vijikanthe-680x365

ணக்கம் திரு விஜயகாந்த்..

எல்லோரையும் போல உங்களை கேப்டன் என்று விளிக்காததற்கு எனக்கு ஓர் எளிய காரணம் இருக்கிறது. எங்கள் நண்பரில் ஒருவரை நாங்கள் கேப்டன் என்றே அழைக்கிறோம்.. உங்களையும் கேப்டன் என்றழைத்தால் பெரும் குழப்பம் விளையக் கூடும். அது தவிர நீங்கள் ஒரு வேளை மெய் வாழ்வில் கேப்டனாக இருந்தால் அதனால் என்னென்ன நிகழும் என்று நினைக்கையில் எனக்கு பகீரென்றிருக்கிறது. அதன் காரணமாகவும் நான் இந்த விளியை தவிர்க்கிறேன் என்றும் வைத்துக் கொள்ளுங்கள்..

‘த்தூ’ என்று நீங்கள் பத்திரிகையாளர்களைப் பார்த்து காறித் துப்பியதை பெரும் வீரமென நண்பர்கள் பலர் பேசித் திரிகிறார்கள்.. ஒரு வகையில் அதுவிம் வீரமெனவே கொள்ளுவோம்..

ஆனால் எனக்கு உங்கள் முன் வைக்க சில கேள்விகள் உள்ளன..

பலரும் கேட்பது போல உங்கள் கட்சியின் கொள்கைகள் என்ன என்று நான் கேட்கவே மாட்டேன்.. ஆனால், தமிழகத்தின் முக்கியமான சில நிகழ்வுகளின் போது உங்களது நிலைப்பாடு என்ன என்று புரியாததனால் இந்த கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன்..

நந்தன் ஸ்ரீதரன்
நந்தன் ஸ்ரீதரன்

முள்ளி வாய்க்கால் படுகொலைகளின் போது தமிழகமே கதறி கண்ணீர் விட்டது. என் சகோதரன் முத்துகுமார் தன்னை தீயூட்டி போராட்டத்தை வளர்க்க எத்தனித்தான்.. அந்த நேரத்தில் புலி போல அல்ல.. பூனை போலக் கூட உங்கள் குரல் உரத்து ஒலிக்கவில்லையே.. ஏன் விஜயகாந்த்..? இத்தனைக்கும் பெற்ற பிள்ளைக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து அழகு பார்த்தவர் நீங்கள்.. அவர் மறைந்து விட்டார் என்ற தகவலைக் கேள்விப்பட்டதும் உங்களது நிலைப்பாடு மாறியது எப்படிங்க சார்..?

சரி.. அறுநூறு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டது சாதாரணமான நிகழ்வு.. அறுநூறு குடும்பங்கள் அநாதையானது தினசரி நிகழ்வுதான், அது அப்படியே இருக்கட்டும்.. தமிழகத்தை அபாயத்தின் பிடியில் வைக்கும் கூடன்குளம் திட்டத்தில் இன்று உங்களது நிலைமை என்ன விஜயகாந்த்.?

நியூட்ரினோ திட்டம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..?

இந்த கேள்விகளுக்கெல்லாம் உங்களிடம் இருந்து நான் பதிலை எதிர்பார்க்கிறேன்..

சரி.. இப்போது நீங்கள் கோபப்பட்ட ஊடகங்கள் பற்றி பேசுவோம்.. இதே ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கியதால்தான் நீங்கள் இன்று முக்கியமான ஆளாக இருக்கிறீர்கள்.. இதே ஊடகங்களின் ஒத்தூதலின் பலனாகத்தான் இன்று இங்கும் சேர மாட்டேன் அங்கும் சேர மாட்டேன் என்று எங்கே அதிக பலன் கிடைக்குமோ அங்கே இணைவோம் என்று நீங்கள் போக்குக் காட்டும் நிலைக்கு நீங்கள் வந்தீர்கள்..

ஏறி வந்து விட்டு நீங்கள் தூ எனத் துப்புகிறீர்கள். சந்தோஷம்.. இப்போதுதான் உங்களிடம் நான் முக்கியமான ஒரு கேள்வியைக் கேட்க வேண்டி இருக்கிறது.

எல்லாம் சரி.. இந்த ஊடகவியலாளர்களை விட ஜெயலலிதாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்குதான் அதிகம் இருந்தது. அந்த வாய்ப்பில் எவ்வளவு வாய்ப்பை நீங்கள் பயன் படுத்திக் கொண்டீர்கள்.. ஜெயலலிதாவை கேள்வி கேட்க துப்பிருக்கா என்று கேள்வி கேட்ட நீங்கள் நியாயமாக ஜெயலலிதாவிடம் எத்தனை கேள்வி கேட்டீர்கள் என்பதையும் தயவு செய்து சொல்லுங்கள்..

கடைசியாக ஒரு கேள்வி.. உங்கள் கட்சியின் சார்பிலும் கேப்டன் நியூஸ் என்ற ஒரு நியூஸ் சேனல் இருக்கிறது. அதில் பணியாற்றுபவர்களும் பத்திரிக்கையாளர்களே.. இவ்வளவு வீரமான நீங்கள் உங்கள் பத்திரிக்கையாளர்களில் எத்தனை பேரை ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்க அனுப்பினீர்கள்..? அப்படிட கேள்வி கேட்காத எத்தனை பேரின் முகத்தில் நீங்கள் காறித் துப்பினீர்கள்..? இநத் கணக்கையும் நீங்கள் வெளியிட்டால் நாங்கள் சந்தோஷப்படுவோம்..

நேரிலேயே கேள்வி கேட்க வாய்ப்பிருந்தும் சும்மா நாக்கை மட்டும் துருத்தி விட்டு நீங்கள் சட்ட மன்றத்திலிருந்து ஓடி வந்து விட்டீர்கள்.. உங்களிடமே பத்திரிக்கையாளர்கள் குழு இருந்தும் அதே ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்ட வக்கில்லாமல் இருக்கிறீர்கள்..

இத்தனை குறைகளையும் உங்களிடம் வைத்துக் கொண்டு உங்களிடம் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்களை காறித் துப்பி இருக்கிறீர்கள்..

மன்னிக்கவும் விஜயகாந்த்..

நீங்கள் காறித் துப்பியது முகம் காட்டும் கண்ணாடியின் மீது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா இல்லையா..?

நந்தன் ஸ்ரீதர், எழுத்தாளர். சென்னை (முகநூல் பதிவு)