தனிமரமான த.மா.கா?!

Must read

download
கைகளை இறுக மூடிக்கொண்டிருக்கும் வரைதான் எதிர்பார்ப்பு இருக்கும் என்பார்கள். அரசியலுக்கு இது மிகவும் பொருந்தும்தான். ஆனால் விதிவிலக்கும் உண்டே.
யாருடன் கூட்டணி என்பதைச் சொல்லாமல்  கைகளை இறுக மூடிக்கொண்டிருந்த த.மா.கா. இப்போது தவித்து நிற்கிறது.
வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அ.தி.மு.கவுடன்தான் த.மா.கா கூட்டணி வைக்கும் என்று பரவலாக பேச்சு அடிபட்டது. அதற்கேற்ப, இரு கட்சிகளுக்கிடையே மறைமுக பேச்சுவார்த்தையும் நடந்தது.
அ.தி.மு.க. சார்பாக சிங்கிள் டிஜிட்டில் பேச்சை ஆரம்பித்தார்கள். அதிர்ந்து போன வாசன் தரப்பு, 35 சீட்டுகள் தேவை என்றது. ஆனால் இரு புறம் ஏறி இறங்கி 20 சீட் வரை வந்ததாக தகவல் பரவியது. இந்த நிலையில் அ.தி.மு.க. தரப்பில் இருந்து ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டதாம். அதாவது, த.மா.காவினர், இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்க வேணடும் என்று அ.தி.மு.க. தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
தனி கட்சி துவங்கி அதற்கு அங்கீகாரம் பெற்றுவிட வேண்டும் என்று நினைத்த த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசனுக்கு இது கடும் அதிர்ச்சி அளித்தது. முன்பு இருந்த சைக்கிள் சின்னம் இப்போது இல்லை என்கிற நிலையில், அவசர அவசரமாக, தென்னந்தோப்பு சின்னத்தை வாங்கி அறிமுகப்படுத்தினார்.
ஆனாலும் அ.தி.மு.க. தனது நிபந்தனையிலிருந்து இறங்கவில்லை. ஆகவே தி.மு.க. தரப்பில் பேசிப்பார்க்கலாம் என்று முடிவு செய்தார். கோவை தங்கம் மூலம் இந்த பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்படுகிறது.
தி.மு.க. தரப்பிலும், ஏற்கெனவே தங்கள் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸை தட்டிவைக்க, த.மா.கா. வந்தால் நல்லது என்று திட்டமிடப்பட்டது. ஆகவே இரு கட்சிகளும் மறைமுக பேச்சுவார்த்தையை துவங்கின.
ஆனால் இத் தகவல் அறிந்த காங்கிரஸ், “த.மா.கா. இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்கமாட்டோம். அவர்களுடனேயே கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் விலகிக்கொள்கிறோம்” என்று அதிரடியாகச் சொல்ல..  வேறு வழியின்றி த.மா.கா.வுடனான பேச்சுவார்த்தையை நிறுத்தியது தி.மு.க.
இரு கட்சி கூட்டணிகளிலும் இடமில்லை என்கிற நிலையில்தான் மக்கள் நலக்கூட்டணி தலைவர்களை தொடர்புகொண்டது த.மா.கா தரப்பு. அவர்களும் ஏற்கெனெவே ஆசை ஆசையாய் த.மா.காவை அழைத்தவர்கள்தானே…
ஆனால் ம.ந.கூ. அடங்கியிருக்கும் கேப்டன் கூட்டணிக்கு த.மா.கா வந்தால் சீட் ஒதுக்குவது எப்படி என்கிற பிரச்சினை எழுந்திருக்கிறது. ம.ந.கூட்டணியினர், “ஏற்கெனவே எங்களுக்கு 110 சீட்டுகள்தான் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து த.மா.காவுக்கு சீட் ஒதுக்க வேண்டும் என்று விஜயகாந்த் தரப்பினரிடம் கூற… விஜயகாந்த தரப்பிலிருந்து எதிர்மறையான பதில் கிடைத்திருக்கிறது.  “எங்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் இருந்து ஒரு இடத்தைக்கூட  தர மாட்டோம்” என்று சொல்லப்பட்டுவிட்டதாம்.
ஆகவே மீண்டும் அ.தி.மு.க.வை நாட ஆரம்பித்திருக்கிறது த.மா.காங்கிரஸ்.  நேற்றே வாசன், போயஸ் செல்வார் என்று தகவல் பரவியது. ஆனால் அழைப்பில்லை.
அதே நேரம், “எப்படியும் அ.தி.மு.கவில் இருந்து அழைப்பு வரும்” என்ற நம்பிக்கையும், “வராவிட்டால் என்ன செய்வது” என்ற கவலையிலும் இருக்கிறார்கள் த.மா.காவினர்.
ஆக, தென்னந்தோப்பு சின்னத்தைப் பெற்ற த.மா.கா. இப்போது, “தனிமரமாகிவிடுவோமோ” என்ற அச்சததில் தவித்து நிற்கிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article