். ஆளுங் கட்சிக்கு வலியச் சென்று ஆள் சேர்க்கும் வேலையைச் செய்கிறார்கள்; நம்மோடு யாரும் சேர்ந்து விடக் கூடாது என்ற நோக்கில் வெட்டி விலக்கி விட எத்தனிக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, தண்ணீரை விட ரத்தம் கெட்டியானது (Blood is thicker than Water) என்பதை அவர்களுடைய ஒவ்வொரு காரியத்தின் மூலமும் உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எப்படிப்பட்ட தகிடுதத்த வேலைகளிலும், தந்திரோபாயங்களிலும் இறங்கினாலும் அவை அனைத்தையும் அடித்து நொறுக்கி தூள் தூளாக்கித் தூக்கி எறிந்து விட்டு கழகக் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. இது போல எத்தனையோ சூழ்ச்சிக்காரர்களையும், நேரடியாக அல்லாமல் முக்காடு போட்டுக் கொண்டு வரும் சவால்களையும் பிடரியைப் பிடித்து உலுக்கி ஓரங்கட்டி ஒதுக்கி விட்டு இலட்சியப் பயணத்தில் தொடர்ந்து முன்னேறி வருபவர்கள் நாம் என்பதற்கு நமது கடந்த கால வரலாறு சான்று பகரும். எனவே உடன்பிறப்புகள் நமக்கிடையே சிறு வேற்றுமையைக் கூடப் பெரிது படுத்திட நினைத்தால், அந்த நினைப்பே, “ஒரு சிலர்” என்று குறிப்பிட்டேனே, அவர்களுக்கு உற்சாகம் அளித்து விடும் என்பதை மறந்து விடக் கூடாது. அண்ணா அவர்கள் ஒரு முறை பேசியதை மீண்டும் நினைவுபடுத்த வேண்டுமென்றால், “திராவிட முன்னேற்றக் கழகம் ஓர் அரசியல் கட்சி மட்டுமல்ல; இது ஒரு சமுதாயச் சீர்திருத்த இயக்கம். இதில் ஈடுபட்டிருக்கின்ற அத்தனை பேரும், யார் யார் எந்தெந்த இடத்தில் இருப்பது என்பதல்ல; யார் யார் எந்தெந்த நேரத்தில் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வது என்பதும் முக்கியமல்ல; ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பை ஏற்றிருப்பது இந்த இயக்கத்திலே அமைந்திருக்கின்ற போர்ப் பாசறை போன்றதாகும். இதிலே பகைவர்கள் உள்ளே புக நினைத்தால், அவர்கள் எங்கள் நெருக்கத்தின் இடையில் சிக்கிக் கூழாகிப் போவார்கள். திராவிட முன்னேற்றக் கழகம், ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திலிருந்து பணியாற்ற வேண்டுமென்பதற்கு ஏற்பட்டிருக்கிற ஓர் அமைப்பே தவிர, வேறு ஏற்றத் தாழ்வுகள், மனமாச்சர்யங்கள் எங்களுக்குள் இருக்கிறதென்று மாற்றார்கள் கருதினால், நாங்கள் வளர்ந்த வரலாற்றை அவர்கள் தெரிந்து கொண்டவர்கள் அல்லர் என்றுதான் சொல்ல வேண்டும்.
நாங்கள் ஒரு தாயின் வயிற்றில் பிறக்காததற்குக் காரணம், ஒரு தாயின் வயிறு இத்தனை பிள்ளைகளையும் தாங்காது என்பதுதான்” என்று 26-9-1960 அன்று சென்னை கடற்கரையில் நடை பெற்ற கூட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் உருக்கமாகக் கூறியதை நாம் என்றும் நினைவில் நிறுத்தியிருப்பதை அறியாத மாற்றார் – நம்மிடையே பிளவு ஏற்படாதா, இடையில் நாம் புகுந்து ரத்தம் குடிக்க முடியுமா என்று ஏங்கிய நிலையில் காத்துக் கிடக்கும் எதிரிகள் ஏமாந்துதான் போவார்கள்! எனவே கழக உடன்பிறப்புகள் சிறு வேற்றுமை இருந்தாலும் அதனை மறந்து, “குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை” என்பதை நினைத்து, அண்ணா அவர்கள் கூறிய புடவை உவமையை மனதிலே கொண்டு, இந்த முறை இன்னார் செயலாளராகப் பணியாற்றினாரா; அடுத்த முறை மற்றொருவர் அந்தப் பொறுப்புக்கு வரட்டும் என்று விட்டுக் கொடுக்கும் பெரும் நோக்கோடு கழக உடன் பிறப்புகள் உணர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதை எச்சரிக்கையாக உங்களுக்குத் தெரிவிக்கின்றேன். மாறாக, நாங்கள் மோதியே தீருவோம் என்ற ரீதியில் நிகழ்வுகள் நடக்குமானால், அது மோதுவோருக்கும், மோதுவோரின் சொந்த வீடான இந்த இயக்கத்திற்கும் தீங்காக முடியும் என்பதையும் “ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு” என்பதையும் நினைவிலிருந்து சிறிதும் அகன்று விடாமல் நிறுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.
எனவே நாளை முதல் வேட்பாளர் நேர்காணலுக்காக வரும் கழக உடன்பிறப்புகள் என்னுடைய இந்தக் கருத்துகளை மனதிலே தாங்கி, நம்முடைய முக்கியக் குறிக்கோள்; தி.மு.கழகம் வெற்றி பெற வேண்டும், தி.மு.கழக ஆதரவுபெற்ற வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதாக இருக்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட முறையில் நாம் வெற்றி பெறவேண்டும் என்பதாக இருக்கக் கூடாது. இப்போது இந்த வாய்ப்புக் கிடைக்காவிட்டால், பிற்காலத்தில் இதை விடப் பெரிய வாய்ப்புக் கிடைக்கும், அப்படியே நமக்குக் கிடைக்காமல் போனாலும் கழகத்திற்குக் கிடைக்கும் வெற்றியே, கழக உடன்பிறப்புகளுக்கும் கிடைக்கும் வெற்றி என்ற உன்னத நோக்கத்துடனும், நம்பிக்கையுடனும் நேர்காணலுக்கு வர வேண்டுமென்று அன்புடன் அழைக்கிறேன். இவ்வாறு கருணாநதி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.