a
மிழக சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி என்ற முழக்கத்துடன் மக்கள் நலக் கூட்டணியுடன் கைகோர்த்து  களமிறங்கி இறங்கி இருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்.. அவருடைய இந்த முடிவு தமிழக அரசியலில் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது? இதனால் மற்றவர்களுக்கு சேதமா? இல்லை அவருக்கே சேதாராமா? என ஆச்சரிய விழிகள் இங்கு ஏராளம் திறந்து கிடக்கின்றன.
கேப்டனின் இந்தக் கூட்டணி அதிமுக மற்றும் திமுகவுக்கான மாற்றுக் கூட்டணி என அறிவித்துள்ளது.  கேப்டன் கட்சியை கூட்டணியில் சேர்ப்பதற்காக திமுகவும் பாஜகவும் பணத்தையும் மற்ற சலுகைகளையும் அள்ளி இறைக்க பேரம் பேசின என்ற புகார்களை எல்லாம் கேப்டன் ஒதுக்கித்தள்ளிவிட்டார். இந்த பரபரப்புக்கிடையில் விஜயகாந்தின் இந்த மூன்றாவது கூட்டணி முடிவு எதிர்கால தமிழக அரசியலில் என்ன விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என்பதுதான் அரசியல் நோக்கர்களின் மிகப்பெரிய ஆர்வம்.
இந்திய ஜனநாயகத் தேர்தலை ஆய்வு செய்தால் அதில் தமிழக அரசியல் களம் மிகவும் விசித்திரம் நிறைந்தது. கடந்த 30 ஆண்டுகளில் மூன்றே மூன்று முதல்வர்களின் ஆட்சி. அதுவும் அவர்கள் மூவரும் சர்வ வல்லமை படைத்த மனிதர்கள். கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என மூவரும் 30 ஆண்டுகளாய் தமிழக மாநில முதலமைச்சர்களாய் பொறுப்பில் இருந்தவர்கள்.  கடந்த தேர்தல்களில் யார் யாரை வெல்வது? தலைமைப் பதவியைக் கைப்பற்றுவது யார்? என்ற கடுமையான போட்டி 1971 முதல் கருணாநிதி VS எம்.ஜி.ஆர், கருணாநிதி Vs  ஜெயலலிதா என்ற ஆளுமைகளுக்கிடையேதான் நடந்துள்ளது.
அதிகாரத்துறை, ஊடகம், காவல்துறை, குடிமக்கள், இன்னும் பிற என தமிழ்ச் சமூகத்தின் அனைத்து அம்சங்களுமே இங்கு அதிமுக மற்றும் திமுக என இரு பெரும் கூறுகளாகவே பிரிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு தேர்தலின்போதும் ஆளும் கட்சி வெளியேற்றப்பட்டு அடுத்த கட்சி ஆட்சிக்கு வருவது கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல. தற்போது சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறும் 6 மாநிலங்களிலும் இதுதான் நடந்துள்ளது.
தமிழகத்தின் ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் வென்ற கட்சிகள் அறுதிப்பெரும்பான்மையுடன் மிகப்பெரிய எண்ணிக்கையுடன்தான் ஆட்சி அமைத்துள்ளது. இதுவே தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத  அரசியல் முத்திரையாக இருந்து வருகிறது. இவ்வளவு  சக்திவாய்ந்த திமுக, அதிமுக எனும் இரு கட்சிகளின் ஆதிக்கத்துக்கு மத்தியில் தேமுதிக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், பாமக என மாநிலக் கட்சிகள் ‘கொலவெறி’யுடன் ஏன் மல்லுக்கு நிற்கின்றன என்பதுதான் ஆச்சரியத்தை அள்ளித்தருகின்றன.
அதற்கான பதில் ஒன்றே ஒன்று மட்டும்தான். அதாவது எதிர் வாக்குகளைத் தனித்தனியாகச் சிதறடித்து  அதன்மூலம் அதிக வாக்குகள் பெற வழிவகுத்து ஒருவரை வெற்றிபெற வைப்பதுதான்.   விஜயகாந்தின் மூன்றாவது கூட்டணியும் இதைத்தான் செய்யப்போகிறதா? அல்லது திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மிகப்பெரும் சேதாரத்தை ஏற்படுத்தப்போகிறதா?
2005 இல் உருவான தேமுதிக இதுவரை நான்கு சட்டமன்றத் தேர்தல்களிலும், நாடாளுமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகின்றன. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் தேமுதிக, பாஜக, மதிமுக,பாமக இவைகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன.தேமுதிக, 14 மக்களவைத் தொகுதிகளில் அதாவது 84 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இணையான இடங்களில் போட்டியிட்டது. இந்த 84 தொகுதிகளில் 78 தொகுதிகளில் தேமுதிக,  அதிமுக மற்றும் திமுகவுடன் நேரடிப்போட்டியை சந்தித்தது.அதில்
திமுகவின் வாக்குகளை  தேமுதிக மிகவும் கடுமையாக பாதித்தது.  வாக்குகளை தேமுதிக பிரித்ததில் அதிமுகவைவிட  2.5 மடங்கு அதிகமாகவே தேமுதிகவின் தாக்கம்  இருந்தது.
இதனை எளிமையாகச் சொல்வதென்றால், தேமுதிக பெற்ற ஒவ்வொரு 100 வாக்குகளிலும் 25 வாக்குகள் திமுகவினுடையது. 10 வாக்குகள் அதிமுகவினுடையது.
2014 மக்களவைத் தேர்தலை பார்க்கும்போது அதனை மோடி அலை என்று எடுத்துக் கொண்டால் அதனால் பாஜகவின் கூட்டணி பங்குகுதாரர் என்ற முறையில் தேமுதிகதான் பலனடைந்திருக்க வேண்டும். ஆனால், தேமுதிக பிரித்த வாக்குகள் திமுகவிற்குத்தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின.  அ.தி.மு.க. பெரும் வெற்றி பெற்றது.