real estate bill
பிரச்சினையின்றி வீடுகள் விற்க- வாங்க வருகிறது புதுச்சட்டம்

புதுடெல்லி
பிரச்சினையின்றி வீடுகள் விற்கவும் வாங்கவும் வருகிறது புதுச்சட்டம்.இதனால் இனி யாரும் ஏமாறவும் முடியாது; ஏமாற்றவும் முடியாது. ரியல் எஸ்டேட் துறையின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க  அனைத்து மாநிலங்களிலும் புது ஆணையம் ஏற்ப்படுத்தப்பட உள்ளது.
வீடு வாங்க பணம் சேர்ப்பது  என்பது சாதாரண காரியமல்ல. அப்படி ஓரளவு பணத்தைச் சேர்த்துவிட்டபின் பிரச்சினை இல்லாமல் வீடு வாங்குவது என்பதுதான் மக்களின் பெரும் சவால். அந்தச் சவால்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வருகிறது நேற்று (மார்ச்-11) மாநிலங்களவையில் நிறைவேறிய ரியல் எஸ்டேட்  ஒழுங்குகுறை மசோதா.
இந்த மசோதா மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 2013-இல் மாநிலங்களலவையில் தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கும் அனுப்பபட்டது. ஆனால் ,அந்த ஆட்சிக்காலத்திலேயே அதை நிறைவேற்றமுடியவில்லை.
அடுத்து பாஜகவின் புதிய ஆட்சி 2014ஆம் ஆண்டு அமைந்தது. பின்னர் அந்த மசோதாவில் 118 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.  அப்படி திருத்தம் செய்யப்பட்ட மசோதாதான் நேற்று மாநிலங்களவையில் நிறைவேறியது.. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசும் இம்ம்சோதாவுக்கு ஆதரவு கொடுத்ததால் எவ்வித தடையுமின்றி இம்மசோதா நிறைவேறியது. அடுத்து மக்களவையிலும் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றிய உடன்தான் அது சட்டமாக வடிவம் பெறும். பாஜகவுக்கு  மக்களவையில் கூடுதல் பலம் இருப்பதால் இம்மோசாதா நிறைவேற்றத்துக்கு எவ்விதத் தடைகளும் ஏற்படப்போவதில்லை என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:-
1.புதிதாய் வீடு வாங்குபவர், விற்பவர் இவர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் இச்சட்டம் ஒழுங்குபடுத்தும். இதனால் இச்சட்டம் இருவருக்கும் பாதுகாப்பளிக்கும்..
2.அனைத்து மாநிலங்களிலும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் கட்டாயம் அமைக்கப்படும். இந்த ஆணையத்தில் புதிதாய் கட்டப்படும் கட்டுமானப்பணிகள் தொடர்பான நிலம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட வேண்டும். அனைத்துப் பரிவர்த்தனைகளும் ஆணையத்தால் கண்காணிக்கப்ப்டும். ரியல் எஸ்டேட் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் மையமாக இது விளங்கும்.
3.வீடு வாங்குவோரிடமிருந்து பெறப்பட்ட  தொகையில் 70%-ஐ தனியாக வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்து வைத்திருவேண்டும். வாங்குவோரிடமிருந்து  ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன் அந்தச் சொத்தின் விலையில் 10%க்கு மேல் முன்தொகையாக பெறக்கூடாது.
4.குடியிருப்பு வளாகத்தின் திட்ட வரைபடம், அரசு அனுமதி, நிலத்தின் முழு விவரம், கட்டுமானப் பணியில் ஈடுபடும் துணை நிறுவனங்கள் உட்பட அனைத்து விவரங்களையும் கட்டுமான நிறுவனங்கள் வெளியிட வேண்டும்.
5.அடுக்குமாடி குடியிருப்பில் நுழைவு பகுதி உள்ளிட்ட பொது இடங்களை வாடிக்கையாளர்களுக்கு விற்கக்கூடாது. வீடு அமைந்துள்ள இடத்தை மட்டுமே (கார்பட் ஏரியா) விளம்பரத்தில் குறிப்பிட வேண்டும்.
6.வீடு வாங்குவோரிடம் குறிப்பிட்ட காலத்தில் வீட்டை ஒப்படைக்காவிட்டால் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தில் வாடிக்கையாளர்களுக்கு கட்டுமான நிறுவனம் வட்டித் தொகை வழங்க இச்சட்டம் வழிவகுக்கிறது.
7.வீடு விற்பனை செய்வோர் வீட்டை வாங்குபவரின் பெயரில் பத்திரப்பதிவு செய்து தராவிட்டால் திட்டச் செலவில் 10% தொகை அபராதமாக  செலுத்த வேண்டும்.  ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்திலிருந்து நோட்டீஸ் வந்த பின்னும்  பத்திரப்பதிவு செய்யாவிட்டால் மூன்று வருட சிறைத்தண்டனையும், திட்டச் செலவில் 10%  தொகை அபராதமும் செலுத்தவேண்டும். முன்னர் பதிவுசெய்துள்ளபடி குறிப்பிட்டுள்ள விதிகளில் மாற்றம் இருந்தால் திட்டச்செலவில் 5%  தொகை அபராதம் விதிக்கப்படும்.
8.ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி  கட்டுமானப்பணிகளில் குறைபாடுகள் ஏதுமிருந்தால் வீட்டினை வாங்கிய 1 வருட காலத்துக்குள் வீட்டை விற்றவரிடம்  தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
9.அனுமதிக்கப்பட்ட வரைபட்த்திலிருந்து மாற்றங்கள் செய்ய வேண்டுமானால், வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டவரிடமிருந்து எழுத்துப்பூர்வ சம்மதம் கட்டாயம் பெறவேண்டும்.
10.500 சதுர மீட்டர் அல்லது 8 வீடுகள் கொண்ட குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள் ஆகியவை கட்டினால் இந்த ஆணையத்தில் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும்.
வீடுகள் கட்டி விற்போருக்கும், வாங்குவோருக்குமான பிரச்சினைகளை களைவதற்கான ஒரு கருவியாக  இந்த  சட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வீடு வாங்குவோர் ஏமாறவோ, வீடு விற்பவர்கள் ஏமாற்றவோ முடியாது.