modi
 
நாடாளுமன்ற விவாதத்தின் தரத்தை அடிம்ட்ட‌த்திற்கு கொண்டுபோய்ச் சேர்த்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.  குடியரசுத்தலைவரின் நாடாளுமன்ற உரைக்கு நன்றி தெரிவிக்கும் மசோதா மீதான பதிலுரையில்தான்  நம் பிரதமரின் அந்த மோசமான பேச்சு இடம் பெற்றது. இந்திய நாடாளுமன்ற பாரம்பரியத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு  பிரதமர் மோடியின் இந்தப்பேச்சின் உள்ளடக்கம், நோக்கம் அனைத்துமே அசிங்கமாய் அம்பலப்பட்டுப்போய் நிற்கிறது. பிரதமரின் இதுபோன்ற கீழ்தரமான உரையை நம் நாடாளுமன்றம் இதுவரை கேட்டதில்லை. பேச்சில் நகைச்சுவை, கிண்டல் இவை எல்லாம் இருப்பது அவசியம்தான். ஆனால் இவ்வளவு சிறுபிள்ளைத்தனமான உரை அதுவும் ஒரு நாட்டின் உயர்ந்த பதவியிலிருக்கும் பிரதமரிடமிருந்து வெளிப்பட்டதுதான் கேவலத்தின் உச்சம்.
நாடாளுமன்றத்தின்  கூட்டுக் கூட்டதில் பேசிய குடியரசுத்தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மசோதா குறித்துப் பேசுகிறோம் என்பதையே மறந்துவிட்டு  காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சுக்கான பதிலுரையாகவே இருந்தது மோடியின் அந்த உரை. அது ஒரு புனிதமான‌ தருணம் .  அந்தப் புனிதமான தருணத்தை  ஒரு குழாயடிச்  சண்டையைப்போல் மாற்றிவிட்டார் நம் பிரதமர்.
நாடாளுமன்றத்தில் வலுவில்லாத எதிர்க்கட்சிதான் உள்ளது என்பது உண்மை. எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தி பல்வேறு தளங்களில் திறன் குறையப்பெற்றவர் என்பதும் உண்மைதான். ஆனால் பிரதமர் என்பவர் யார்? அவர் வெறும் ஆளும் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் மட்டுமல்ல. அவர் இந்திய அரசாங்கத்தின் தலைவர்.  அவர் சபையை வழிநடத்துபவர். அவையின் கண்ணியத்தை முன்னெடுத்துச் செல்பவர். எதிர்க்கட்சியின் ராகுல் காந்தியோடு  மல்லுக்கு நிற்கும் கூட்டத்தில்  ஒருவராக பிரதமரும்  சங்கமிக்க வேண்டும்  என்பதில்லையே!
இப்போதுதான் முதல் முறையாக எம்.பி.ஆக நாடாளுமன்றம் வந்திருக்கிறேன் என்று மோடி சொல்வது உண்மைதான். ஆனால் அவர்  நீண்ட கால அரசியல்  அனுபவம் கொண்டவர்.  இந்திராகாந்தி முதல் மன்மோகன் சிங் வரை 9 பிரதமர்களைக் கண்டவர் அவர். இருந்தும் மோடியின் அனுபவம் தண்ணீரில் மிதக்கும் ஒரு வாத்தினைப்போலவே இருந்தது ஏன்?
நாடாளுமன்றத்தில் பிரதமர் என்பவர் உயர்ந்த இடத்தில் இருப்பவர். அவருடைய விவாதமும் அதன் தரமும் உச்சியில் இருக்க வேண்டியவை. இந்த உயர்ந்த  தரம் அடல்பிஹாரி வாஜ்பாயிடம் இருந்தது. ஆனால்  அவர் சார்ந்த அதே பாஜக வைச் சேர்ந்த மொடியிடம் மட்டும் இல்லாமல் போனது ஏன்?இதை மோடி கற்றுக் கொண்டாரா?
நாடாளுமன்ற விவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒவ்வொரு பிரதமருக்கும் ஒரு தனிப்பட்ட பாணி இருக்கும். அது அவரவரின் குணநலன் சார்ந்த ஒன்று.  ஆனால் பிரதமரின் நாடாளுமன்ற விவாதப் பேச்சுத்திறமை, எதிர்க்க‌ட்சி உறுப்பினர்களின் கவனத்தை பெறவைப்பது,  பேச்சின்  தெளிவான உள்ளடக்கம் என  பிரதமருக்கு பிரதமர் வேறுபடும்.
நாடாளுமன்ற விவாத‌த்தில் செயல்பட்ட நம் பிரதமர்களைப் பற்றி இங்கே காண்போம்:-
இதில் முதலிடம் பெறுபவர் நம் தேசத்தின் முதல்பிரதமரான ஜவஹர்லால் நேருதான். நாடாளுமன்றத்தின் பெருமை காத்த பெருந்தகையாளர் அவர். நாடாளுமன்ற விவாதங்களில் ஈடுபடும் உறுப்பினர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும்  கொடுத்தவர். அவருக்கு பிடித்திருந்தால் கட்சிபேதமின்றி   எவரையும் பாரட்டியவர்.  ஒருமுறை இளம் வயது வாஜ்பாய் நாடாளுமன்ற விவாதம் ஒன்றில் கலந்து கொண்டார். அவ்விவாத்த்தின்போது, நேருவுக்கு பிடித்தமான வெளியுறவுக் கொள்கைகளைப் பற்றி வாஜ்பாய் சாடிப் பேசினார். இருந்தும் வாஜ்பாயின் விவாதம் பிடித்திருந்தால் அவரை மனதாரப் பாராட்டினார் நேரு.
ஆனால் இந்திராகாந்தியோ மிகவும் வித்தியாசமானவர். இந்திராகாந்தி நாடாளுமன்றத்தில் நாணமும் வெட்கமும் கலந்த பெண்மணியாகவே காணப்பட்டார். இதனால் ‘ஊமைப் பொம்மை” என்று எதிர்க்ட்சித் தலைவர்களால் இவர் விமர்சனத்துக்கு உள்ளானார். நாடாளுமன்ற விவாதங்களில் இந்திராவின் உரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எதிர்க்க்ட்சித்தலைவர்களை தாக்குவதற்கு நேரம் கிடைத்தபோதுகூட அவர் அதைச் சரியாகச் செய்யவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் மீதான சின்ன சின்ன சண்டைகள் போன்ற கூக்குரல்களிலிருந்து இந்திரா ஒருபோதும் விலகி இருந்ததில்லை.
ராஜீவ்காந்தியோ நாடாளுமன்றத்தில் எதைப்ப்ற்றியும்  கவலை கொள்ள்ளாத ராஜா அவர். எல்லாவற்றிலும் அவர் ஒதுங்கியே இருந்தார். அவர் குணநலன் அப்படி.மேலும், மக்களவையில் அவருடைய ஆளும் கட்சிக்கு முரட்டுப் பலம் இருந்ததும் ஒரு முக்கிய காரணம். ஆனால் அதேவேளை அவருடைய ஆட்சிக் காலத்தின் மத்தியில் போபார்ஸ் ஊழல் புயல் நாடாளுமன்றத்தில் வீசத் தொடங்கியது.  அவருடைய ஆளும் கட்சி உறுப்பினர்களால் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வாயை அடக்க முடியவில்லை. இருந்தும் அவையின் கண்ணியமும் நாகரிகமும் சிறிதும் மீறப்ப்டவில்லை.
அடுத்து பி.வி.நரசிம்மராவ். அவர் அறிவார்ந்த கல்விமான். அவருடைய சிறுபான்மை அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே பல்வேறு  கட்டமைப்பு சீர்திருத்த மசோதாக்களை  அவையில் கொண்டு வந்தது. அவையிலும் சரி, அவைக்கு வெளியேயும் சரி எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனோ, மற்றவர்களுடனோ அவர் எவ்வித உணர்ச்சிகளையும் காட்டாதவர். புன்னகை பூக்கா முகத்துடன் அவர் பிரதமர் இருக்கையில் இருந்தவர்.  அவர்முன் நேருக்குநேர் வைக்கப்பட்ட எந்த விமர்சனங்களையும்கூட‌ கண்டுகொள்ளாதவர். எதிர்க்கட்சிகள் மீதான  அவருடைய பேச்சில் நையாண்டியும் நக்கலும் கலந்திருந்தாலும் அது ஒருபோதும்  வரம்பு மீறிப்போனதில்லை.
அடுத்து வி.பி.சிங், சந்திரசேகர், எச்.டி. தேவே கவுடா மற்றும் ஐ.கே.குஜ்ரால் போன்ற இடைக்கால பிரதமர்கள்  இருந்தனர். இவர்களை அடுத்து வாஜ்பாய் பிரதமரானார். இவருடைய நாடாளுமன்ற விவாதச் செயல்பாடுகள்  அனைத்தும் நேருவுக்கு நிகரானவை.
ஆழமும் தெளிவும் கொண்ட இவருடைய விவாத உரையில் அவ்வப்போது நகைச்சுவைகளுக்கும் பஞ்சம் இருக்காது. இவருடைய  நாடாளுமன்ற‌ பேச்சுத்திறமை  மற்ற பிரதமர்களுடன் ஒப்பிடமுடியாதது. அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்தது. அவையில்  கோப அலைகளுடன் சூடான விவாதங்கள் சில சமயம் நடைபெற்றபோதும் கூட எதிர்க்க்ட்சிகளிடம் பக்குவமாய் தன் கருத்தை உணரவைத்தவர்.
பிரதமராகவும்,  நீண்டகாலம் எதிர்க்கட்சி உறுப்பினராகவும் இருந்து நாடாளுமன்றவாதிகளுக்கு வாஜ்பாய் ஒரு நல்ல முன் உதாரணமாகத் திகழ்கிறார். நாடாளுமன்ற விவாதம்  எனபது மிக உயர்ந்த பாரம்பரியமும் நாகரிகமும் மதிப்பும் மரியாதையும் கொண்ட களம்.  அந்த மாண்பின் எல்லைக்கு பங்கம் விளைவிவிக்கும் விதமாக மோடி வரம்புமீறிச் சென்றுவிட்டார். அவருடைய பேச்சின் உள்ளடக்கத்திலும்  சரக்கு ஒன்றும் பெரிதாக இல்லை.  அண்மையில்  மக்களவையில் அவர் பேசிய பேச்சையே  குறிப்பிட்டுச் சொல்லலாம்.
எதிர்க்கட்சிகளை  அராஜகமுறையில் முறையில் அணுகுவதுடன், தேவையில்லாமல் அவர்களைச் சீண்டிப்பார்ப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார் மோடி.எதிர்க்கட்சிகளைச்  அவமானப்ப்டுத்தி அதில் இன்பம் காண்பவராகவே மோடி இருக்கிறார்.
ஜனாதிபதியின் உரைக்கு ந‌ன்றி தெரிவிக்கும்  மசோதா மீதான பதிலுரையில் தனது அரசின் கொள்கைகளையும், அதன் முக்கியத்துவத்தையும் , செயல்படுத்தப்போகும் விதம்பற்றியும்  விளக்கமளித்திருக்கவேண்டும். அதையும் தாண்டி எதிர்க்ட்சிகள் எழுப்பும் மக்கள் நலப்பிரசினைகளுக்குக்கூட அதில் பதில் சொல்லி இருக்கலாம்.   தேசத்துரோகம், தேசியவாதத்தின் வரையறை, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் விவகாரம், நாடு முழுவதும் புயலைக் கிளப்பிய ஹைதரபாத் மத்திய பல்கலைக் கழக தலித் மாணவர் ரோஹித் வெமுலாவின் மரணம் இப்படி எதிர்க்கட்சிகளால்  கூறபப்டும் குற்றச்சாட்டுகளுக்குகூட மோடி இந்த உரையில் பதில் ஏதும் சொல்லவில்லை.
நாடாளுமன்றத்தில் மோடி நிகழ்த்திய‌ இந்தப் பேச்சு  தாரம் தாழ்தலின் உச்சியைத் தொட்டுள்ளது என்பதுதான் சோகம்.  ஒரு விவாதத்தில் எப்படி எல்லாம் பேச‌க்கூடாது என்பதை  தெரிந்து கொள்ளவேண்டுமெனில், மோடியின் இந்தப் பேச்சை பள்ளிக்கூடஙக‌ளில் மாணவர்களுக்கு பாடமாக வைக்கலாம்.