தமிழ் வருட பிறப்பு (சித்திரை 1) வாழ்த்துகள் !

Must read

gods

இவ்வாண்டு 2016-ல் 13.4.2016 அன்று புதன்கிழமை மாலை 7.48 PM மணிக்கு சூரிய பகவான் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குள் பிரவேசிக்கும் சித்திரை மாதத்தில் “துன்முகி வருடம்” பிறக்கிறது.
சிலர் துன்முகி என்றாலே துன்பங்கள் கொடுக்கும் என்று கூறுகிறார்கள் அப்படி அல்ல. கிரக நிலைகளை பொறுத்து பலனை அம்பாள் கொடுக்கிறாள்.
இந்த வருடம் மிதுன இராசி, துலா லக்கினம், புனர்பூசம் நட்சத்திரத்தில் துன்முகி வருடம் பிறப்பதால் நன்மைகளே ஏற்படும்.
துன்முகி வருடம் குறித்த ஜோதிட பொது பலன் பாடல்கள் சில உண்டு.
“மிக்கான துன்முகியில் வேளாண்மை அறுமே
தொக்க மழைபின்னே சொரியுமே-மிக்கான
குச்சரதே சத்திற் குறைதீர வேவிளையும்
அச்சமில்லை வெள்ளை அரிதாம்!”
என்கிற துன்முகி வருடம் குறித்த ஒரு பாடலில், கால மழை தவறிப் பெய்யும் எனவும், விளைச்சல்கள் பாதிக்கப்பட்டாலும் பஞ்சம் வந்துவிடாது என்று குறிப்பிடுகிறது.
துன்முகி வருடம் குறித்து மற்றோரு பாடல்,
“மிக்க துன்முகியில் வெள்ளாண்மை மிகும்”
என்கிறது.
வேளாண்மை அதிகம் இருக்கும் ஆனால் வெண்மையான வஸ்துக்கள் குறைவுண்டாகும் என்றும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது.
எது எப்படி இருந்தாலும் கிரக நிலை என்ன சொல்கிறது?
கணித்து பார்த்த போது, லக்கினத்திற்கு 2-ல் சனி–செவ்வாய், 5-ல் கேது, 6-ல் உச்சம் பெற்ற சுக்கிரன், சப்தமத்தில் புதன்–சூரியன் பாக்கியத்தில் சந்திரன், லாபத்தில் குரு–ராகுவின் கணக்கில் கடைசியாக வருவதும் லாபமே.
மக்களுக்கு மகிழ்ச்சித் தரக் கூடிய அளவிற்கு வாழ்க்கை தரம் உயரும்.
தெய்வ பக்தி அதிகரிக்கும். வெளிநாட்டவர் நம்மை பார்த்து வியக்கும் வண்ணம் நம்நாடு முன்னேறும்.
அரசியலில் புதிய கூட்டணி உருவாகும். தனஸ்தானத்தில் செவ்வாய்–சனி இருப்பதால், ஷேர் மார்கெட் சற்று சிந்திக்க வேண்டிய விஷயமாக இருக்கும்.
உச்சம் பெற்ற சூரியன் வலுவான ஆட்சி அமைய உதவும். எதிரிகளின் பிரச்னை தீரும். அயல்நாட்டு பகை ஒழியும். சுக்கிரன் உச்சம் பெற்றதால், கனமழை உண்டு.
சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்படும். சனி–செவ்வாய் இணைவதால், உலகில் சில இடங்களில் பூகம்பம் ஏற்படலாம். உச்சம் பெற்ற சுக்கிரனால் பெண்களுக்கு நல்ல யோக வருடம்.
( உண்மையை தான் சொல்கிறேன் , பெண்கள் உயருவார்கள் )
சரி, எது எப்படி இருந்தாலும், நாளும்-கோளும் சரியில்லாமல் போனாலும், இறைவனை வணங்கினால் அவனருளால் பாதகங்களும் சாதகமாக மாறும் என்பதே நிஜம்.
இந்த துன்முகி வருடமானது, புதன்கிழமை பிறக்கிறது. அதாவது, பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்லக்கூடிய பொன்னான தினமான புதன்கிழமையில் பிறப்பது விசேஷம்.
அதனால் அனைவருக்கும் பொன்னான வாழ்க்கை அமையும் என்று எதிர்பார்ப்போம்.
சித்திரை துன்முகி வருடப்பிறப்பன்று, அதிகாலையில் கண் விழிக்கும்போது, வினை தீர்க்கும் நாயகனான விநாயகப் பெருமானை பார்த்து வணங்கினால், தீவினைகள் நீங்கி, நல்லவை அனைத்தும் தேடி வரும்.
அதுபோல, இந்த சித்திரை மாதம் புதன்கிழமையன்று பிறப்பதால், ஸ்ரீமகாலஷ்மியை வணங்குங்கள். நாம் செய்யும் நல்ல செயல்களுக்கு என்றும் துணை நின்று, திருமகள் நமக்கு நல்ல திருப்பங்களையும்,வெற்றியையும் தந்தருளுவாள்.
அத்துடன், ஸ்ரீதுர்கை அம்மனையும் வணங்குங்கள். ஸ்ரீமகாலஷ்மிக்கு இனிப்பு அல்லது சர்க்கரையுடன் நெய் கலந்து, உங்கள் இல்லத்தில் இருக்கும் ஸ்ரீமகாலஷ்மியின் படத்தின் முன் வைத்து வணங்கி, தீப ஆராதனை செய்து, அந்த இனிப்பு பிரசாதத்தை உங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து சாப்பிடுங்கள்.
தித்திக்கும் இனிப்பை போல, உங்கள் வாழ்க்கையில் என்றும் இனிமையான சுபநிகழ்ச்சிகள் தடை ஏதுமில்லாமல் நடைப்பெற அருள் புரிவாள் ஸ்ரீலஷ்மிதேவி.
அடுத்ததாக, உங்கள் இஷ்ட தெய்வத்தையும், குலதெய்வத்தையும் வணங்குங்கள்.
இதன் பலனாக, இந்த துன்முகி வருட தமிழ் புத்தாண்டு தினத்திலிருந்து நல்ல மாற்றங்களும், குடும்பம் செழிப்பாகவும், உங்கள் விருப்பங்கள் அனைத்தும் இறைவனின் ஆசியால் இனிதாகவும் நிறைவேறும்.
மொத்தத்தில், இந்த துன்முகி வருடத்தில், துன்பங்கள் மறைந்து இன்பங்கள் பிறக்க ஸ்ரீதுர்காதேவி அருள் புரிய பிராத்தனை செய்யுங்கள். தமிழ் வருட பிறப்பு (சித்திரை 1) வாழ்த்துகள் !

More articles

Latest article