நான் சொல்லல்லே….!: ப்ரியா மறுப்பு

Must read

 

க.முதல் கா. வரை தொடரில் ப்ரியா
க.முதல் கா. வரை தொடரில் ப்ரியா

“ஆபாசத்தின் எல்லையைத் தொடும் விஜய் டிவி!” என்ற தலைப்பில் நேற்று ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம்.   விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “கல்யாணம் முதல் காதல் வரை” தொடரில் “முன்னால எல்லாம் ஆசைக்கு ஒரு குழந்தை ஆஸ்திக்கு ஒரு குழந்தைன்னு சொல்லுவாங்க. இப்பல்லாம், ஆசைக்கொரு புருஷன் ஆஸ்திக்கொரு புருஷன்”னு ஆயிடுச்சு” என்று வசனம் வருவதைக் குறிப்பிட்டு விஜய் டிவிக்கு கண்டனம் தெரிவித்திருந்தோம்.

குறிப்பிட்ட வசனத்தை, அந்தத் தொடரில் நடிக்கும் ப்ரியா என்பவர் பேசியதாக தவறாக வந்துவிட்டது.

நம்மை தொடர்புகொண்ட ப்ரியா, தான் அந்த மோசமான வசனத்தைப் பேசவில்லை என்றவர், தான் பேசியதாக செய்தி வந்தது மிகுந்த வருத்தமளிப்பதாக ஆதங்கப்பட்டார். செய்தியிலும் மாற்ற வேண்டும் என்றார்.

அவர் சொன்னது போலவே செய்தியில் மாற்றிவிட்டோம். பிழைக்கு வருந்துகிறோம்.

இவர் பேசவில்லையே தவிர  அந்தத் தொடரில் குறிப்பிட்ட மோசமான வசனம் வருகிறது.  அதற்காக விஜய் டிவிக்கு மீண்டும் நமது கண்டனத்தை தெரிவிக்கிறோம்.

இன்னொரு விசயம்.

அந்த தொடரில் நடித்தவருக்கே, குறிப்பிட்ட வசனம் தரமிழந்தது என்பது புரிகிறது. ஆகவேதான், தான் பேசவில்லை என்று பதறி மறுக்கிறார். ஒரு பெண்ணான அவரது உணர்வை மதிக்கிறோம். அதே நேரம் அந்த தொடரைப் பார்க்கும் லட்சக்கணக்கான பெண்களுக்கு,. எத்தனை பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ப்ரியா உள்ளிட்ட அந்த தொடரின் குழுவினர் உணர வேண்டும்.

ப்ரியா, நம்மிடம் ஆதங்கப்பட்டதைப் போன்றே, தொடரின் இயக்குநர் மற்றும் விஜய் டிவி நிர்வாகத்திடம் ஒரு பெண்ணாக தனது ஆதங்கத்தைப் பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் குறிப்பிட்ட வசனம் மிகக் கேவலமாக இருக்கிறது என்பதை உணர்ந்துதான், பதறிப்போய் தான் பேசவில்லை என்கிறார்.

தொடரின் இயக்குநரும் விஜய் டிவியும் மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

– ஆசிரியர்

 

 

 

More articles

Latest article