நாளை தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்குகிறார் ஜெயலலிதா?

Must read

ஜெயலலிதா (கோப்பு படம்)
ஜெயலலிதா (கோப்பு படம்)

முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளரான ஜெயலலிதா நாளை ( 27.02.16 – ஞாயிறு) தனது ஆர்.கே.நகர் தொகுதியில் புதிய திட்டங்களை அறிவித்து, நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் தொகுதியில் விறுவிறுப்பாக நடந்துகொண்டு இருக்கிறது. ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரம் இதிலிருந்து துவங்கும் என்று கூறப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன.   இந்த நிலையில் தனது ஆர்.கே. நகர் தொகுதிக்கு நாளை நலத்திட்டங்களை துவங்கிவைக்கிறார் ஜெயலலிதா. மேலும் கடந்த 9 ஆண்டு காலமாக கொருக்குப்பேட்டையில் கட்டப்பட்டு நிலுவையிலிருக்கும் பாலத்தையும் திறந்துவைக்கிறார்.  அதோடு, ஆர்.கே.நகரில்  அறிவித்த கலைக் கல்லூரிக்கும் அடிக்கல் நாட்டுகிறார். மொத்தம் 33 திட்டங்களை முதல்வர் தொடக்கி வைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில், சுமார் 1.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். வரவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலிலும்  ஆர்.கே நகர் தொகுதியில் தான்  போட்டியிடுவார் என கூறப்படுகிறது.
இந்தத் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட வேண்டும் என்று 300க்கும் மேற்பட்ட அ.தி.மு.கவினர் விருப்ப மனு கொடுத்திருந்தனர்.  ஆர்.கே நகர் அ.தி.மு.க. தொண்டர்களும் இதையே தான் விரும்புகின்றனர்.
இந்த நிலையில்தான் நாளை நலத்திட்டங்களை தொடக்கிவைக்க ஆர்.கே. நகர் வருகிறார் ஜெயலிலதா. நாளை நடக்க இருக்கும் விழாவில் நீண்ட நேரம் பேசுவார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும்படியாக அவரது பேச்சு இருக்கும் என்றும், வரும் தேர்தலில்  அ.தி.மு.க.வின் வாக்குறுதிகளை கோடிட்டுக்காட்டும்படி அவரது பேச்சு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஆகவே, நாளை முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை ஜெயலலிதா துவக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

Latest article