துலா ராசி
துலா ராசி

தன்முனைப்பால் எதையும் சாதிக்கும் குணமுள்ள துலாம் ராசி அன்பர்களே…
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு பனிரெண்டாம் இடத்தில் இருந்துகொண்டு வீண் அலைச்சல்களையும், காரியத்தடைகளையும் அளித்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டிற்குள் அமர்கிறார். இதனால், உங்களுடைய அந்தஸ்து மேலும் உயரும். செல்லுமிடமெல்லாம் சிறப்புதான். எதிர்பாராத பண வரவு உண்டு. குடும்பத்தில், திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதோருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.
மகளின் திருமணம் சிறப்பாக நடைபெறும். உங்களை ஒதுக்கிய உறவினர்கள் உங்கள் நிலை உயர்வதைக்கண்டு தானாகவே உங்களை நாடி வருவார்கள். அவர்களிடம் எச்சரிக்கையோடு பழகுவது நல்லது. நீங்கள் உறுப்பினராக உள்ள அமைப்புகளில் முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உண்டு. திட்டமிட்டு செயல்பட்டு கடன் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள்.
08.01.2016 முதல் 10.03.2016 வரை பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். . மூத்த சகோதரர் மூலம் சில உதவிகள் கிட்டும். மனைவி வழியில் சொத்து ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு அயல்நாடு செல்லும் யோகம் கிட்டும்.
11.03.2016 முதல் 15.11.2016 வரை உங்கள் சுற்றுலா பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். அதனால் மனம் புத்துணர்ச்சி அடையும். அதே நேரம் உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. சிறு உபாதைகள் வந்துபோகும். வாகனங்களால் செலவு உண்டு.
16.11.2016 முதல் 25.7.2017 வரை.. அவசரப்பட்டு யாருக்கும் வாக்கு அளிக்காதீர்கள். ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். பண விசயத்தை அதீத எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய காலகட்டம் இது.
வழிபாடு: சென்னை குன்றத்தூர் ஸ்ரீ நாகேஸ்ரரை வணங்குங்கள்.
 
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்துகொண்டு ஓரளவு நற்பலன்களை அளித்த கேது இப்போது உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய வீடான 5-ம் வீட்டிற்குள் வந்து அமர்கிறார். இது சிக்கலான காலகட்டம்தான். எந்த ஒரு விசயத்திலும் தெளிவான முடிவெடுக்காமல் குழம்பி தவிப்பீர்கள். உயர்கல்வி அல்லது வேலைவாய்ப்பின் பொருட்டு பிள்ளைகளைப் பிரியும் நிலை உருவாகும்.
08.01.2016 முதல் 12.07.2016 வரை பிறரை நம்பி எந்த காரியத்தையும் ஒப்படைக்காதீர்கள். மறைமுக எதிரிகளால் பிரச்சினை ஏற்படும். கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இளைய சகோதர வகையில் நன்மைகள் உண்டாகும். 13.07.2016 முதல் 20.03.2017 வரை பொய்ப்புகாருக்கு ஆளாக நேரலாம். அதோடு, எதிர்பார்த்தது கிடைக்காமல் போவது, பணம் பொருள் இழப்பு ஏற்படலாம். மன உறுதியுடன் இந்த காலகட்டத்தை கடக்க வேண்டும். பொதுவில், இந்த ராகு கேது மாற்றம் சோதனைகளைக் கொடுத்தாலும் சாதனை படைக்கும் வாய்ப்புகளையும் அளிக்கும்.