நியூ சோமு வைகோ ஜெ

“இவர் மதி. மு.க.வுக்கு கிடைத்திருக்கிற சொத்து!  சிலர் கட்சியை விட்டு விலகிச்சென்ற வேளையிலும் கழகத்தை கட்டிக்காத்து வருபவர் இவர்” –  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இப்படிக் குறிப்பிட்டது, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு பற்றித்தான்.

கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் தேதி   சோமுவின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டுதான் வைகோ இப்படி உணர்ச்சிகரமாக பேசினார்.

இப்போது அந்த பாலவாக்கம் சோமு, மதிமுகவில் இல்லை.

கடந்த 13ம் தேதி, மதிமுவில் இருந்து விலகி,  கருணாநிதி மற்றும் ஸ்டாலின் முன்னிலையில் குடும்பத்துடன்  திமுகவில் இணைந்துவிட்டார்.

“வரும் சட்டமன்றத் தேர்தலில் மதிமுக  தனி அணியாக நாம் போட்டியிட்டு அதன் மூலம் அ.தி.மு.க.வென்றாலும் பரவாயில்லை. திமுக வெற்றி பெறக்கூடாது” என்று வைகோ கூறியதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்..

இந்த நிலையில் ungalpathrikai.com  இதழுக்காக  பாலவாக்கம் சோமுவிடம்  சில கேள்விகளை முன்வைத்தோம்..

 திமுகவைவிட அதிமுக வெற்றி பெறுவதே மேல் என்று  வைகோ கூறினாரா?

ஆமாம்.. அதைத்தான் திமுகவில் சேர்ந்த அன்றே வெளிப்படையாக கூறிவிட்டேனே. இரண்டு  மாதங்களுக்கு முன் நடந்த ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் “வருகின்ற சட்டமன்ற தேர்தலில்

அ.தி.மு.க. அரசை வீழ்த்த, தி.மு.க.வுடன் நாம் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும்”  என்று வலியுறுத்தினோம். இதனை வைகோ ஏற்றுக் கொண்டார். இதற்கா அறிவிப்பையும்  உரிய நேரத்தில் வெளியிடுவேன் என்றார். .

ஆனால் கடந்த 7 ஆம் தேதி நடந்த  உயர்நிலைக்குழு கூட்டத்தில், “ஐந்து கட்சிகளுடன்  தான் கூட்டணியே தவிர,  தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை.  சூரியன் உதிக்கும் திசை மாறினாலும் என் முடிவில் மாற்றம் இல்லை” என்று வைகோ பேசினார்.

இது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “ஐந்து கட்சி கூட்டணியால்  வாக்குகள் பிரிந்து அ.தி.மு.க. வெற்றி பெற்றுவிடுமே” என்று  நான் கேட்டேன். அதற்கு அவர், “அ.தி.மு.க. வெற்றி பெறட்டும். தி.மு.க.வைவிட அ.தி.மு.க.வே மேல்!”  என்றார்.

வைகோ தலைமையில்தான் மதிமுக இயங்குகிறது. ஆக கட்சிக்கு எது நல்லது என்று சிந்தித்துதானே அவர் முடிவெடுப்பார்.  அதில் உங்களுக்கு என்ன சந்தேகம்?

2001ம் ஆண்டும் இப்படித்தான் திமுகவுடன் நெருங்கி வருவதுபோல வந்து பிறகு விலகினார். 2006ம் ஆண்டும் இப்படித்தான்.  2011 தேர்தலுக்கும் இப்படி நடந்துகொள்கிறாரே என்கிறபோதுதான் எனக்குள் விழிப்புணர்வு வந்தது. சமீபத்தில்கூட திமுகவுடன் நெருக்கமாக இருந்தார் வைகோ. திமுக குடும்ப திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க வந்த தளபதியிடம் அகமகிழ்ந்து பேசினார். தலைவர் கலைஞரின் அக்கா இறந்த போது சென்று ஆழ்ந்த துக்கத்தை வெளிப்படுத்தினார். ராமதாஸ் குடும்ப திருமணத்தின் போதும் தளபதியிடம் பாசம் காட்டினார்.

அது மட்டுமல்ல.. கடந்த ஜூலை மாதம் நடந்த மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், “திமுகவுடன்தான் கூட்டணி. திமுகவினரிடம்  நட்புடன் பழகுங்கள். ஆனால் நான் வெளிப்படையாக அறிவிக்கும்வரை இது பற்றி வெளியில் பேச வேண்டாம்” என்றார். அடுத்த கொஞ்ச காலத்தில் இதற்கு நேர் எதிர்மாறான முடிவை ஏன் இவர் எடுக்க வேண்டும்?

சரி, மதிமுக ஆரம்பித்ததில் இருந்து வைகோவுக்கு நெருக்கமான தளபதியாக  இருந்திருக்கிறீர்கள். வைகோவின் கருத்து தவறு என்றால் அதை வெளிப்படையாக சொல்லலாமே…

திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளவதுதான் கட்சிக்கு நல்லது என்று சொன்னோம். அவர் ஏற்றுக்கொள்ளவில்லையே..! இது மட்டுமா..வாரத்துக்கு இரண்டு போராட்டங்கள் நடத்துகிறார். அதற்காக கட்சிக்காரர்கள்  உழைத்து ஓடாய்த்தேய்கிறார்கள். நானும் 22 வருடங்களாக அவர் பின்னாலேயே ஓடி ஓடி களைத்துவிட்டேன். இனி ஓடுவதற்கு தெம்பு இல்லை.

மக்கள் பிரச்சினைக்காக வைகோ போராட்டங்கள் நடத்துவது  தவறு என்கிறீர்களா?

நிச்சயமா தவறு இல்லை. அரசியல் என்பதே மக்களுக்காக போராடத்தானே…  அதை எப்படி தவறு என்று சொல்ல முடியும்? வைகோ போராடுவதை நான் குறை சொல்லலை. மக்களுக்காக போராடுறார். கடுமையா உழைக்கிறார்.

அதே நேரம் கட்சிக்காரர்களையும் நினைத்துப்பார்க்க வேண்டும். கட்சிக்காரர்களுக்கும் உள்ளாட்சி, சட்டமன்றம் என்றெல்லாம் ஆசை இருக்கும் அல்லவா.  அதை நோக்கிய அவரது பயணம் சரியான வழியில் இல்லை.

அதாவது, அதிகாரத்தைக் கைப்பற்றும் சூட்சமம் வைகோவுக்கு இல்லை என்கிறீர்கள்..

ஆமாம்..   ஆனாலும் வைகோவை குறை சொல்ல விரும்பலை.

திமுக உங்களது தாய்க்கட்சியாக இருந்தாலும், ஈழப்போர் நடந்தபோது துரோகமிழைத்தவர் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி. அந்த கட்சியில் சேரலாமா என்று ஒரு விமர்சனம் இருக்கிறதே..

வைகோ உட்பட அனைவருக்குமே ஈழம் பற்றிய உணர்வு ஏற்பட காரணமே கலைஞரின் எழுத்தும், பேச்சும்தான். இதை யாரும் மறுக்கமுடியாது.  ஆகவே ஈழத்தமிழர் விவகாரத்தில் திமுக துரோகம் இழைத்தது என்பது தவறு.

சரி.. வைகோவின் அதிமுக ஆதரவு  நிலைபாட்டுக்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்,

வைகோவை பொறுத்தவரையில், சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் தி.மு.க.வுக்கு எதிராகவே முடிவு எடுப்பார். என்னை போன்றவர்கள் இதை வெகுநாட்களாக அறியாமல் இருந்து விட்டோம் என்பதுதான் உண்மை.

சரி…அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதிமுகவுக்கு ஆதரவான நிலைபாடுகளை வைகோ எடுக்கிறார் என்கிறீர்கள். அப்படியானால் வைகோவை ஜெயலலிதா மறைமுகமாக நிர்ப்பந்திக்கிறார்  என்கிறீர்களா?

எனக்குத் தெரியாது. நான் அந்த அளவு ஆழத்துக்கு போய் சிந்திக்கலை. மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நடந்ததையும், பிறகு உயர்நிலை கூட்டத்திலும் நடந்ததையும் வெளிப்படையாகச் சொல்லிவிட்டேன். அவ்வளவுதான்.

மதிமுக ஆரம்பித்த காலத்திலிருந்து வைகோவுடன் இருப்பவர் நீங்கள். அவருக்கு நெருக்கமானவர்களில் ஒருவராக அறியப்படுபவர். வைகோவின் மன ஓட்டம் உங்களுக்குத் தெரியாதா?

திமுக வென்றால் தளபதி ஸ்டாலின் முதல்வராகிவிடுவாரோ என்று நினைத்தும் வைகோ இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம். ஆனால் இதுபற்றி வெளிப்படையாக அவர் ஏதும் சொல்லவில்லை.