தமிழகத்தில் 6 வகையான மாட்டு இனங்கள் உள்ளன. கொங்கு மண்டலத்தில் காங்கேயம், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் பர்கூர் மலைமாடு என்ற இனமும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் உம்மபலச்சேரி என்ற இனமும், மதுரை மாவட்டத்தில் புளியகுளம் என்ற இனமும், தேனி மாவட்டத்தில் மலைமாடு என்ற இனமும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற இடங்களில் ஆலாம்பாடி என்ற இனமும் இருந்தன. இதில் ஆலாம்பாடி என்ற இனம் அழிந்து விடடது. இன்றைய நிலவரப்படி ஒரு லட்சம் காங்கேயம் மாடுகளும், 22 ஆயிரம் பர்கூர் மலைமாடுகளும், 30 ஆயிரம் புளியகுளம் மாடுகளும், 30 ஆயிரம் மலைமாடுகளும் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் காங்கேயம் மாடுகள் கடந்த 1990ல் 11 லட்சத்து 94 ஆயிரம் மாடுகள் இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் உள்ள மாட்டு இனங்களை அழிப்பதற்காகவே பீட்டா உள்ளிட்ட சில வனவிலங்கின அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்குகிறார்கள். இவர்களுக்கு எருமைக்கும் மாடுக்கும் வித்தியாசம் தெரியாது.

வெள்ளைக்காரன் நம் நாட்டை ஆண்டை போது கூட மாடுகளுக்கு இந்தளவுக்கு ஆபத்துக்கள் வந்தது இல்லை. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டின் போது தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் ஒன்றரை லட்சம் காளைகள் பங்கேற்றன. தடை விதித்ததால் சுமார் 70 ஆயிரம் ஜல்லிக்கட்டு காளைகள் விற்கப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும் 50 ஆயிரம் காளைகள் மட்டுமே பங்கேற்கும் நிலை உள்ளது. தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டால் இந்த காளைகளும் விற்கப்பட்டு விடும்.
இதில் மறைந்திருக்கும் உண்மை என்றால் ஜல்லிக்கட்டில் கிராமங்கள் சார்பில் நிறுத்தப்படும் காளைகள் அதிகம். இந்த காளைகள் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்லாமல் அந்த கிராமங்களில் உள்ள மாடுகளின் இனப்பெருக்கத்துக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. ஜல்லிக்கட்டு காளைகள் அழிக்கப்பட்டால் தமிழகத்தில் மாட்டு இனமே அழியும் ஆபத்து ஏற்படும். எனவே இதுபோன்ற விபரீதங்கள் நிகழாமல் தடுப்பது ஆட்சியாளர்களின் கடமை. ஜல்லிக்கட்டு, ரேக்ளா போன்ற விளையாட்டுக்கள் நடத்தப்படும் போது மாடு வளர்க்கும் ஆர்வம் நிச்சயம் மக்கள் மத்தியில் ஏற்படும்” .