சுருதி
சுருதி

 
கோவை:
திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி,  இளைஞரிடம்  ரூ.50 லட்சத்தை  இளம்பெண் மோசடி செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்லை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்  . பெங்களூருவில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.  தனது திருமணத்துக்கு பெண் தேடி, திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து இருந்தார். அப்போது கோவையைச் சேர்ந்த சுருதி (21) என்பவர் தகவல் மையம் மூலம் சந்தோஷ் குமாருக்கு அறிமுகம் ஆனார். அவர் சந்தோஷ்குமாரை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் பேசி வந்திருக்கிறார்கள்.
கோவை அவினாசிரோடு நவஇந்தியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த சுருதியின் வீட்டுக்கு சந்தோஷ்குமார் வந்தார். அங்கு இருந்த சுருதி, சித்ரா என்ற பெண்ணை தனது தாயார் என்று சந்தோஷ்குமாருக்கு அறிமுகம் செய்தார்.  பின்னர் அவரிடம்சுருதியை திருமணம் செய்து வைக்கும்படியும் சந்தோஷ்குமார் கேட்டார். இதை தனது பெற்றோரிடமும் சந்தோஷ்குமார் தெரிவித்தார்.
இதையடுத்து சந்தோஷ்குமாரும் சுருதியும் பழகி வந்துள்ளனர். இந்த சமயத்தில்   சந்தோஷ்குமாரிடம், விலை உயர்ந்த  நகைகள், பட்டுச்சேலைகள், அழகுசாதன பொருட்களை கேட்டு வாங்கியிருக்கிறார் சுருதி.  சுமார் ரூ.43½ லட்சம் வரை சந்தோஷ் செலவு செய்திருக்கிறார்.
இந்த நிலையில்  சுருதி திடீர் என்று மாயமாகிவிட்டார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சந்தோஷ்குமார், இதுகுறித்து கோவை நகர குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.
இன்னொரு புகார்
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் சிவசக்தி நகரைச் சேர்ந்த அருள்குமரகுரு ராஜா  என்பவரும் சுருதி மீது கோவை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.  பெங்களூருவில் கணினி என்ஜினீயராக மாதம் ரூ.1½ லட்சம் சம்பளத்தில் பணி புரிந்து வருபவர்  இவரிடமும் திருமண ஆசைகாட்டி சுமார்  ஐம்பது லட்ச ரூபாயை சுருதி ஏமாற்றியிருக்கிறார்.
இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் “சுருதியின் அழகான தோற்றம், இனிமையான பேச்சு ஆகியவற்றில் இந்த இளைஞர்கள் ஏமாந்திருக்கிறார்கள்  சுருதி மீது தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.
ஆரம்பகட்ட விசாரணையில் நடிகை ஆகும் ஆசையில் இருந்திருக்கிறார் சுருதி என்பது தெரியவந்திருக்கிறது.  அவருக்கு சில சினிமா தொடர்புகளும் இருப்பது தெரிகிறது.  இவர் தனது தந்தை பிரசன்ன வெங்கடேசன் என்றும், தாய் சித்ரா என்றும் கூறிஇருக்கிறார்.  உண்மையிலேயே அவர்கள் இவரது பெற்றோரா அல்லது நடிகர்களா என்பது தெரியவில்லை.
சுருதி கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.  ஆனாலும் புதிய வழக்குகளை வைத்து அவரை பிடித்து விசாரணை செய்ய இருக்கிறோம். அப்போது மேலும் பல  அதிர்ச்சிர தகவல்கள் வெளிவரலாம்”  என்று தெரிவிக்கிறார்கள்.