பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள், நாப்கின்கள் போன்ற சுகாதாரக்கழிவுகளை அழிக்க புதிய சட்டம்.
பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள், நாப்கின்கள், மற்றும் கழிவுகளை உறிஞ்சும் பஞ்சுப் பட்டைகள் ஆகியவற்றை முறைப்படி அழிப்பதற்கான பைகள் மற்றும் உறைகளை அதன் உற்பத்தியாளர்களே கொடுக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் புதிய திடக்கழிவு மேலாண்மை கொள்கைகளை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள், நாப்கின்கள், மற்றும் கழிவுகளை உறிஞ்சும் பஞ்சுப்பட்டைகள் ஆகியவற்றை முறைப்படி அழிக்கும் நடவடிக்கையில் நுகர்வோர் சரியாக ஈடுபடுவதில்லை. இதனால் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயம் ஏற்படுகிறது.
இதனையடுத்து மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் இக்கழிவுகளை முறைப்படி அழிக்கும் நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுதத் தொடங்கி இருக்கிறது. அதனால் புதிய விதிகளை அமல்படுத்தி உள்ளது. இப்புதிய சட்டவிதிகளின்படி ஆணுறைகள், நாப்கின்கள், மற்றும் கழிவுகளை உறிஞ்சும் பஞ்சுப்பட்டைகள் ஆகியவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள், விற்பனை செய்பவர்கள் ஆகியோர் இதன் பயன்பாட்டிற்குப்பின் அவைகளை முறைப்படி அழிப்பதற்கான அவசியத்தை பொதுமக்களிடம் எடுத்துச் சொல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற சுகாதாரக் கழிவு தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் அதனை முறைப்படி அழிக்கும் நடவ்டிக்கைகளிலும் ஈடுபடவேண்டும் என அமைச்சகத்தின் புதியவிதியில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விதிமுறை நாடுமுழ்வதும் உள்ளாட்சி அமைப்புகளால் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த விதிமுறைகளை மீறி நடப்போருக்கு அபராதமும் விதிக்கப்படும்.இதுபோன்ற கழிவுகளை மொத்தமாக அழிப்பதற்கான சாதனங்கள் புதிய குடியிருப்புகள் , வீட்டுவசதி சங்கங்கள , பெரிய நிறுவனங்கள் ஹோட்டல்கள், உணவகங்கள் , நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்கள் ஆகிய இடங்களில் வைக்கப்படும்.
இந்த புதிய நடைமுறை உடனடி அமலுக்கு வந்தாலும் உள்ளாட்சி அமைப்புகள் இதற்கான திடக்கழிவு மேலாண்மைக் கொள்கையை வடிவமைப்பதற்காக 6 மாத காலம் அவகாசம் அளிக்கப்படும்.பத்து லட்சம் மற்றும் அதற்கு அதிகம் மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் இந்த திடக் கழிவு மேலாண்மை செயலாக்க திட்ட வசதிகளை இன்னும் இரண்டு ஆண்டுகளில் அமைக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.