newspoint
““தி.மு.க.வை கடுமையாக திட்டித்தீர்த்துவிட்டாராம் கேப்டன்” என்று லீட் கொடுத்தபடியே வந்தமர்ந்தார் நியூஸ்பாண்ட்.
நாம், “ஏன்”என்று கேட்காமலேயே செய்திகளைக் கொட்டத்துவங்கினார்:
“தங்களுடன் விஜயகாந்த் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்று தலையால் தண்ணீர் குடிக்கிறது தி.மு.க. தரப்பு. எத்தனையோ விதங்களில் எத்தனையோ முயற்சிகள் செய்து பார்த்துவிட்டார்கள். ஆனால் விஜயக்ந்த் இன்னமும் தெளிவாக ஏதும் சொல்லவில்லை. அதனால் டென்சன் ஆகித்தான், “தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.” என்று ஒரு வதந்தியை பரப்பிவிட்டார்களாம். அதைக்கண்டு ஆத்திரத்தில் திமுக தரப்பை கடுமையாக வசைபாடிவிட்டாராம் கேப்டன்!”
“தி.மு.க. ஏன் விஜயகாந்துக் கூட்டணிக்காக இவ்வளவு துடிக்கிறது.”
“சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்று தமிழகம் முழுதும் கருத்து கணிப்பு நடத்தியது. தி.மு.க – காங்கிரஸ் மட்டும் கூட்டணியில் இருந்தால் 30 தொகுதிகளில் மட்டும்தான் வெற்றி பெறும். 120 இடங்களில் பத்தாயிரம் முதல் இருபதாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்கும். அதே நேரம் இக் கூட்டணிக்கு தே.மு.தி.க, வந்தால் மொத்தம் 150 இடங்களில் அமோக வெற்றி பெறலாம் என்கிறது அந்த கருத்து கணிப்புட
“ஓ..”
“ஆமாம். இதனால்தான் தே.மு.தி.கவை வருந்தி வருந்தி அழைக்கிறது தி.மு.க தரப்பு!”
“விஜயகாந்தும் தி.மு.கவுடனான கூட்டணியைத்தான் விரும்பகிறார் என்கிறார்களே.. அதை அறிவிக்க அவருக்கு என்ன தயக்கம்?”
“அவர் அப்படி முன்னதாகவே அறிவித்துவிட்டால் பா.ஜ.கவின் பார்வை, அ.தி.மு.க. பக்கம் திரும்பும். அந்த இரு கட்சிகளிடையே கூட்டணி வந்துவிடக்கூடாது என்று நினைக்கிறாராம் விஜயகாந்த். ஆகவேதான் கடைசி நேரத்தில்தான் திமுகவுடனான தனது கூட்டணியை அறிவிப்பாராம்!”
“அப்படியானால், அதே கடைசி நேரத்தில் அ.தி.மு..க. – பா.ஜ.க. கூட்டணி ஏற்படாதா.. அதை விஜயகாந்தால் எப்படி தடுக்க முடியும்?
“நீர் கேட்பது லாஜிக்கான கேள்வி. ஆனால் அரசியலில் லாஜிக் கிடையாது. எதுவும் நடக்கும்” என்ற நியூஸ்பாண்ட், “இதற்கே இப்படி ஓர் கேள்வியை கேட்கிறீரே.. இன்னொரு அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் இன்னொரு விசயத்தைக் கேட்டால் என்ன சொல்வீரோ…”
“சரி விசயத்துக்கு வாரும்..!”
“அ.தி.மு.க. – பா.ஜ.க கூட்டணி முடிவாகிவிட்டது. விஜயகாந்தை குழப்புவதற்காகத்தான் பாஜக பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது. இப்படி அக் கட்சியை பகடைக்காயாக பயன்படுத்துவது ஜெயலலிதாதான்” என்கிறார்கள்.!”
“அது சரி.. இந்த செய்தியிலும் லாஜிக் இல்லையே..!”
“தே.மு.தி.க. – தி.மு.க. கூட்டணி உறுதி ஆகிவிட்டது. இதற்கு சன் டிவி அதிபர் கலாநிதிதான் தூது சென்றார் என்று செய்தி பரப்பப்பட்டதே.. அந்த கலாநிதி மாறன் இரண்டு வாரங்களுக்கு முன்பே வெளிநாட்டுக்கு பறந்துவிட்டாராம். அவர் பெயரைத்தான் கூட்டணி நாடகத்துக்கு பயன்படுத்தி விட்டார்கள். இதில் மட்டும் லாஜிக் இருக்கிறதா என்ன..”
“அடப்பாவமே.. நாட்டிலேயே இல்லாதவரையை பேச்சுவார்த்தை நடத்தினார் என்று பரப்பிவிட்டார்களா…” – நாம் வாய் பிளந்து கேட்ட… நியூஸ்பாண்ட் பறந்துவிட்டார்.