12166636_781901428620736_1101656350_n

ஒப்பந்தம் ஏற்கெனவே ரத்தாம்!: சந்தேக நிழலில் சரத்!

நேற்று திடுமென சரத்திடமிருந்து செய்தியாளர்களுக்கு அழைப்பு. அதான் அன்னைக்கே “விசாலுக்கு ஒத்துழைப்போம்”னு இறுதி அறிக்கை கொடுத்திட்டாரே.. இனியும் என்ன என்கிற கேள்வியோடு சென்ற பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் சரத்.

அதாவது, நடிகர் சங்க இடத்தில் கட்டிடம் கட்டுவது தொடர்பாக எஸ்.பி.ஐ. சினிமாஸுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை  கடந்த மாதமே ரத்து செய்துவிட்டதாக கூறினார்.

“அப்புறம் ஏன் தேர்தலுக்கு முன்னாலேயே இதைச் சொல்லலை..” என்று கேட்டதற்கு, “அப்படிச் சொன்னால் தங்களுக்கு கிடைத்த வெற்றியாக விசால் அணியினர் அதைச் சொல்லியிருப்பார்கள். அதனால் அவர்களுக்கு ஆதரவு பெருக வாய்ப்பிருக்கிறது என்பதால் அப்போது சொல்லவில்லை” என்றார்.

சரத்தின் அறிவிப்பு விசால் அணியினரை மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. “இதற்காகத்தானே இத்தனை பாடுபட்டோம்” என்று சந்தோசமாகச் சொல்லி சிரிக்கிறார்கள்.

அதே நேரம் சரத்தின் அறிவிப்பில் பலவித சந்தேகங்களையும் எழுப்புகிறார்கள்.  அதாவது,

“தேர்தலுக்கு முன்பாக சொன்னால் விசால் அணிக்கு சாதகமாகிவிடும் என்பதால் சொல்லவில்லை என்கிறார்.  அப்படியானால் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு சொல்லியிருக்கலாமே.. ஆனால்,  அவரது தோல்வி அறிவிக்கப்பட்ட பிறகும், பத்திரிகையாளர்களிடம், “அந்த ஒப்பந்தம் சிறந்தது, அதை நிறைவேற்ற புதிய அணியிடம் பேசுவேன் ” என்று ஏன் சொன்னார்?

இது ஒருபக்கம் இருக்கட்டும். அது தவறான ஒப்பந்தம் என்பதால்தான் சரத்குமார் அதை ரத்து செய்தார் என்றால் இதுவரை நாசர் தரப்பு சொல்லிவந்த குற்றச்சாட்டு உண்மைதான் என்பதாகிறது. ஆகவே இப்படி தவறான ஒப்பந்தத்தை போட்ட சரத்குமார் மன்னிப்பு கேட்கவேண்டும்.

சிறந்த ஒப்பந்தம்  என்றாலும், நாசர் அணியின் எதிர்ப்புக்கு பயந்து ரத்து செய்தார் என்றே வைத்துக்கொள்வோம். அப்படியானால் எல்லா நடிகர்களையும் முன்பே அழைத்து இதுபற்றி பேசியிருக்கலாமே. இந்த விவகாரம் குறித்து கேட்டவர்களை எல்லாம் கடுமையான ஆபாச வார்த்தைகளால் அர்ச்சிக்கப்படுவதுதானே நடந்தது.

அதுமட்டுமல்ல.. இப்போது நடிகர் சங்க கட்டிடம் இடிக்கப்பட்டுவிட்டது. ஆக சங்கத்துக்கு இரட்டை நஷ்டம். இதற்காகவும் சரத் மன்னிப்பு கேட்கவேண்டும்” என்கிறார்கள் விசால் அணியினர்.

அதோடு, “ஒப்பந்தம் ரத்து என்று அறிவித்த சரத், லெட்டர் பேடில் எழுதப்பட்ட அக்ரிமெண்ட்டை காண்பித்தார். ஒப்பந்தம் என்றாலோ அதை ரத்து செய்தாலோ பத்திரத்தாளில்தானே எழுதுவார்கள். ஆக இதிலும் ஏதோ வில்லங்கம் இருக்கிறது” என்கிறார்கள்.

அதனால்தான், “ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக சரத் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  ஆனால் அதை படித்துப் பார்த்துவிட்டுத்தான் கருத்து சொல்ல முடியும்” என்று விசால் எச்சரிக்கையுடன் கூறியிருக்கிறார்.

இன்னொரு கருத்தும் கோலிவுட் வட்டாரத்தில் உலவுகிறது. அதாவது, “தான் வெற்றி பெற்று, ஒப்பந்தத்தை நிறைவேற்றிவிடலாம் என்றுதான் சரத் நினைத்தார். இப்போது தோற்றுவிட்டதால், முன் தேதியிட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்கிறார்” என்கிறார்கள்.

சினிமாவை மிஞ்சின சூது நடந்திருக்கும் போலிருக்கே..!