சென்னை

நாளை முதல் தமிழகத்தில் வார இறுதி நாட்களை முன்னிட்டு 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன,

வார இறுதி நாட்களில் தமிழகத்தில்  பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், கூடுதலாகச் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் புதிய ஏற்பாட்டைச் செய்துள்ளது.

வழக்கமான வழித்தடங்களில் இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி நாளை முதல் வார இறுதி நாட்கள் மற்றும் வளர்பிறை முகூர்த்த நாட்களை முன்னிட்டு 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சிறப்புப் பேருந்துகள் திருச்சி, கோவை, மதுரை, நெல்லை, சேலம், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்தும் இயக்கப்பட உள்ளன.

அதாவது தினசரி ஓடும் பேருந்துகளுடன் நாளை 500 பேருந்துகளும், நாளை மறுநாள் 350 பேருந்துகளும், பெங்களூரில் இருந்து பிற இடங்களுக்கு 400 பேருந்துகள் என மொத்தம் 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.