index

 

மாண்புமிகு இந்தியத் தலைமையமைச்சர் மோடி அவர்களுக்கு…

ஜப்பான் நாட்டோடு 90,000 கோடிக்குப் புல்லட் இரயில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று தினத்தந்தி (13.12.2015) தமிழ் நாளிதழில் அறிந்தேன். ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்டுவிட்டு நாட்டை விட்டு வெளியேறியபோது இந்தியாவில் 10000 கி.மீ. தூரத்திற்கு இரயில் பாதைகளை அமைத்திருந்தார்கள்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் கடந்து 10 ஆண்டுகளுக்கு முன்பு 300 கி.மீ. தூரத்திற்கு மேற்கு கடற்கரை பகுதியில் கொங்கன் கோவா இரயில்பாதை அமைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் திண்டுக்கல்-பழனி, கரூர்-சேலம் இரயில் பாதைகள் அமைக்கப்பட்டன.
அதன் பின்னர் மீட்டர் கேஜ் பாதைகள் பிராட்கேஜ் பாதையாக இந்தியா முழுக்க இன்னும் மாற்றப்படாமல் உள்ளன. சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான இரட்டை இரயில்பாதை இன்னும் அமைக்கப்படவில்லை. தமிழ்நாட்டின் தென்மாவட்ட மக்கள் அடையும் துன்பங்கள் குறிப்பாக பண்டிக்காலங்களில் சொல்லில் அடங்காதவையாகும்.

திருவாரூர் முதல் காரைக்குடி பிராட்கேஜ் பாதைக்கான பணிகள் 2 வருடங்கள் கடந்தநிலையில் இன்னும் தொடங்கப்படாத நிலையே உள்ளது. வேளாங்கண்ணி முதல் திருக்குவளை இரயில்பாதை அமைக்க நிலங்கள் கையப்படுத்தி பணிகள் எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை.
இது புதிய திட்டம்.
போடி முதல் மதுரை வரை இருந்த மீட்டர்கேஜ் பாதை பிராட்கேஜ் பாதை மாற்றத்திற்காக அகற்றப்பட்டு இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை.
தஞ்சை-அரியலூர், கும்பகோணம்-நெய்வேலி, தஞ்சாவூர் -பட்டுக்கோட்டை இரயில்பாதைகள் அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ள நிலையிலே உள்ளது.

அகமதாபாத்-மும்பை புல்லட் இரயில் ஒப்பந்தம் 90,000 கோடியில் அமைக்கப்படவுள்ளது என்றும் இதனால் பயணநேரம் 2 மணிநேரம் குறையும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பயணத்தில் விரைவு கிடைக்கின்றது என்றும் கூறப்பட்டுள்ளது. விரைவாக செல்ல விமானம் இருக்கும்போது எதற்கான 90,000 கோடியில் புல்லட் இரயில் என்ற கேள்வி எழுவது இயற்கைதானே. இதில் பயணம் கட்டணம் எப்படியும் அதிகம் இருக்கும்.
நடுத்தர மக்கள், ஏழை மக்கள் இந்த புல்லட் இரயிலில் பயணம் செய்ய முடியாது.
மேல்தட்டு மக்களுக்கானது இந்த இரயில் என்பதை எளிமையாகப் புரிந்து கொள்ள முடிகின்றது.

1 கி.மீ. இரயில்பாதை அமைக்க 1 கோடி செலவு ஆவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 90,000 கோடியில் 90,000 கி.மீ.தூரத்திற்கு இந்திய முழுக்க இரயில்பாதைகளை அமைக்கலாம். இந்தியாவின் எல்லா மாநிலங்களையும், மாநிலங்களில் உள்ள எல்லா மாவட்டங்களையும் இணைக்க இரயில் பாதைகளை அமைக்கலாம். இதனால் உள்நாட்டு வருமானம் எவ்வளவு பெருகும் என்பதை எண்ணிப் பாருங்கள். எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்? அதனால் இந்த நாட்டின் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அரசுப்பணியில் இணைந்திட வாய்ப்பு கிடைக்கும். சரக்கு இரயில் மூலம் உள்நாட்டு வர்த்தகம் பெருகும் என்பதைப் பிரதமர் பொறுப்பில் உள்ள தாங்கள் எண்ணிப் பார்த்திட வேண்டாமா?

உங்களின் பணிச்சுமை அதிகம்தான் ஒத்துக்கொள்கிறோம். உங்களுக்கு ஆலோசனை சொல்பவர்கள்கூட மேற்சொன்ன கருத்துகளை எண்ணிப் பார்க்கவில்லை என்றால் இந்த நாட்டில் வாழும் மக்கள் உயிர்பிழைத்து வாழ்ந்தால் வாழ்ந்துகொள்ளட்டடும். மேல்தட்டு மக்கள் மட்டும் சுகபோகமாக வாழ்ந்தால்போதும் என்று எண்ணுவது எப்படி தேசத்தின் முன்னேற்றம் என்று கருத முடியும். இந்தியாவின் வேகமான வளர்ச்சிக்கு வேகமான புல்லட் இரயில்கள் தேவை என்பதை இந்தியக் குடிமகன் என்ற முறையில் மறுக்க மாட்டேன்.
ஆனால் இந்தியாவின் உள்கட்டமைப்பை நம்மைவிட சின்னநாடாக உள்ள மலேசியாவை ஒப்புநோக்கும்போது நாம் எவ்வளவு பாதாளத்தில் இருக்கிறோம் என்பதைத் தாங்கள் அறிய வேண்டும்.
விடுதலை பெற்று 50 ஆண்டுகளை நிறைவுசெய்த சிங்கப்பூரின் முன்னேற்றத்தின் 100இல் 1 பங்கை நாம் எட்டியிருக்கின்றோமா?

இந்தியா விடுதலைப்பெற்ற 1947இல் 1 அமெரிக்கா டாலர் இந்திய மதிப்பில் 2 ரூபாய். 2015இல் 64ரூபாயைத் தாண்டிவிட்டது. சின்னஞ்சிறுநாடான சிங்கப்பூர் 1 டாலர் மதிப்பு இந்திய ரூபாயில் 48 என்று உள்ளது. சின்னஞ்சிறுநாடான சிங்கப்பூரை எட்டிப்பிடிப்பதற்கு 48 மடங்கு உற்பத்தியைப் பெருக்க வேண்டும். ஏழைகளும் நடுத்தர மக்களும், சாதியின் அடிப்படையில் மதத்தின் அடிப்படையில் மக்கள் ஒடுக்குமுறைக்குள்ளாகப்பட்டிருக்கும் சூழலில் மேல்தட்டு மக்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி என்று தாங்கள் எண்ணிக் கொண்டிருப்பது சரியா என்பதை 125கோடி மக்களின் கருத்தை அறிந்து செயல்படுத்துங்கள் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இறுதியாக, 90,000 கோடியில் புல்லட் இரயிலுக்காக ஜப்பான் நாட்டோடு போட்டுக் கொண்டுள்ள ஒப்பந்தம் உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கில் இல்லை என்பதால் இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாங்கள் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

முனைவர் தி.நெடுஞ்செழியன், தமிழ் இணைப்பேராசிரியர், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி